search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரள ஜெயில்களில் தாடி வளர்க்க விரும்பும் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
    X

    கேரள ஜெயில்களில் தாடி வளர்க்க விரும்பும் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

    • சிறைகளில் ஒழுக்கத்தை கடைபிடிப்பது முக்கியமானது என்பதால் கைதிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன.
    • 4 மத்திய சிறைகளில் ஆயிரக்கணக்கான தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.

    திருவனந்தபுரம்:

    குற்ற சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு வழக்கில் சம்பந்தப்பட்ட வரக்கூடியவர்களுக்கு சிறைச்சாலைகள் தண்டனை அனுபவிக்கக்கூடிய மற்றும் அவர்கள் திருந்துவதற்கான ஒரு இடமாக திகழ்ந்தாலும், பலருக்கு அது மறுவாழ்வு அழிக்கக்கூடிய இடமாக மாறிவிடுகிறது. அதற்கான வசதிகள் அனைத்து சிறைச்சாலைகளிலும் இருக்கின்றன.

    சிறைகளில் ஒழுக்கத்தை கடைபிடிப்பது முக்கியமானது என்பதால் கைதிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. முக்கியமாக முடி வெட்டுவது, தாடியை ஷேவிங் செய்வது உள்ளிட்டகைளை கைதிகள் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். இப்படிப்பட்ட சூழலில் கேரள ஜெயில்களில் ஏராளமான கைதிகள் தாடியை பெரிதாக வளர்த்து வருகிறார்கள்.

    கேரள மாநிலத்தில் 11 மாவட்ட சிறைகள், 16 துணை சிறைகள், 3 பெண்கள் சிறைகள், 3 திறந்தவெளி சிறைகள், 16 சிறப்பு சிறைகள் இருக்கின்றன. மாநிலத்தில் உள்ள திருச்சூர் விய்யூர், பூஜாப்புரா, கண்ணூர், தவனூர் ஆகிய 4 மத்திய சிறைகளில் ஆயிரக்கணக்கான தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.

    இந்த சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் தான், தாடியை வளர்க்க விரும்புகிறார்கள். அதிலும் தாடியை சவரமே செய்யாமல் மிகவும் நீளமாக வளர்க்கிறார்கள். இதனால் ஒழுக்கம் மற்றும் சுகாதாரம் பற்றிய பல விஷயங்கள் கேரள ஜெயில்களில் கேள்விக்குறியாகி வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    டி.ஐ.ஜி. ரேங்க்கில் உள்ள கேரள மாநிலத்தை சேர்ந்த அதிகாரி கூறியிருப்ப தாவது:-

    கேரள சிறைகள் மற்றும் சீர்திருத்த சேவைகள் விதிகள் 292(1)விதியின் படி ஒரு கைதிக்கு தாடி வளர்க்க உரிமை உள்ளது. இருந்தாலும் மற்ற கைதிகள இதைப்பார்த்து பின்பற்றும் போக்கு கேரள ஜெயில்களில் அதிகரித்து வருகிறது. தாடி வளர்க்க அனுமதிக்கா விட்டால், அவர்கள் தங்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக கூறி போராட்டம் நடத்துகிறார்கள். பின்பு நீதிமன்றத்தை அணுகி தாடி வளர்க்க அனுமதி பெறுகின்றனர். பூஜாப்புரா, விய்யூர், தவனூர், கண்ணூர் ஆகிய மத்திய சிறைகளில் உள்ள கைதிகள் தாடி வளர்க்க அனுமதி கோருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கைதிகள் தாடி வளர்க்கும் விவகாரம் பற்றி திருச்சூரை சேர்ந்த மூத்த ஜெயிலர் கூறும்போது, 'கைதிகள் தங்களின் தாடியை நீளமாக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. முக முடியின் நீளம் பெரும் பாலும் ஒரு மனிதனின் தோற்றத்தை மாற்றும். தாடியின் நீளத்திற்கு பொருந்தக்கூடிய சட்டங்கள் எதுவும் இல்லை. இதனால் கைதிகள் தாடியை நீளமாக வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்' என்றார்.

    மேலும் ஒரு மூத்த அதிகாரி கூறும்போது, 'சபரிமலை யாத்திரை காலம் அல்லது ரம்ஜான் மாதம் போன்ற மத காரணங்களுக்காக சில விதிவிலக்குகளை சிறைகளில் கைதிகளுக்கு அனுமதிக்கிறோம். என்.ஐ.ஏ. வழக்குகளில் தொடர்புடையவர்கள் உள்ளிட்ட ஏராளமான கைதிகள் மத நம்பிக்கைளை சாக்காக வைத்து தாடி வளர்க்கிறார்கள். கைதிகளின் இந்த போக்கு சிறைகளில் ஒழுக்கம் மற்றும் சுகாதாரத்தை பராமரிப்பதில் சிக்கலாக உள்ளது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண சட்டப்படி கடுமையான நடவடிக்கை தேவை. தாடி வளர்க்கும் கைதிகளின் எண்ணிக்கை குறித்து பிரத்யேக பதிவு எதுவும் தற்போது இல்லை' என்றார்.

    சிறைத்துறையை சேர்ந்த மற்றொரு அதிகாரி கூறும்போது, 'சிறைக்கைதிகள் தாடியை பெரிதாக வளர்க்கும் போது மற்ற கைதிகளின் உணவில் முடி உதிர்ந்து மோதல்கள் ஏற்பட்டு பாதுகாப்பு சிக்கல்களை தூண்டலாம். இதனால் இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது அவசியம்' என்றார்.

    Next Story
    ×