search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தெலுங்கானாவில் ராகுல், பிரியங்கா காந்தி இன்றுமுதல்  பிரசாரம்
    X

    தெலுங்கானாவில் ராகுல், பிரியங்கா காந்தி இன்றுமுதல் பிரசாரம்

    • தெலுங்கானாவில் 13-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
    • ரோடு ஷோவில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசுகிறார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் வருகிற 13-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

    தேர்தலுக்கு இன்னும் ஒரு வார காலமே இருப்பதால் அரசியல் கட்சித் தலைவர்கள் தெலுங்கானாவில் நிலவும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் தெலுங்கானாவில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று முதல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

    இன்று நாகர்கர்னூல் தொகுதிக்கு உட்பட்ட கட்வாலியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகின்றனர். அதை தொடர்ந்து அடிலாபாத் தொகுதியின் நிர்மலில் ரோடு ஷோவில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    வருகிற 9-ந் தேதி மீண்டும் தெலுங்கானாவிற்கு வரும் ராகுல் காந்தி கரீம் நகர் மற்றும் மல்காஜ்கிரி ஆகிய தொகுதிகளில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.

    அதே நாளில் பிரியங்கா காந்தி ஜாஹிராபாத் நாடாளுமன்ற தொகுதியின் காமி ரெடியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அதன் பின்னர் செவல்லா நாடாளுமன்ற தொகுதியின் தந்தூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் பேச உள்ளார்.

    இந்த தொகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சந்திரசேகர ராவின் பாரத ராஷ்டிரிய கட்சி வேட்பாளர் ரஞ்சித் ரெட்டி வெற்றி பெற்றார். ரஞ்சித் ரெட்டி பாரத ராஷ்ட்ரிய கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தற்போது காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    10-ந் தேதி மாலை 6 மணிக்கு மேல் பிரியங்கா காந்தி மகபூப் நகர் நாடாளுமன்ற தொகுதியின் ஷாத் நகரில் ரோடு ஷோ மற்றும் பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார்.

    Next Story
    ×