search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருச்சூர் தொகுதியில் காங்கிரஸ் 3-வது இடத்துக்கு சென்றது ஏன்?
    X

    திருச்சூர் தொகுதியில் காங்கிரஸ் 3-வது இடத்துக்கு சென்றது ஏன்?

    • காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியடைய செய்தது.
    • திருச்சூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததற்காக காரணங்கள் குறித்து விசாரணை நடத்த உள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு கடந்த மாதம் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ், பாஜக மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது.

    ராகுல் காந்தி போட்டியிட்ட வயநாடு, சசதரூர் போட்டியிட்ட திருவனந்தபுரம், நடிகர் சுரேஷ்கோபி போட்டியிட்ட திருச்சூர் ஆகிய தொகுதிகள் நட்சத்திர தொகுதிகளாக கருதப்பட்டன. அந்த தொகுதிகளில் எந்த கட்சி வெற்றிபெறும்? என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் இருந்தது.

    இந்தநிலையில் வயநாடு தொகுதியில் ராகுல்காந்தியும், திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூரும், திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபியும் வெற்றி பெற்றனர்.

    கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி 19 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் இந்த முறை 18 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. தன்வசம் இருந்த திருச்சூரில் தொகுதியில் தோல்வியை தழுவியது.

    அந்த தொகுதியில் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட்ட சுனில்குமார் 2-வது இடத்தை பிடித்தார். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட முரளிதரன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியடைய செய்தது. தனது கைவசம் இருந்த தொகுதியை இழந்தது மட்டுமின்றி, 3-வது இடத்துக்கு சென்றது ஏன்? என்ற கேள்வி எழுந்தது.

    தேர்தல் கமிட்டிகள் மற்றும் பூத் கமிட்டிகளை திறம்பட அமைக்கப்படாததும், காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர் முரளிதரனுக்கு எதிராக செயல்பட்டதுமே காங்கிரஸ் கட்சி 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    இது தொடர்பாக ஆய்வு நடத்துவதற்காக 3 பேர் கொண்ட விசாரணை குழுவை கட்சி தலைமை நியமித்துள்ளது. அந்த குழுவில் சித்திக் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. கே.சி.ஜோசப், ஐ.என்.டி.யூ.சி. மாநில தலைவர் சந்திரசேகரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    அவர்கள் தங்களது விசாரணையை நாளை தொடங்குகின்றனர். திருச்சூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததற்காக காரணங்கள் குறித்து விசாரணை நடத்த உள்ளனர். இது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×