search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைந்தது ஏன்?: நடிகை விஜயசாந்தி பேட்டி
    X

    காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைந்தது ஏன்?: நடிகை விஜயசாந்தி பேட்டி

    • கடந்த சட்டசபை தேர்தவில் 19 காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
    • நான் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது 2018 மற்றும் 2019 தேர்தலில் நான் போட்டியிடவில்லை.

    ஐதராபாத்:

    தென்னிந்திய சினிமாக்களில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் நடிகை விஜயசாந்தி. பாரதிய ஜனதாவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய இவர், பின்பு அம்மா தெலுங்கானா என்ற பெயரில தனிக்கட்சியை தொடங்கினார்.

    அதன்பிறகு தனது கட்சியை தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியுடன் இணைத்துக்கொண்டார். பின்பு கடந்த 2014-ம் ஆண்டு அந்த கட்சியில் இருந்து வெளியேறிய நடிகை விஜயசாந்தி, காங்கிரசில் சேர்ந்தார். காங்கிரசில் தொடர்ந்து கட்சி பணியாற்றி வந்த அவர், கடந்த 2020-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் மீண்டும் இணைந்தார்.

    அதில் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்த வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். காங்கிரசில் அவர் தேர்தல் பிரசார குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் நடிகை விஜயசாந்தி காங்கிரசுக்கு சென்றிருப்பது, பாரதிய ஜனதா கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது குறித்து நடிகை விஜயசாந்தி கூறியிருப்பதாவது:-

    எனது அரசியல் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவுக்கு எதிரான போராட்டம். ஆனால் பாரதிய ஜனதாவும், பி.ஆர்.எஸ்.(பாரத் ராஷ்டிர சமிதி)-ம் ரகசிய உறவில் உள்ளனர். அதனால் தான் சந்திரசேகரராவ் ஊழல் செய்ததற்கான ஆதாரங்கள் இருந்தும், மத்திய அரசு அவரிடம் விசாரணை கூட நடத்தவில்லை.

    இப்போது அவருக்கு எதிராக கடுமையாக போராடுவது காங்கிரஸ் மட்டும் தான். அதனால் தான் காங்கிரசில் சேர்ந்துள்ளேன். கடந்த சட்டசபை தேர்தவில் 19 காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். 2019-ல் அவர்களில் 12 பேர் பி.ஆர்.எஸ்.-ல் சேர்ந்தனர்.

    அப்போது சந்திரசேகர ராவுக்கு எதிராக காங்கிரசால் போராட முடியாது என்பது தெரிந்ததால், பாரதிய ஜனதாவில் சேர்ந்தேன். தற்போது ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் பலமாக போராடி வருகிறது.

    நான் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது 2018 மற்றும் 2019 தேர்தலில் நான் போட்டியிடவில்லை. வருகிற லோக்சபா தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து கட்சி தான் முடிவு செய்யும். சந்திரசேகரராவ் என்னை பின்தொடர்ந்து அழிக்க பார்க்கிறார்.

    இவ்வாறு நடிகை விஜயசாந்தி கூறியிருக்கிறார்.

    Next Story
    ×