search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடகா- மராட்டிய எல்லை பிரச்சினை தணிகிறது: பேருந்து போக்குவரத்து ஆரம்பம்
    X

    கர்நாடகா-மராட்டியம் இடையே பஸ் போக்குவரத்து தொடங்கியது

    கர்நாடகா- மராட்டிய எல்லை பிரச்சினை தணிகிறது: பேருந்து போக்குவரத்து ஆரம்பம்

    • சாவடிகளில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • தற்போது எல்லை பகுதியில் போராட்டங்கள் குறைந்த நிலையில் அமைதியை ஏற்படுத்த போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு.

    கர்நாடகம்- மராட்டிய மாநிலங்கள் இடையே சுமார் 60 ஆண்டுகளாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. மராட்டியத்தில் உள்ள பெலகாவியை மராட்டியம் மாநிலம் சொந்தம் கொண்டாடி வருகிறது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.

    இந்த நிலையில் மராட்டிய மந்திரிகள் 2 பேர் பெலகாவிக்கு வருவதாக அறிவித்ததால் அதை கண்டித்து கர்நாடக ரக்‌ஷணா வேதிகே அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கர்நாடகம்- மராட்டிய எல்லையில் பதற்றமான சூழல் நிலவியது. பெலகாவி மற்றும் எல்லையோர சோதனை சாவடிகளில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    2 மாநில அரசுகளும் பஸ் போக்குவரத்தை நிறுத்தின. பெலகாவி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கோலாப்பூர், நாசிக், மும்பை, புனே மற்றும் பிற நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. எல்லை பிரச்சினையால் ஏற்பட்ட போராட்டங்கள் காரணமாக இந்த பகுதிக்கு பெலகாவியில் இருந்து பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது.

    தற்போது எல்லை பகுதியில் போராட்டங்கள் குறைந்த நிலையில் அமைதியை ஏற்படுத்த போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் கர்நாடக மாநில போக்குவரத்து கழகம் மும்பை மற்றும் பிற பகுதிகளுக்கு மீண்டும் பஸ் போக்குவரத்தை தொடங்கி உள்ளது. அதே வேளையில் மராட்டிய மாநில போக்குவரத்து கழகம் இன்னும் கர்நாடகாவுக்கு பஸ் போக்குவரத்தை தொடங்கவில்லை. இன்று மகராஷ்டிரா போக்குவரத்து கழகமும் போக்குவரத்தை தொடங்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    கர்நாடக மாநில எல்லைப்பகுதியில் இருக்கும் பலர் தொழில் நிமித்தமாக மும்பை உள்ளிட்ட மராட்டிய மாநில பகுதிக்கு செல்வது வழக்கம். தற்போது மீண்டும் பஸ்கள் இயக்கப்படுவதால் இவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மராட்டிய மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் அக்கலகோட்ட தாலுகா பகுதியும் கர்நாடக எல்லை பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இங்குள்ள 11 கிராம ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்யாவிட்டால் கர்நாடகாவுடன் இணைவோம் என்று கூறியிருந்தனர்.

    அதற்கு மராட்டிய அரசு 11 கிராம ஊராட்சிகளை கலைத்து ஊழியர்களை பணியில் இருந்து நீக்குவோம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இதை தொடர்ந்து 11 ஊராட்சிகளில் உள்ள கன்னட மொழி பேசுவோர் மராட்டிய அரசின் எச்சரிக்கைக்கு கண்டனம் தெரிவித்ததோடு எங்கள் பஞ்சாயத்துகள் கலைக்கப்பட்டாலும், ஊழியர்கள் நீக்கப்பட்டாலும் எங்கள் முடிவில் இருந்து பின்வாங்கமாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.

    அவர்கள் மேலும் கூறுகையில், 2002ம் ஆண்டு பெல்காம் மாவட்டம் அதானி தாலுகாவை சேர்ந்த 22 கிராம மக்கள் அடிப்படை வசதிகள் செய்தாலும் இல்லாவிட்டாலும் மராட்டியத்துடன் இணைவோம் என்று கூறியிருந்தனர்.

    அப்போது முதலமைச்சராக இருந்த எஸ்.எம்.கிருஷ்ணா அந்த பகுதிக்கு ரூ.204 கோடி ஒதுக்கி அடிப்படை வசதிகள், நலத்திட்டங்களை செயல்படுத்தினார். அதுபோன்று மராட்டிய அரசு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

    சோலாப்பூர் மாவட்டத்தின் 11 கிராம பஞ்சாயத்துகள் கர்நாடகாவுடன் இணைவதற்கான முடிவை தெரிவித்த நிலையில் இந்த பஞ்சாயத்துகள், சோலாப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மூலம் அரசுக்கு மனு அளித்து, கர்நாடகாவுடன் இணைவதற்கு தடையில்லா கடிதம் வழங்க கோரிக்கை விடுத்திருந்தனர்.

    தற்போது லத்தூர் மாவட்டத்தில் (பிதார் அருகே) உள்ள பொம்பாலியில் வசிப்பவர்களும் தங்கள் கிராமத்தை கர்நாடகாவுடன் இணைக்க மகாராஷ்டிர அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தங்கள் கிராமம் மகாராஷ்டிர அரசால் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அப்பகுதி மக்கள் தாசில்தாரிடம் மனு அளித்தனர்.

    மேலும் மகாராஷ்டிர அரசு தனது கிராமத்தை தொடர்ந்து புறக்கணித்தால், கிராம பஞ்சாயத்து தேர்தலை புறக்கணிப்பதாக கூறியுள்ளனர்.

    இதனிடையே பதற்றமான சூழலிலும் பெலகாவி காவல்துறை 145 பேருந்துகள் மற்றும் நூற்றுக்கணக்கான பயணிகள் வாகனங்களை பெல்காமில் உள்ள சவுதாட்டி யல்லம்மா குடா யாத்ரிகா கேந்திராவிலிருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளது. இதற்கு மகாராஷ்டியா போக்குவரத்து கழகம் நன்றி தெரிவித்து உள்ளது.

    Next Story
    ×