search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நீர்வரத்து அதிகரிப்பு- துங்கபத்ரா அணையில் உடைந்த 19-வது மதகு பொருத்தும் பணி நிறுத்தம்
    X

    19-வது மதகு பகுதியில் பொருத்துவதற்கு 60 அடி கொண்ட கேட் உறுப்பு தூண்கள் துங்க பத்ரா அணைக்கு கொண்டு வந்த காட்சி

    நீர்வரத்து அதிகரிப்பு- துங்கபத்ரா அணையில் உடைந்த 19-வது மதகு பொருத்தும் பணி நிறுத்தம்

    • அணையில் இருந்து 60 டி.எம்.சிக்கும் மேல் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
    • வினாடிக்கு 35 ஆயிரத்து 437 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் முனிராபாத் பகுதியில் துங்கபத்ரா அணை உள்ளது. இந்த அணையில் மொத்தம் 32 மதகுகள் உள்ளன. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழையால் கடந்த வாரம் அணை முழு நீர்மட்ட கொள்ளளவான 105 டி.எம்.சி.யை எட்டியது. இந்த நிலையில் நீரின் அழுத்தம் காரணமாக கடந்த 10-ந்தேதி இரவு அணையின் 19-வது மதகு சங்கிலி இணைப்பு உடைந்து நீரில் மதகு அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அணையை பாதுகாக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி அணையின் 32 மதகுகள் வழியாகவும் சுமார் 1 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த 6 நாட்களாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர் இருப்பு குறைந்தது. அணையில் இருந்து 60 டி.எம்.சிக்கும் மேல் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    இதையடுத்து நேற்று முன்தினம் முதல் மதகு பொருத்தும் பணி தொடங்கியது. இதற்காக ஜிண்டால் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 60 அடி அகலம் கொண்ட கேட் உறுப்பு தூண்கள் அணை பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. ராட்சத கிரேன்கள் உதவியுடன் இரும்பு கேட்டின் பாகங்கள் எடுத்து பொருத்தும் பணி இரவு-பகலாக நடைபெற்று வருகிறது. இந்த பணியில் 80-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இதனிடையே அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. வினாடிக்கு 35 ஆயிரத்து 437 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் மதகு பொருத்தும் பணியில் தோய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் கேட் உறுப்பு தூண்கள் மதகு பகுதியில் சரியாக பொருந்தவில்லை. இதனால் கேட் பொருத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு வேறு தூண்கள் கொண்டு வர அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×