search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அசோக் கெலாட் மீது சோனியா காந்தி கடும் அதிருப்தி- ராஜஸ்தான் பிரச்சினைக்கு தீர்வு காண இன்றும் ஆலோசனை
    X

    அசோக் கெலாட் மீது சோனியா காந்தி கடும் அதிருப்தி- ராஜஸ்தான் பிரச்சினைக்கு தீர்வு காண இன்றும் ஆலோசனை

    • புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்வதில் ராஜஸ்தானில் தொடர்ந்து குழப்பம் நிலவுவதால் சோனியா காந்தி அதிருப்தி அடைந்துள்ளார்.
    • இதன் பின்னணியில் அசோக் கெலாட் இருப்பது சோனியா காந்திக்கு அதிருப்தியை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த மாதம் 17-ந்தேதி நடைபெறும் தலைவர் தேர்தலில் சோனியா காந்தி குடும்பத்தினர் போட்டியிடமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து காந்தி குடும்பத்தின் தீவிர விசுவாசியான ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைவர் தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்தார்.

    இதேபோல காங்கிரஸ் கட்சியில் மறுசீரமைப்பு கேட்டு போர்க்கொடி தூக்கியவர்களில் ஒருவரான சசி தரூர் எம்.பி.யும் தலைவர் தேர்தலில் போட்டியிடப்போவதாக கூறினார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே நேரடி போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில் அசோக் கெலாட் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றால், 'ஒருவருக்கு ஒரு பதவி' என்ற கட்சி கொள்கை அடிப்படையில் அவர் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இதையடுத்து அம்மாநிலத்தின் புதிய முதல்வராக சச்சின் பைலட்டை நியமிக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்தது.

    இதுதொடர்பாக கருத்துக்களை கேட்பதற்காக அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    ஆனால் சச்சின் பைலட் முதல்-மந்திரி ஆவதற்கு அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 82 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு வராமல் புறக்கணித்ததோடு, சச்சின் பைலட்டை முதல்-மந்திரியாக்க கூடாது என வலியுறுத்தி தங்கள் பதவியை ராஜினாமா செய்ய போவதாக கூறி ராஜினாமா கடிதங்களை சபாநாயகரிடம் வழங்கியதாக தகவல்கள் வெளியானது.

    காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு பிறகே புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்ய வேண்டும், பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் யாரையும் முதல்வராக்க கூடாது, மேலிட பார்வையாளர்கள் தனித்தனியாக இல்லாமல் எம்.எல்.ஏ.க்களிடம் குழுவாக கருத்து கேட்க வேண்டும் என்ற 3 நிபந்தனைகளையும் அவர்கள் விதித்தனர்.

    கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் இந்த நடவடிக்கையால் காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் மல்லிகார்ஜூன கார்கே, மாநில பொறுப்பாளர் அஜய் மக்கான் ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். எம்.எல்.ஏ.க்களின் இந்த செயலுக்கு பின்னணியில் அசோக் கெலாட் இருக்கலாம் என அவர்கள் கருதுகின்றனர்.

    கட்சி தலைமையின் முடிவுக்கு மாறாக கெலாட் ஆதரவு அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் செயல்படுவதும், கட்சி தலைமைக்கு நிபந்தனை விதிப்பதும் தவறு என மாநில பொறுப்பாளர் அஜய் மக்கான் கூறினார்.

    மேலும் தலைமை கூட்டிய கூட்டத்தில் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தது ஒழுக்கமற்ற நடவடிக்கை என மல்லிகார்ஜூன கார்கேவும், அஜய் மக்கானும் தெரிவித்தனர்.

    இதற்கிடையே ராஜஸ்தான் மாநில அரசியல் குழப்பத்திற்கு நான் காரணம் இல்லை எனவும், எம்.எல்.ஏ.க்கள் எனது பேச்சை கேட்கவில்லை எனவும் மேலிட பார்வையாளர்களிடம் அசோக் கெலாட் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஒரு அறிக்கை தயார் செய்து கட்சி தலைமையிடம் கொடுத்தனர்.

    புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்வதில் ராஜஸ்தானில் தொடர்ந்து குழப்பம் நிலவுவதால் சோனியா காந்தி அதிருப்தி அடைந்துள்ளார். மேலும் இதன் பின்னணியில் அசோக் கெலாட் இருப்பது சோனியா காந்திக்கு அதிருப்தியை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

    முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகி காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வேட்பு மனுதாக்கல் செய்யுமாறு அசோக் கெலாட்டிடம் வலியுறுத்தி கமல் நாத்தை சோனியா காந்தி கேட்டுக்கொண்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. அதே நேரம் அசோக் கெலாட்டிற்கு பதிலாக வேறு சிலரின் பெயரை காங்கிரஸ் தலைமை பரிசீலனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அந்த வகையில் மல்லிகார்ஜூன கார்கே, திக்விஜய் சிங், முகுல் வாஸ்னிக், கமல்நாத், குமாரி செல்ஜா, பவண்குமார் பன்சால் ஆகிய மூத்த தலைவர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. இதில் பவண்குமார் பன்சால் தலைவர் பதவிக்கான வேட்புமனுக்களை வாங்கி சென்றுள்ளார். இதனால் தலைவர் பதவிக்கான வேட்பாளர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே ராஜஸ்தானில் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்வது தொடர்பாக சோனியா காந்தி நேற்று மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    தொடர்ந்து இன்றும் ஆலோசனை நடந்து வருகிறது. எனவே இந்த பிரச்சினைக்கு ஓரிரு நாட்களில் தீர்வு காணப்படும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    Next Story
    ×