search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    கனமழை எச்சரிக்கை- 7 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்
    X

    கனமழை எச்சரிக்கை- 7 மாவட்டங்களுக்கு இன்று 'மஞ்சள் அலர்ட்'

    • கேரள மாநிலத்தில் தற்போது பருவமழை தீவிரமடைந்துள்ளது.
    • கடற்கரையோர மக்கள் மற்றும் மீனவர்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த மே மாத இறுதியில் தென் மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியது. அதிலிருந்தே பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் மட்டும் அவ்வப்போது கனமழை கொட்டுகிறது. பலத்தமழை பெய்யும் மாவட்டங்களின் விவரங்களை இந்திய வானிலை ஆய்வு மையம் தினமும் அறிவித்து வருகிறது.

    அதனடிப்படையில் மழை எச்சரிக்கை விடுக்கப்படும் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்கிறது. கேரள மாநிலத்தில் தற்போது பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் அங்கு வருகிற 12-ந்தேதி வரை கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

    மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் வருகிற 9-ந்தேதி வரை கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் வருகிற 12-ந்தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    மேலும் ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களில் 24 மணி நேரத்தல் 64 மில்லிமீட்டர் முதல் 115 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் கேரள கடற்கரை பகுதிகளில் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், கடற்கரையோர மக்கள் மற்றும் மீனவர்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×