search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மகாராஷ்டிரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடத்த ஏற்பாடு- தேர்தல் ஆணையம் தொடங்கியது
    X

    மகாராஷ்டிரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடத்த ஏற்பாடு- தேர்தல் ஆணையம் தொடங்கியது

    • மகாராஷ்டிரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடத்த ஏற்பாடு- தேர்தல் ஆணையம் தொடங்கியது.
    • மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கும் பணிகளை தலைமை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

    புதுடெல்லி:

    18-வது பாராளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டது. இதில் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. மோடி தொடர்ந்து 3-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றார்.

    இதற்கிடையே மகாராஷ்டிரா, அரியானா, ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர் ஆகிய 4 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடக்கிறது. அக்டோபர் மாதம் முதல் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணிக்கு, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி சவாலாக இருந்தது. இதேபோல 4 மாநில சட்டசபை தேர்தலிலும் பா.ஜனதா கூட்டணிக்கு இந்தியா கூட்டணி கடும் போட்டியை கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் 4 மாநில சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.

    அரியானா சட்டசபையின் பதவி காலம் நவம்பர் 3-ந்தேதியும், மகாராஷ்டிராவில் நவம்பர் 26-ந்தேதியும், ஜார்க்கண்டில் ஜனவரி 5-ந்தேதியும் முடிவடைகிறது. இந்த 3 மாநிலங்களிலும் தேர்தல் தொடர்பான ஆயத்த பணிகளை தொடங்கியுள்ளது.

    இந்த மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கும் பணிகளை தலைமை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

    2024 ஜூலை 1-ந்தேதியை தகுதி தேதியாக வைத்து வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படுகிறது. வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல் பணி வருகிற 25-ந்தேதி தொடங்கும். வாக்காளர் இறுதி பட்டியல் ஆகஸ்டு 20-ந்தேதி வெளியிடப்படும்.

    காஷ்மீரில் 370-வது பிரிவு நீக்கத்துக்கு பிறகு முதல் முறையாக சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. பாராளுமன்ற தேர்தலில் ஜம்மு காஷ்மீர் மக்களின் பெரும் பங்களிப்பை பார்த்து தேர்தல் ஆணையம் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் ஜூலை 1-ந்தேதி, 2024 தகுதி தேதியாக கொண்டு புதுப்பிக்க உத்தரவிட்டுள்ளது.

    ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 30-ந்தேதிக்குள் சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. அமர்நாத் யாத்திரை ஆகஸ்டு 19-ந்தேதி முடிவடைந்து. அதன் பிறகு காஷ்மீர் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.

    Next Story
    ×