search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அசாமில் 4,074 பேர் மீது வழக்குப்பதிவு: குழந்தை திருமணம் செய்ததாக  3 நாட்களில் 2,273 பேர் கைது
    X

    அசாமில் 4,074 பேர் மீது வழக்குப்பதிவு: குழந்தை திருமணம் செய்ததாக 3 நாட்களில் 2,273 பேர் கைது

    • தேசிய அளவில் குழந்தை திருமண சராசரி 6.8 சதவீதமாக இருந்து வருகிறது. ஆனால் அசாமில் இந்த இது 11.7 சதவீதமாக உள்ளது.
    • 2026-ம் ஆண்டுக்குள் அசாமில் குழந்தை திருமணத்தை முற்றிலும் ஒழிப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.

    கவுகாத்தி:

    வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கடந்த 2019-2020-ம் ஆண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்ட தேசிய குடும்ப நல ஆய்வில் அசாமில் குழந்தை திருமணங்கள் மிக அதிகமாக இருப்பது தெரிய வந்தது.

    தேசிய அளவில் குழந்தை திருமண சராசரி 6.8 சதவீதமாக இருந்து வருகிறது. ஆனால் அசாமில் இந்த இது 11.7 சதவீதமாக உள்ளது. இதனால் அசாமில் அதிகளவில் குழந்தை திருமணங்கள் நடப்பதும், இதன் காரணமாக அதிக குழந்தைகள் இறப்புக்கு முக்கிய காரணமாக இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியது.

    இந்த அறிக்கையை மையமாக கொண்டு அசாமில் குழந்தை திருமணங்களை தடுக்க மாநில அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியது.

    அம்மாநிலத்தில் 2026-ம் ஆண்டுக்குள் அசாமில் குழந்தை திருமணத்தை முற்றிலும் ஒழிப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் அமைச்சரவை கூட்டம் கடந்த 23-ந் தேதி நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து குழந்தை திருமணங்கள் செய்தவர்கள் மீது அடுத்தடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 14 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளை திருமணம் செய்தவர்கள் மீது போக்சோ வழக்கு, 14 முதல் 18 வயதுடைய சிறுமிகளை திருமணம் செய்தவர்கள் மீது குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    அந்த வகையில் கடந்த 15 நாட்களில் மட்டும் 4 ஆயிரத்து 74 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், இதுதொடர்பாக கடந்த 3 நாட்களில் மட்டும் 2,273 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் திருமணம் செய்து வைத்த மத குருமார்கள் 51 பேர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாமில் பல்வேறு இடங்களில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் கணவன்மார்களை கைது செய்ததால் குடும்பத்தை நடத்த வருமானம் இல்லை எனக்கூறி இளம் பெண்கள் பலர் தங்களது குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சில இடங்களில் போலீஸ் நிலையங்களை முற்றுகையிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் ஐதராபாத் எம்.பி.யும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவருமான அசாதுதீன் ஓவைசி அளித்த பேட்டியில், அசாம் அரசின் இந்த நடவடிக்கையை சாடி உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், திருமணம் செய்து கொண்ட பெண்களின் நிலை என்ன? அவர்களை யார் கவனித்து கொள்வார்கள்? 4 ஆயிரம் வழக்குகளை அசாம் அரசு பதிவு செய்துள்ளது. அவர்கள் ஏன் புதிய பள்ளிகளை திறப்பது இல்லை? அசாமில் உள்ள பா.ஜனதா அரசு முஸ்லீம்களுக்கு எதிராக பாரபட்சமாக செயல்படுகிறது.

    மேல் அசாமில் உள்ள நிலம் இல்லா மக்களுக்கு இலவச நிலங்களை கொடுக்கின்றனர். ஆனால் கீழ் அசாமில் உள்ள மக்களுக்கு இந்த சலுகை வழங்கப்படவில்லை என்றார்.

    இந்தநிலையில் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா கூறுகையில், குழந்தை திருமண தடுப்பு நடவடிக்கையில் பின்வாங்க போவதில்லை. பிற்போக்கு நடைமுறையான குழந்தை திருமணங்களை தடுக்கும் 5 ஆண்டு நடவடிக்கைகளில் ஒரு பகுதி இது ஆகும். 2026-ம் ஆண்டுக்குள் மாநிலத்தில் குழந்தை திருமணத்தை முற்றிலும் ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    குழந்தை திருமணத்தில் இருந்து லட்சக்கணக்கான 19 வயதிற்குட்பட்ட சிறுமிகளை காப்பாற்றவும், இந்த தலைமுறையை துன்பத்தில் இருந்து காப்பாற்றவும் குழந்தை திருமணத்திற்கு எதிரான நடவடிக்கை தொடரும். அனுதாபம் என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை. அசாமில் குழந்தை திருமணங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றார்.

    Next Story
    ×