search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கைலாசா எல்லையற்ற சேவை சார்ந்த நாடு- நித்யானந்தா தரப்பில் விளக்கம்
    X

    கைலாசா எல்லையற்ற சேவை சார்ந்த நாடு- நித்யானந்தா தரப்பில் விளக்கம்

    • கைலாசா சார்பில் பல்வேறு நாடுகளுக்கான பெண் தூதர்களையும் அறிவித்து, அவர்கள் மூலம் அமெரிக்காவில் 30 நகரங்களுடன் ஒப்பந்தங்களை செய்தார்.
    • நித்யானந்தா மீதான பல்வேறு குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை.

    புதுடெல்லி:

    இந்தியாவில் வழக்குகளில் தேடப்படும் சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடிய நிலையில், கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி உள்ளதாக அறிவித்தார்.

    மேலும் அந்நாட்டுக்கென தனி கொடி, பாஸ்போர்ட், ரூபாய் உள்ளிட்டவற்றையும் அறிவித்ததோடு கைலாசா நாட்டில் குடியுரிமை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

    அதோடு கைலாசா சார்பில் பல்வேறு நாடுகளுக்கான பெண் தூதர்களையும் அறிவித்து, அவர்கள் மூலம் அமெரிக்காவில் 30 நகரங்களுடன் ஒப்பந்தங்களை செய்தார்.

    மேலும் கைலாசாவின் பிரதிநிதிகள் ஐ.நா. சபை சார்பில் ஜெனிவாவில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    கைலாசா என்ற நாடு எங்கு இருக்கிறது என இதுவரை உறுதியான தகவல்கள், அறிவிப்புகள் வெளியாகவில்லை. ஆனால் கைலாசா நாட்டுக்கு ஐ.நா. சபை மற்றும் அமெரிக்கா அங்கீகாரம் அளித்துள்ளதாக நித்யானந்தா பிரதிநிதிகள் சமூக வலைதளங்களில் தகவல்களை பரப்பினர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இல்லாத ஒரு நாட்டுடன் அமெரிக்க நகரங்கள் ஒப்பந்தங்கள் செய்தது எப்படி? என்ற கேள்விகள் எழுந்தன. இதைத்தொடர்ந்து கைலாசாவுடன் செய்த ஒப்பந்தத்தை அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள நேவார்க் நகரம் ரத்து செய்தது.

    இதைத்தொடர்ந்து கைலாசாவுடன் ஒப்பந்தம் செய்த அமெரிக்காவின் மற்ற நகரங்களும் அதனை ரத்து செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்த நிலையில் நித்யானந்தாவின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் கைலாசா பற்றிய சில தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் நாங்கள் பண்டைய அறிவொளி பெற்ற இந்து நாகரீக தேசத்தின் மறுமலர்ச்சியாக செயல்படுகிறோம். ஐ.நா. சபையால் அங்கீகரிக்கப்பட்ட, உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் இருந்து செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல் படுகிறோம்.

    எல்லையற்ற சேவை சார்ந்த தேசமான மால்டாவை போன்ற ஒரு நாட்டின் உணர்வில் கைலாசா நிறுவப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதைப்போல நித்யானந்தாவின் பத்திரிகை அலுவலகம் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், மால்டாவை போலவே கைலாசா பல நிறுவனங்கள் மற்றும் பல நாடுகளில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கோவில்கள் மற்றும் மடாலயங்கள் மூலம் செயல்படுகிறது.

    நித்யானந்தா மீதான பல்வேறு குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை. பல மனித உரிமை வழக்கறிஞர்கள் இது தொடர்பாக தங்களது அறிக்கைகளையும், சட்ட கருத்துக்களையும் அளித்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

    நேவார்க் நகரத்துடன் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது குறித்து நித்யானந்தா தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், உலகளாவிய அமைதிக்கான எங்கள் நோக்கத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×