search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தென்மேற்கு பருவமழை தீவிரம்- கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
    X

    தென்மேற்கு பருவமழை தீவிரம்- கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    • கிருஷ்ணராஜ சாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 124.80அடியாகும்.
    • தொடர் மழையின் காரணமாக 2 அணைகளுக்கும் வினாடிக்கு 36 ஆயிரத்து 517 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் முழுவதும் தென்மேற்கு பருவமழை கடந்த 2 நாட்களாக தீவிரம் அடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் கொட்டி வரும் மழை காரணமாக காவிரி, நேத்ராவதி, குமாரதாரா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில் உள்ள கிருஷ்ண ராஜசாகர் அணை மற்றும் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகாவில் உள்ள கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    கிருஷ்ணராஜ சாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 124.80அடியாகும். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 92.80 அடியாக உயர்ந்து காணப்பட்டது. தொடர்ந்து அணைக்கு வினாடிக்கு 18 ஆயிரத்து 644 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 496 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் கபினி அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 84 அடியாகும். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 75,06 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 17 ஆயிரத்து 873 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர் மழையின் காரணமாக 2 அணைகளுக்கும் வினாடிக்கு 36 ஆயிரத்து 517 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. நீர்வரத்து இதே அளவில் நீடித்தால் இன்னும் ஒரு வாரத்தில் 2 அணைகளும் நிரம்பி உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.

    கர்நாடகாவில் பெய்து வரும் மழையின் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பி வரும் நிலையில் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு வெறும் 43 கனஅடி தண்ணீரே வந்து கொண்டு இருக்கிறது. அணையின் நீர்மட்டம் 39.90 அடியாக குறைந்தது. தொடர்ந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்தை விட அதிகளவில் வெளி யேற்றப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    Next Story
    ×