search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போலீசார் மடக்கி பிடித்து விசாரிக்கவே அது கடத்தப்பட்ட குழந்தை என்பது உறுதியானது.
    • குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார் கடத்தலில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை மேற் கொண்டனர்.

    புதுச்சேரி லாஸ் பேட்டை நரிகுறவர் காலனியை சேர்ந்த முத்துப்பாண்டி விஜயலட்சுமி கடற்கரையில் பலூன் விற்கும் தொழில் செய்து வருகிறனர். இந்நிலையில் புதுச்சேரி கடற்கரை பகுதியில் விளையாடி கொண்டிருந்த அவர்களது மூன்றரை வயது குழந்தை திடீர் என்று மாயமானது. இது குறித்து விசாரணையில் ஈடுபட்ட போலீசார் சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்த போது, இரண்டு பேர் குழந்தையை கடத்தி ஒரு பெண்ணிடம் கொடுத்து ஆட்டோவில் அனுப்பி வைத்தது தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் விசாரணையை தீவிர படுத்திய நிலையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் நள்ளிரவு நேரத்தில் குழந்தையுடன் ஒரு பெண்ணை கரைக்கால் சாணகரை பகுதியில் இறக்கி விட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காரைக்கால் போலீசார் அந்த பகுதியில் விசாரணை நடத்திய போது பெண் ஒருவர் குழந்தையுடன் தப்பி செல்ல முயற்சித்துள்ளார். அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரிக்கவே அது கடத்தப்பட்ட குழந்தை என்பது உறுதியானது.

    இதனையடுத்து அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். கடத்தல் தொடர்புடைய மேலும் இருவரை புதுச்சேரியில் கைது செய்தனர். பின்னர் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார் கடத்தலில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை மேற் கொண்டனர். கடத்தப்பட்ட குழந்தையை 24 மணி நேரத்திற்குள் மீட்ட போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    • 2 தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றதால், எதிர்கட்சி அந்தஸ்தைக்கூட பெற முடியவில்லை.
    • பல்வேறு தொகுதிகளில் காங்கிரசார் வெளியேறியதால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சுதந்திரம் பெற்ற காலம் முதல் நீண்ட காலமாக காங்கிரஸ்தான் ஆட்சியில் இருந்து வருகிறது.

    இதனால் காங்கிரசின் கோட்டை என புதுவை கருதப்பட்டது. 2016-ம் ஆண்டு தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து 15 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.

    ஆனால் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் 2021-ல் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. முன்னாள் அமைச்சர்கள் உட்பட பலர் தோல்வியை தழுவினர். 2 தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றதால், எதிர்கட்சி அந்தஸ்தைக்கூட பெற முடியவில்லை.

    இதற்கு காங்கிரஸ் ஆட்சிக்காலத்தின் இறுதியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் பிரமுகர்கள் வெளியேறி பா.ஜனதா மற்றும் என்.ஆர். காங்கிரசில் இணைந்தனர்.

    தற்போது பா.ஜனதாவில் உள்ள அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் மட்டுமின்றி முக்கிய பிரபலங்கள் காங்கிரசை சேர்ந்தவர்கள்தான். சமீபத்தில் பா.ஜனதாவின் தலைவராக செல்வகணபதி எம்.பி. பொறுப்பெற்றார்.

    அவர் புதிய நிர்வாகிகளை கட்சியில் நியமித்து வருகிறார். இதில் பா.ஜனதாவுக்கு மாறிய காங்கிரசாருக்கு பதவிகள் கிடைக்கவில்லை. இது அவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    அதேநேரத்தில் பல்வேறு தொகுதிகளில் காங்கிரசார் வெளியேறியதால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இது தேர்தல் பணிகளை பாதிக்கும் என கருதப்படு கிறது.

    இந்த நிலையில் புதுவை மாநில காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள வைத்திலிங்கம் எம்.பி. கட்சியில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதில் ஒரு கட்டமாக கட்சியிலிருந்து வெளியேறிய காங்கிரசாரை மீண்டும் கட்சியில் இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

    இதற்காக பா.ஜனதா, என்.ஆர். காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சி நிர்வாகிகளை காங்கிரஸ் பக்கம் இழுக்க தூது விட்டு வருகின்றனர்.

    • இந்தியா கூட்டணி கட்சிகளில் இடம் பெற்றுள்ள தி.மு.க.வின் தொழிற்சங்கம், தொ.மு.ச. தனியாக ஊர்வலம் நடத்தினர்.
    • புதுவையில் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே ஏற்கனவே மோதல் இருந்து வருகிறது.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் மத்திய அரசை கண்டித்து இன்று ஊர்வலம், மறியல், ஆர்ப்பாட்டம், பந்த் உட்பட பல்வேறு போராட்டங்கள் நடந்தது.

    புதுவையில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் பந்த், ஊர்வலம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் இன்று நடந்தது. இந்த போராட்டம் 2 பிரிவாக நடந்தது. இந்தியா கூட்டணி கட்சிகளில் இடம் பெற்றுள்ள தி.மு.க.வின் தொழிற்சங்கம், தொ.மு.ச. தனியாக ஊர்வலம் நடத்தினர்.

    தாவரவியல் பூங்கா அருகிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு சட்டமன்றம் பின்புறத்தை அடைந்து அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    அதேநேரத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் ஐ.என்.டி.யூ.சி., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஏ.ஐ.டி.யூ.சி., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் சி.ஐ.டி.யூ., எல்.எல்.எப்., எம்.எல்.எப்., ஏ.ஐ.யூ.டி.யூ.சி., ஏ.ஐ.சி.சி.டி.யூ., ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆகிய தொழிற்சங்கங்கள் இணைந்து தனியாக போராட்டம் நடத்தினர்.

    நகர பகுதியில் 3 மணி நேர பந்த், கிராமப்புற பகுதிகளில் கடையடைப்புடன் போராட்டமும் நடத்தினர்.

    நகர பகுதியில் சுப்பையா சிலை அருகிலிருந்து ஊர்வலமாக வந்து மத்திய அரசின் பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டு அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    புதுவையில் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே ஏற்கனவே மோதல் இருந்து வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியை பெறுவதில் காங்கிரசுக்கும், தி.மு.க.வுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.

    தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாததை தொழிற்சங்கங்களின் பிளவு வெளிப்படுத்தி உள்ளது.

    • உணவு பாதுகாப்பு துறையில் பீர்பாட்டில்களை கொடுத்து சோதனை செய்தார்.
    • தனியார் மதுபான விற்பனையாளர், தயாரிப்பு நிறுவனத்தின் மீது நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்தார்.

    புதுச்சேரி:

    புதுவை வேல்ராம்பட்டை சேர்ந்தவர் பீமாராவ். இவர் கடந்த 2021-ம் ஆண்டு லாஸ்பேட்டை கொட்டுப் பாளையத்தில் உள்ள தனியார் மதுக்கடையில் 6 பீர் பாட்டில் வாங்கினார்.

    அதில் 2 பாட்டில் காலாவதியாக இருந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு துறையில் பீர்பாட்டில்களை கொடுத்து சோதனை செய்தார்.

    சோதனை முடிவில் புதுவை மாவட்ட நுகர்வோர் தீர்வு ஆணையத்தில் மனு தாக்கல் செய்து, தனியார் மதுபான விற்பனையாளர், தயாரிப்பு நிறுவனத்தின் மீது நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு அமர்வு தலைவர் முத்துவேல், உறுப்பினர்கள் சுவிதா, ஆறுமுகம் ஆகியோர், மதுபான கடை ரூ.75 ஆயிரத்து 240 இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    • புதுச்சேரி திரையரங்குகளிலும் கழு மரம் படம் வெளியாகிறது.
    • பொது மக்கள் பழங்கால நினைவுகளை அசைபோட்டபடி ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.

    புதுச்சேரி:

    60 ஆண்டுகளுக்கு முன்பு புதிய படங்கள் திரையங்குகளுக்கு வரும்போது பெரிய அளவில் விளம்பரம் செய்யாமல் ஆட்டோ, ரிக்ஷா, மற்றும் மாட்டு வண்டிகளில் போஸ்டர்களை ஒட்டி, துண்டு பிரசுரங்களை கொடுத்து விளம்பரம் செய்வார்கள்.

    அதேபோன்று அந்த கால சினிமா விளம்பரங்களை நினைவு கூறும் வகையில் புதுச்சேரி அரியாங்குப்பத்தில் இன்று கழு மரம் பட குழுவினர் மாட்டு வண்டியில் போஸ்டர்களை ஒட்டி கூம்பு வடிவ குழாய் ஒலிபெருக்கியில் மைக் செட் போட்டு அனைவரையும் படம் பார்க்க கூவி கூவி அழைத்தனர்.

    யுவர் பேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் கொட்டாச்சி இயக்கி நடிக்கும் கழு மரம் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. புதுச்சேரி திரையரங்குகளிலும் கழு மரம் படம் வெளியாகிறது.


    புதுச்சேரி வீதிகளிலும் மாட்டு வண்டிகளில் சென்று துண்டு பிரசுரம் வழங்கியும், ஒலி பெருக்கி மூலமும் படம் பார்க்க வருமாறு அழைப்பு விடுத்தனர்.

    சினிமா போஸ்டர் ஒட்டிய மாட்டு வண்டி வீதி வீதியாக செல்லும்போது அதைப் பார்த்த பொது மக்கள் பழங்கால நினைவுகளை அசைபோட்டபடி ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.

    • 2011-ல் தனிக்கட்சி தொடங்கி ஆட்சியை பிடித்து ரங்கசாமி மீண்டும் முதலமைச்சர் ஆனார்.
    • எந்த கோப்பையும் நான் முடக்கவில்லை. நிர்வாக ரீதியாக சில வழிமுறைகள் உள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் உள்ள சட்டசபை கட்டிடம் 1820-ம் ஆண்டு பிரெஞ்சு ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.

    சட்டசபை, தலைமை செயலகம் தனித்தனியே இருப்பதால் நிர்வாக சிக்கல் ஏற்படுகிறது. இதனால் 2008-ல் காங்கிரஸ் ஆட்சியில் ரங்கசாமி முதலமைச்சராக இருந்தபோது தட்டாஞ்சாவடியில் தலைமை செயலகத்துடன் கூடிய சட்டசபை கட்ட முடிவு செய்யப்பட்டது.

    அப்போது தனது தொகுதிக்கே அனைத்து திட்டங்களையும் கொண்டு செல்கிறார் என ரங்கசாமி மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவர் முதலமைச்சர் பதவியிலிருந்து மாற்றப்பட்டார்.

    2011-ல் தனிக்கட்சி தொடங்கி ஆட்சியை பிடித்து ரங்கசாமி மீண்டும் முதலமைச்சர் ஆனார். அப்போதும் சட்டசபை கட்ட நடவடிக்கை எடுத்தார். ஆனால் நிதி பற்றாக்குறையால் கட்ட முடியவில்லை. தொடர்ந்து வந்த காங்கிரஸ் அரசு திட்டத்தை கைவிட்டது. மீண்டும் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா 2021-ல் ஆட்சி பொறுப்பேற்றதும் சட்டசபை கட்ட தீவிரம் காட்டியது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம், ரூ.612 கோடியில் திட்டம் தயாரித்து கொள்கை அளவில் ஒப்புதல் பெற்றார். இருப்பினும் பணிகள் தொடங்கவில்லை.

    இந்த நிலையில் புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கூறுகையில், பிரதமர், மத்திய அரசு சட்டசபை கட்ட ஒப்புதல் தெரிவித்துவிட்டனர். ஆனால் 5 மாதமாக கவர்னரிடம் கோப்பு உள்ளது. சில விளக்கங்களை அவர் கேட்டுள்ளார். இதனால்தான் பணிகள் முடக்கப்பட்டுள்ளது. கவர்னர் ஒப்புதல் கொடுத்தவுடன் புதிய சட்டசபை கட்டப்படும் என தெரிவித்தார்.

    இதற்கு பதிலளித்து கவர்னர் தமிழிசை கூறுகையில்:-

    புதிய சட்டசபை கட்டும் கோப்பை நான் முடக்கவில்லை. மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்து மீண்டும் அனுப்பினோம். தற்போது மீண்டும் சில கேள்விகள் எழுப்பியுள்ளனர்.

    எந்த கோப்பையும் நான் முடக்கவில்லை. நிர்வாக ரீதியாக சில வழிமுறைகள் உள்ளது. அந்த வழிமுறையில்தான் கோப்பு செல்கிறது என தெரிவித்தார்.

    புதிய சட்டசபை கட்டும் விவகாரத்தில் சபாநாயகர், கவர்னர் இடையே ஏற்பட்டுள்ள மோதல் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஜன்னல்யா திடீரென்று மாயமானாள்.
    • கடற்கரை சாலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி லாஸ்பேட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 26). கடற்கரையில் பலூன் வியாபாரம் செய்கிறார். அவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு ஜன்னல்யா (4) என்ற மகள் உள்ளார்.

    நேற்று முன்தினம் இரவு முத்துப்பாண்டி, விஜயலட்சுமி ஆகியோர் வழக்கம் போல் கடற்கரை சாலையில் நேரு சிலை அருகே பலூன் விற்பனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அவர்கள் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஜன்னல்யா திடீரென்று மாயமானாள். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்த புகாரின் பேரில் பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை யாரேனும் கடத்தி சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர்.

    கடற்கரை சாலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது குழந்தையை, அடையாளம் தெரியாத மர்ம ஆசாமிகள் அழைத்துச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அதை வைத்து அவர்கள் யார்? என தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள், குழந்தையை காரைக்காலுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் நேற்று காரைக்காலுக்கு விரைந்தனர். அப்போது குழந்தையை கடத்தி வைத்திருந்த செல்லா (42) என்ற பெண்ணை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். பின்னர் அவரிடம் இருந்து குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

    இதுபற்றி காரைக்கால் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுச்சேரி கடற்கரையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் குழந்தை கடத்தப்பட்டதாக தகவல் வந்தது. அதன்பின் குழந்தையை கடத்தியவர்கள் காரைக்காலுக்கு கொண்டு வந்ததாக தெரிவித்தனர். உடனே காரைக்கால் போலீசார் பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    அப்போது பஸ் நிலையத்தில் நள்ளிரவு 1.10 மணிக்கு குழந்தையுடன் இறங்கிய நபர்கள், ஆட்டோ பிடித்து லெமர் வீதிக்கு வந்து ஒரு பெண்ணிடம் குழந்தையை ஒப்படைத்து விட்டு சென்றுவிட்டனர்.

    அந்த பெண்ணை நேற்று இரவு 8 மணியளவில் சுற்றி வளைத்து கடத்தப்பட்ட குழந்தையை பத்திரமாக மீட்டோம். அந்த பெண்ணையும் கைது செய்துள்ளோம்.

    அவரிடம் நடத்திய விசாரணையில், குழந்தை கடத்தி வரப்பட்டதை ஒப்புக்கொண்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். குழந்தை கடத்தலில் புதுச்சேரியில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குழந்தையை காரைக்காலுக்கு கடத்தி வந்தவரை தேடி வருகிறோம். குழந்தை கடத்தப்பட்டு 24 மணி நேரத்திற்குள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2024-25-ம் நிதியாண்டிற்கான கூடுதல் செவினங்களும் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பும் உள்ளது.
    • மீதமுள்ள நிதியை முழுமையாக செலவு செய்ய முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

    ஆனால் புதுச்சேரி சட்டசபையில் 2011-ம் ஆண்டு முதல் தொடர்ந்து இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. நடப்பு நிதியாண்டு மார்ச் மாதம் 9-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கிய சட்டசபையில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

    6 மாதத்திற்கு ஒரு முறை சட்டசபையை கூட்ட வேண்டும் என்ற விதிமுறை காரணமாக கடந்த செப்டம்பர் 9-ந்தேதி மீண்டும் சட்டசபை கூட்டப்பட்டது. ஒருநாள் நடந்த கூட்டம் அலுவல்கள் முடிந்து ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் குறுக்கிடுவதால் மார்ச் மாதம் மீண்டும் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. அதேநேரத்தில் அரசின் நிதி செலவினங்களுக்கு ஒப்புதல் பெற வருகிற 22-ந் தேதி காலை 9.45 மணிக்கு புதுவை சட்டசபை கூடுகிறது.

    அன்றைய தினம் நிதி பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி, 2024-25-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அனேகமாக 4 மாதத்திற்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.

    சட்டசபை கூடும் தகவலை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    2024-25-ம் நிதியாண்டுக்கான மானிய திட்ட முன்வரைவு பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமியால் அறிமுகப்படுத்தப்பட்டு கருத்துகை செய்யப்படும். பேரவை முன்வைக்கப்பட வேண்டிய ஏடுகள் இருந்தால், அவற்றை சட்டசபையில் வைக்க அரசு துறைகளுக்கு அறிவுறுத்தப்படும்.

    2024-25-ம் நிதியாண்டிற்கான கூடுதல் செவினங்களும் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பும் உள்ளது. கடந்த நிதியாண்டு பட்ஜெட்டில் 75 சதவீதம் செலவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நிதியை முழுமையாக செலவு செய்ய முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் இந்த நிதியாண்டில் முழுமையாக நிதி செலவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிட்டால் வெற்றி பெறுவது எளிது என கட்சித்தலைமையிடம் வலியுறுத்தியுள்ளனர்.
    • தன்னை விலக்க கட்சியில் ஒரு சிலர் திட்டமிட்டு செயல்படுவதாக நமச்சிவாயம் கருதுகிறார்.

    புதுச்சேரி:

    தேசிய ஜனநாயக கூட்டணியில் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

    என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஆண்டுவிழாவில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவரும், முதல்- அமைச்சருமான ரங்கசாமி, இதனை அறிவித்தார். ஆனால் பா.ஜனதா வேட்பாளர் யார்? என்பதில் தொடர்ந்து இழுபறியாக உள்ளது.

    புதுச்சேரி பா.ஜனதா நிர்வாகிகள், பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிட்டால் வெற்றி பெறுவது எளிது என கட்சித்தலைமையிடம் வலியுறுத்தியுள்ளனர்.

    அதேநேரத்தில் புதுச்சேரி அரசியலில் இருந்து தன்னை விலக்க கட்சியில் ஒரு சிலர் திட்டமிட்டு செயல்படுவதாக நமச்சிவாயம் கருதுகிறார்.

    அதோடு புதுச்சேரி அரசியலில் தொடரவும் அவர் விரும்புகிறார். இதனை கட்சித்தலைமையிடமும் தெரிவித்து, தான்போட்டியிட விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.

    அதேநேரத்தில் கட்சி யாரை வேட்பாளராக நிறுத்தினாலும், அவரை வெற்றி பெறச்செய்வது தனது பொறுப்பு என்றும் கூறியுள்ளார்.

    புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், புதுச்சேரி கவர்னர் தமிழிசை, பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ., மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ. ஆகியோரின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் முதல்-அமைச்சர் ரங்கசாமி ஏற்கும் வேட்பாளரை அறிவிப்பது என பா.ஜனதா கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.

    இதற்காக முதலமைச்சர் ரங்கசாமியுடன் ஆலோசனையிலும் ஈடுபட்டுள்ளனர். தற்போது பரிசீலனையில் உள்ள 4 பேரும் புதுச்சேரியில் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் இல்லை. அதேநேரத்தில் வெளிமாநில வேட்பாளரை நிறுத்துவதற்கு முதல்-அமைச்சர் ரங்க சாமியும், புதுச்சேரி பா.ஜனதாவினரும் சம்மதிப்பார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    இதனால் பா.ஜனதா வேட்பாளர் தேர்வில் தொடர் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் மொத்தம் 36 இடங்களில் நேரலை செய்யப்பட உள்ளது.
    • பக்தர்கள், பொதுமக்கள் ஆதியோகி ரதத்திற்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

    கோவை ஈஷா யோக மையத்தில் மார்ச் 8 ஆம் தேதி நடைபெற இருக்கும் மஹாசிவராத்திரி விழா புதுச்சேரியில் நேரலையாக ஒளிப்பரப்பு செய்யப்பட உள்ளது. இதில் புதுச்சேரியின் முதல்வர் ரங்கசாமி, பொதுப்பணி துறை அமைச்சர், குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

    இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு புதுச்சேரியில் இன்று நடைபெற்றது. இதில் ஈஷாவின் தன்னார்வலரான கேப்டன் பிரதாபன் பங்கேற்று பேசுகையில்:-


    "வருடந்தோரும் மஹாசிவராத்திரி விழா கோவை ஈஷா யோக மையத்தில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த முறை ஈஷாவில் 30 ஆவது ஆண்டாக நடைபெற இருக்கும் மஹாசிவராத்திரி விழா, கோவை தவிர்த்து மற்ற ஊர் மக்களும் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் மொத்தம் 36 இடங்களில் நேரலை செய்யப்பட உள்ளது.

    அந்த வகையில் புதுச்சேரி புஸ்ஸி வீதியில் அமைந்துள்ள கம்பன் கலையரங்கத்தில் வரும் மார்ச் 8 ஆம் தேதி மாலை 6 மணி முதல் மார்ச் 9ஆம் தேதி அதிகாலை 6 மணி வரையில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை செய்யப்பட உள்ளது. இந்த விழாவில் புதுச்சேரியின் முதல்வர் ரங்கசாமி, பொதுப்பணித் துறை அமைச்சர் லக்ஷ்மி நாரயணன் மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கிறார்கள். அதோடு, இதில் பங்கேற்கும் அனைத்து மக்களுக்கும் மஹா அன்னதானமும் வழங்கப்பட இருக்கிறது. மேலும் இதில் பொதுமக்கள் அனைவரும் இலவசமாக கலந்து கொள்ளலாம்.


     அதுமட்டுமின்றி, மஹாசிவராத்திரியை முன்னிட்டு தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், மஹாசிவராத்திரி விழாவிற்கு பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ரத யாத்திரை கோவையில் உள்ள ஆதியோகி முன்பு கடந்த ஜனவரி 5ஆம் தேதி தொடங்கியது. 4 ஆதியோகி ரதங்களை உள்ளடக்கிய இந்த யாத்திரையை பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் தொடங்கி வைத்தார்.

    அங்கிருந்து புறப்பட்ட ஒரு ரதம் காரைக்கால் பகுதியை வந்தடைந்து, அன்றைய நாள் முழுவதும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வலம் வந்தது. இதை தொடர்ந்து , இந்த ரதம் சிதம்பரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் வருகை தந்து பின்னர் திருச்சியை நோக்கி பயணிக்க இருக்கிறது. முன்னதாக, புதுச்சேரி நகரின் பல்வேறு பகுதிகளில் ஜன 16 மற்றும் ஜன 17 ஆம் தேதிகளில் இந்த ரதம் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.

    ரதம் பயணிக்கின்ற ஊர்களில் இருக்கும் பெருமக்கள் இந்த யாத்திரையை வரவேற்று தொடங்கி வைக்கின்றனர். அதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் ஆதியோகி ரதத்திற்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். கோவைக்கு நேரில் வந்து தரிசிக்க முடியாத மக்கள் அவர்கள் இருக்கும் இடத்தின் அருகிலேயே ஆதியோகியை தரிசித்து அருள் பெறுவதற்கு இந்த ரத யாத்திரை சிறந்த வாய்ப்பாக உள்ளது."

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த சந்திப்பின் போது ஈஷா தன்னார்வலர்களான மதிவாணன், பாக்கியசாலி ஆகியோர் உடனிருந்தனர்.

    • பெரிய மாநிலங்களில் எம்.பி. சீட்கள் அதிகளவில் இருக்கும்.
    • புதுவை தொகுதியில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் போட்டியிடவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை ஆளும் கட்சியான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

    பா.ஜனதா வேட்பாளர் யார்? என்பதை கட்சித் தலைமை பரிசீலித்து வருகிறது. மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், புதுச்சேரி கவர்னர் தமிழிசை ஆகியோர் பெயர்கள் உலா வந்தது. இவர்களோடு புதுச்சேரியில் பணியாற்றும் வனத்துறை அதிகாரியின் பெயரும் அடிபட்டது. இவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

    இதேபோல எதிர்கூட்டணியான காங்கிரஸ், தி.மு.க.வில் புதுவை பாராளுமன்ற தொகுதி யாருக்கு என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. காங்கிரசில் ஏற்கனவே சிட்டிங் எம்.பி.யாக உள்ள வைத்திலிங்கம் போட்டியிடுவார் என்ற தகவல் வெளியாகி வருகிறது. முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியும், மேலிடத்தை அணுகி சீட் கேட்டு வருகிறார்.


    இதற்கிடையே தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் பொருளாளர் நாசே.ராமச்சந்திரன் பெயரும் உலா வருகிறது. இவர் புதுவையை அடுத்துள்ள தமிழக பகுதியான வழுதாவூர் அடுத்த கிராமத்தை சேர்ந்தவர். இவர் கல்லூரிகளை நடத்தி வருகிறார். இவர் தனக்கு புதுவை பாராளுமன்ற தொகுதியில் சீட் கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

    பெரிய மாநிலங்களில் எம்.பி. சீட்கள் அதிகளவில் இருக்கும். அங்கு வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும்.

    ஆனால் புதுவையில் ஒரே ஒரு தொகுதிதான். 1971-ல் காங்கிரஸ் சார்பில் மோகன்குமாரமங்கலம் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு புதுவை தொகுதியில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் போட்டியிடவில்லை.

    ஆனால், 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அதிகளவில் தமிழகத்தை சேர்ந்த வி.ஐ.பி.க்கள் பெயர் அடிபடுகிறது.

    • மக்கள் மருந்தகத்தால் ரூ.7 ஆயிரத்து 500 கோடி இந்தியா முழுவதும் மக்களுக்கு மிச்சமாகியுள்ளது.
    • தமிழகத்தில் சபாநாயகர் நடந்து கொண்ட விதம் தவறானது.

    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் மருந்தகத்தை திறந்து வைத்த கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜிப்மரில் தேவையான மருந்துகள் இலவசமாக கிடைக்கிறது. அதிக மருந்துகள் வாங்க கூடுதலாக செலவிடவேண்டியிருந்தது. இப்போது அமைக்கப்பட்டுள்ள மக்கள் மருந்தகம் அவர்களுக்கு உதவும்.

    மக்கள் மருந்தகத்தால் ரூ.7 ஆயிரத்து 500 கோடி இந்தியா முழுவதும் மக்களுக்கு மிச்சமாகியுள்ளது.

    புதுச்சேரியில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு எதுவும் இல்லை. அறிகுறி இருந்தால் உடனடியாக தேவையான நடவடிக்கை எடுப்போம். வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு, வித்தியாசமான காய்ச்சல் அறிகுறி வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என அனைத்து ஆஸ்பத்திரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் சபாநாயகர் நடந்து கொண்ட விதம் தவறானது. அவர் தமிழாக்கத்தை வாசித்து முடித்தவுடன் தேசிய கீதம் பாடியிருக்க வேண்டும். அதுதான் முறை. அதற்கு பிறகு சில கருத்துகளை கூறியிருக்கக்கூடாது. தேசியகீதம் இசைப்பதை கவர்னர் எதிர்பார்த்திருந்தார், நானும் அதைத்தான் எதிர்பார்த்திருந்தேன்.

    தெலுங்கானாவில் கவர்னர் உரையை தராததால், அந்த ஆட்சியை மக்கள் வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். இதை தமிழக சபாநாயகர், அமைச்சர் ரகுபதி ஆகியோர் உணர வேண்டும்.

    தெலுங்கானாவில் புதிய ஆட்சியில் 45 நாட்களில் 2 முறை கவர்னர் உரையை வாசித்துள்ளேன். தமிழக அரசு எதையும் சரியாக செய்வதில்லை. இதற்கு பஸ் ஸ்டாண்ட் மாற்றம் ஒரு உதாரணம்.

    கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிலிருந்து இடமாற்றம் செய்ததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பஸ்களை பயன்படுத்தும் பயணிகளின் பாதிப்பு அதிகரித்துள்ளது.

    கவர்னர் உரையாக இருந்தாலும், எதுவாக இருந்தாலும் நாங்கள் இப்படி தான் செயல்படுவோம், எங்களை யாரும் கேள்வி கேட்க கூடாது என்ற ரீதியில் ஒரு அரசு செயல்படக்கூடாது. எதிலும் தனி கவனம் செலுத்த வேண்டும்.

    கவர்னர் பதவியை நான் ராஜினாமா செய்யப் போவதாக வரும் தகவல்கள் அனைத்தும் வதந்திதான். எம்.பி. வேட்பாளர் தேர்வு இழுபறிக்கோ, தாமதத்துக்கு நான் காரணம் இல்லை.

    பாராளுமன்ற தேர்தல் வர உள்ளது என்பதால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதுதான் முறை. தெலுங்கானாவில் அதைத்தான் செய்துள்ளனர். புதுச்சேரியிலும் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது நடைமுறை தான்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×