search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பெண் டாக்டர் கொலை- நாடு முழுவதும் டாக்டர்கள் 2-வது நாளாக போராட்டம்
    X

    பெண் டாக்டர் கொலை- நாடு முழுவதும் டாக்டர்கள் 2-வது நாளாக போராட்டம்

    • பயிற்சி டாக்டர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
    • விவகாரத்தில் மேற்கு வங்காள அரசியலில் தொடர்ந்து பரபரப்பான நிலை காணப்படுகிறது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையான ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.

    இந்த குற்றத்தில் தொடர்புடைய சஞ்சய்ராய் என்பவரை கொல்கத்தா போலீசார் கைது செய்துள்ளனர். இவர் கொல்கத்தா போலீசுக்கு உதவும் நண்பர்கள் குழுவில் உறுப்பினராக இருந்தவர். இவருக்கு மேற்கு வங்காள அரசு மாதம் ரூ.12 ஆயிரம் சம்பளம் வழங்கி வந்தது.

    இவருக்கு சமீபத்தில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் உள்ள போலீஸ் நிலையத்தில் போலீசாருக்கு உதவ பணி வழங்கப்பட்டது. இதனால் அவர் அந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சகஜமாக அனைத்து இடங்களுக்கும் சென்று வந்தார். அனைவரிடமும் இவர் தன்னை போலீஸ் என்றே அறிமுகம் செய்திருந்தார்.

    போலீஸ் என்று சொல்லி மிரட்டி இவர் பயிற்சி பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. பெண் பயிற்சி டாக்டர் கடுமையாக போராடியதால் அவரது கழுத்தை நெரித்து சஞ்சய் ராய் கொலை செய்திருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

    பெண் பயிற்சி டாக்டர் கொல்லப்பட்ட பிறகு அவருடன் சஞ்சய்ராய் உல்லாசமாக இருந்துள்ளான். வாக்குமூலத்திலும் இதை அவன் தெரிவித்து உள்ளான்.

    அவனிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவன் மிகவும் அமைதியாக காணப்பட்டான். என்னை தூக்கில் போடுங்கள் என்று அவன் மீண்டும் மீண்டும் சொல்லிய படி இருக்கிறான். பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இடத்தில் இருந்து அவனது செல்போன் மற்றும் புளுடூத் கண்டு எடுக்கப்பட்டுள்ளது.

    என்றாலும் பெண் பயிற்சி டாக்டர் தற்கொலை செய்து கொண்டதாக அந்த மருத்துவமனையில் இருந்து 3 டாக்டர்கள் போனில் தகவல் தெரிவித்ததாக தெரிய வந்துள்ளது. அவர்களை விசாரணைக்கு வருமாறு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். கைதான சஞ்சய்ராயுடன் அந்த மருத்துவமனையில் உள்ள மேலும் சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கக்கோரி கொல்கத்தா டாக்டர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மேற்குவங்காளத்தில் நோயாளிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    இதற்கிடையே மற்ற மாநிலங்களில் நேற்று டாக்டர்கள் போராட்டம் நடத்தினார்கள். இன்றும் 2-வது நாளாக நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டம் நடந்தது.

    மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று பயிற்சி டாக்டரின் குடும்பத்தினரை சந்தித்து பேசினார். வருகிற ஞாயிற்றுக்கிழமைக்குள் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் போலீசாருக்கு கெடு விதித்துள்ளார். ஆனால் குற்றவாளிகளை திரிணாமுல் காங்கிரஸ் பாதுகாப்பதாக பாஜக குற்றம் சுமத்தி உள்ளது.

    இதற்கு பயிற்சி டாக்டர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முதுநிலை பயிற்சி பெண் டாக்டர் கொலையை அரசியலாக்க வேண்டாம் என்று மாணவர் அமைப்புகளும் எச்சரித்துள்ளன. இந்த விவகாரத்தில் மேற்கு வங்காள அரசியலில் தொடர்ந்து பரபரப்பான நிலை காணப்படுகிறது.

    Next Story
    ×