search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நித்யானந்தா கையெழுத்திட்ட கைலாசாவுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்த அமெரிக்க நகரம்
    X

    நித்யானந்தா கையெழுத்திட்ட கைலாசாவுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்த அமெரிக்க நகரம்

    • நித்யானந்தா தரப்பிற்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
    • ஐ.நா.சபையில் கைலாசா பிரதி நிதிகள் பேசிய உரை ஏற்றுக் கொள்ளப்படாது என ஐ.நா. அதிகாரிகள் அறிவித்தனர்.

    புதுடெல்லி:

    கர்நாடகா, குஜராத்தில் வழக்குகளில் தேடப்படும் சாமியார் நித்யானந்தா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடு தப்பி ஓடினார்.

    அவர் தென் அமெரிக்க நாடான ஈக்வடார் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி அதற்கு கைலாசா நாடு என பெயர் சூட்டி கொண்டார். மேலும் அந்த நாட்டுக்கு என தனி பாஸ்போர்ட், ரூபாய், நாணயங்கள் உள்ளிட்டவற்றையும் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

    தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள நேவார்க் நகரம் உள்ளிட்ட சில வெளிநாடுகளில் உள்ள முக்கிய நகரங்களுடன் கைலாசா நாடு வர்த்தக ரீதியாக ஒப்பந்தங்களை செய்வது போன்று நித்யானந்தாவின் கையெழுத்துடன் கூடிய புகைப்படங்களை கைலாசாவில் அதிகாரபூர்வ இணைய தள பக்கத்தில் வெளியிட்டனர்.

    மேலும் கைலாசா நாட்டிற்கு அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் அளித்ததாகவும், கைலாசாவின் அதிகாரபூர்வ இணைய தளத்தில் தகவல்களை வெளியிட்டனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. சபை மாநாட்டில் கைலாசா சார்பில் சில பெண் பிரதிநிதிகள் பங்கேற்று பேசினர். குறிப்பாக கைலாசாவில் ஐ.நா. தூதர் விஜய பிரியா பேசிய பேச்சுக்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. இதைத் தொடர்ந்து ஐ.நா.சபையில் கைலாசா பிரதி நிதிகள் பேசிய உரை ஏற்றுக் கொள்ளப்படாது என ஐ.நா. அதிகாரிகள் அறிவித்தனர்.

    ஏற்கனவே கைலாசா என்ற தனி நாடு இருக்கிறதா என இதுவரை அதிகார பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. கற்பனையாக ஒரு நாடு இருப்பதாக நித்யானந்தா கூறி வருவதாக சர்ச்சைகள் எழுந்துள்ளது.

    இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையிலும் கைலாசாவின் பிரதிநிதிகள் பேச்சு ஏற்றுக் கொள்ளப்படாது என அறிவித்ததது நித்யானந்தா தரப்பிற்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள நேவார்க் நகரம் கைலாசாவுடன் செய்திருந்த ஒப்பந்தத்தையும் ரத்து செய்து உள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் 'சிஸ்டர் சிட்டிஸ் இன்டர்நேஷனல்' என்ற அரசு சாரா அமைப்பு உலக அளவில் இரு நகரங்களிடையே சமூக கலாச்சார பிணப்பை ஏற்படுத்தும் வகையில் ஒப்பந்தங்கள் செய்வதற்கு உதவுகிறது.

    இந்த அமைப்பின் மூலமாக நேவார்க் நகரம் கைலாசாவுடன் கடந்த ஜனவரி 12-ந்தேதி ஒப்பந்தம் செய்திருந்தது. இந்நிலையில் தான் கைலாசா நாடு அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கியதால் அந்த நாட்டுடன் செய்த ஒப்பந்தத்தை ரத்து செய்யும் தீர்மானம் நேவார்க் நகர கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    கற்பனையான நாட்டை சுற்றியுள்ள ஏமாற்றும் சூழ்நிலைகளை மேற்கோள் காட்டியது மற்றும் ஒப்பந்தம் செய்தது வருந்தத்தக்கது என்று நேவார்க் நகர நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×