search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • தமிழக அரசின் நடவடிக்கையால் புதுச்சேரிக்கு குறைவான பன்னீர் கரும்புகளே வந்துள்ளது.
    • பொங்கல் பண்டிகையில் முக்கியமாக படையலில் வைக்கப்படும் கரும்பு புதுச்சேரியில் விளைவிப்பதில்லை.

    புதுச்சேரி:

    பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (திங்கட் கிழமை) கொண்டாடப்படுகிறது.

    விழாவில் புதுபானையில் பொங்கலிட்டு வழிபடுவது வழக்கம். இதில் பன்னீர் கரும்பு, மஞ்சள் முக்கிய பொருளாக இடம் பெறும். இதுதவிர சர்க்கரைவள்ளி கிழங்கு, பிடிகரணை, நாட்டு பூசணிக்காய் பொங்கல் படையலில் வைக்கப்படும்.

    பொங்கல் பண்டிகையில் முக்கியமாக படையலில் வைக்கப்படும் கரும்பு புதுச்சேரியில் விளைவிப்பதில்லை. புதுவையையொட்டியுள்ள தமிழக பகுதியான கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், புவனகிரி, பண்ருட்டி, பாலுார், கண்டரகோட்டை, குறிஞ்சிப்பாடி. நடுவீரப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விளைவிக்கப்படும் பன்னீர் கரும்பை வரவழைத்து வியாபாரிகள் விற்பனை செய்வார்கள்.

    தற்போது பொங்கல் பண்டிகையொட்டி தமிழகத்தில் ரேஷன் கார்டுகளுக்கும் ரூ. 1000 மற்றும் பன்னீர் கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் வழங்கப்படுகிறது.

    இதற்காக தமிழக அரசு விவசாயிகளிடம் இருந்து பன்னீர் கரும்புகளை நேரடியாக கொள்முதல் செய்கிறது விவசாயிகளிடம் கரும்பின் ஒரு உயரத்தை பொருத்து ரூ.36 வரை விலை நிர்ணயித்து பெறப்படுகிறது. பெரும்பாலான விவசாயிகள் தமிழக அரசு அதிகரிகளிடம் பன்னீர் கரும்புகளை விற்பனை செய்துள்ளனர்.

    தமிழக அரசின் நடவடிக்கையால் புதுச்சேரிக்கு குறைவான பன்னீர் கரும்புகளே வந்துள்ளது. இவை உழவர் சந்தை உள்ளிட்ட சில இடங்களில் விற்பனை செய்யப்பட்டது. அங்கு, ஒரு ஜோடி கரும்பு ரூ.150 முதல் 200-க்கு விற்பனையானது.

    பூக்கள் விலையும் அதிகரித்து இருந்தது. சாமந்தி கிலோ ரூ.140 முதல் ரூ.200 வரையிலும், ரோஜா ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது. காட்டுமல்லி (காக்கட்டான்) கிலோ ரூ. 700, அலரி பூ கிலோ ரூ. 200-க்கும், அரும்பு கிலோ ரூ. 2000-க்கும், குண்டுமல்லி கிலோ ரூ.2500-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    அதுபோல் மஞ்சள் கொத்தும் விலை அதிகரித்தது. மஞ்சள் கொத்து ஒன்று ரூ.20 முதல் ரூ.40 சர்க்கரை வள்ளி கிழங்கு கிலோ ரூ.50, நாட்டு பூசணிக்காய் கிலோ ரூ.30-க்கு, தேங்காய் ரூ. 15 முதல் ரூ.20-க்கும், முழு வாழை இலை ஒன்று ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கரும்புவரத்து குறைவால் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்றும் நாளையும் கூடுதலாக பன்னீர் கரும்புலோடு வரும்போது, விலை குறைய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர். 

    • போட்டியின் நடுவர்களாக ரஷ்யா, துருக்கி, செல்வேனியா, இந்தியாவை சேர்ந்த 7 பேர் செயல்படுகின்றனர்.
    • டிரஸ்சேஜ் என்ற ஒரே பிரிவில் மட்டும் போட்டி நடக்கிறது.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான ஆரோவில்லில் ரெட்எர்த் குதிரையேற்ற பயிற்சி பள்ளி உள்ளது.

    இந்த பள்ளியும், புதுவை அரசின் சுற்றுலாத்துறையும் இணைந்து தேசிய அளவிலான குதிரையேற்ற போட்டிகளை நடத்துகிறது. இந்த போட்டிகள் வருகிற 18-ந் தேதி தொடங்கி 26-ந் தேதி வரை நடக்கிறது. காலை 7 முதல் 11 மணி வரை போட்டிகள் நடைபெறுகிறது.

    இதில் சென்னை, பெங்களூரு, கோவை, ஊட்டி, ஜெய்ப்பூர், மும்பை, ஐதராபாத், டெல்லி, கொல்கத்தா, புதுவை, ஆரோவில்லை சேர்ந்த தலை சிறந்த 40 வீரர்கள் மட்டும் போட்டியில் பங்கேற்கின்றனர்.

    போட்டியின் நடுவர்களாக ரஷ்யா, துருக்கி, செல்வேனியா, இந்தியாவை சேர்ந்த 7 பேர் செயல்படுகின்றனர்.

    டிரஸ்சேஜ் என்ற ஒரே பிரிவில் மட்டும் போட்டி நடக்கிறது. முதலிடம் பெறுபவருக்கு தேசிய சாம்பியன்ஷிப் பரிசு வழங்கப்படும். பரிசளிப்பு விழா வருகிற ஜூன் 26-ந் தேதி நடைபெறும் என குதிரையேற்ற பயிற்சி பள்ளி நிறுவனர் ஜாக்லீன் தெரிவித்துள்ளார்.

    • பணம் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
    • பொங்கல் பரிசு பொருட்களுக்கு பதிலாக பயனாளிகளின் வங்கி கணக்கில் மொத்தம் ரூ.750 வரவு வைக்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிவப்பு ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றும் அப்பணம் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதையடுத்து, ரூ.500 ஏற்கனவே வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்த நிலையில் கூடுதலாக ரூ.250 வழங்க முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

    பொங்கல் பரிசு பொருட்களுக்கு பதிலாக பயனாளிகளின் வங்கி கணக்கில் மொத்தம் ரூ.750 வரவு வைக்கப்படுகிறது.

    • அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடக்கிறது.
    • புதுச்சேரியில் உள்ள அனைத்து கோவில்களிலும் வருகிற 14-ந் தேதி முதல் உரிய முறையில் உழவாரப் பணி செய்ய வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி இந்து சமய நிறுவனங்கள் மற்றும் வக்பு துறை ஆணையர் சிவசங்கரன், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து கோவில் நிர்வாகிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் குறிப்பாக புதுச்சேரியில் உள்ள அனைத்து கோவில்களிலும் வருகிற 14-ந் தேதி முதல் உரிய முறையில் உழவாரப் பணி செய்ய வேண்டும்.

    கோவில் உட்புறம், பிரகாரம், சுற்றுப்புறங்கள், சுவர்கள், துாண்கள் மற்றும் சிலைகளை உரிய வகையில் தூய்மைப்படுத்த வேண்டும்.

    அவ்வாறு தூய்மை செய்யப்பட்ட கோவில் பிரகாரங்கள், சாமி சிலைகளின் புகைப்படங்களை 'வாட்ஸ் ஆப்' மூலம் சமர்ப்பிக்க வேண்டும். வருகிற 22-ந்தேதி நடக்க உள்ள அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியை, பக்தர்கள் அனைவரும் காணொலி மூலம் காண வசதியுள்ள கோவில்களில், அன்று பகல் 12.00 மணி முதல் பகல் 2.30 மணி வரை உச்சி கால பூஜை நடை சாத்தப்பட்டு, பிரகாரம் மற்றும் உள் மண்டபங்களில் கும்பாபிஷேக நிகழ்ச்சியை கண்டு களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஜிப்மரில் உள்ளிருப்பு டாக்டராக பயிற்சி பெற்று வரும் பெண் டாக்டர் ஒருவரின் செல்போனில் கடந்த செப்டம்பர் 29-ந்தேதி ஒரு மெசேஜ் வந்தது.
    • கவர்னர் உத்தரவின்பேரில் ஜிப்மர் நிர்வாகம் தற்போது மெயில் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை கோரிமேட்டில் மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது.

    இங்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் எம்.பி.பி.எஸ். எம்.டி. உள்ளிட்ட படிப்புகளை படித்து வருகின்றனர்.

    ஜிப்மரில் உள்ளிருப்பு டாக்டராக பயிற்சி பெற்று வரும் பெண் டாக்டர் ஒருவரின் செல்போனில் கடந்த செப்டம்பர் 29-ந்தேதி ஒரு மெசேஜ் வந்தது.

    போலியான ஐ.டி. மூலம் வந்த அந்த மெயிலில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பயிற்சி வகுப்பு முடிந்தவுடன் தனது அறையில் தனிமையாக சந்திக்க வேண்டும். இல்லாவிட்டால் பயிற்சி மருத்துவர் படிப்பை முடிக்க முடியாது. தேர்ச்சி பெற்றுள்ள எம்.டி. முதலாம் ஆண்டு படிப்பில் தொடர முடியாது என கூறப்பட்டிருந்தது.

    இதேபோல மேலும் சில மருத்துவ மாணவிகளுக்கும் மெயில் வந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெண் டாக்டர் இதுகுறித்து ஜிப்மர் நிர்வாகம், ஜிப்மரில் உள்ள பெண்கள் வன்கொடுமை பிரிவு, சைபர் கிரைம் ஆகியோருக்கு மெயில் மூலம் புகார் அளித்தார். 3 மாதமாகியும் இந்த புகாரின்மீது நடவடிக்கை இல்லை.

    இதுகுறித்து கவர்னர் தமிழிசைக்கும் அந்த பெண் டாக்டர் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என கவர்னர் தமிழிசை பெண் டாக்டரின் இணையதள பக்கத்தில் உறுதியளித்தார். கவர்னர் உத்தரவின்பேரில் ஜிப்மர் நிர்வாகம் தற்போது அந்த மெயில் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

    • போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர்.
    • புதுவை வழியாக தமிழக பகுதிக்கு செல்லும் அரசு பஸ்கள், புதுவையிலிருந்து இயக்கப்படும் அரசு பஸ்களும் அடங்கும்.

    புதுச்சேரி:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர்.

    இதன்படி இன்று வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. புதுவையை பொறுத்தவரை நகரம், கிராமப்பகுதிகளுக்கு அதிகளவில் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது.

    ஆனால் புதுவையிலிருந்து தமிழக பகுதிக்கு அதிகளவில் தமிழக அரசு பஸ்கள்தான் இயக்கப்படுகிறது. இதில் புதுவை வழியாக தமிழக பகுதிக்கு செல்லும் அரசு பஸ்கள், புதுவையிலிருந்து இயக்கப்படும் அரசு பஸ்களும் அடங்கும்.

    சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், வேளாங்கன்னி, கும்பகோணம், காரைக்கால், கடலூர் பகுதியிலிருந்து சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட நகரங்களுக்கு அதிகளவில் பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் புதுவை பஸ்நிலையம் வந்து பயணிகளை இறக்கி, ஏற்றி செல்கின்றனர்.

    புதுவை உப்பளம் அம்பேத்கார் சாலையில் உள்ள அரசு பணிமனையில் 54 பஸ்களும், மறைமலை அடிகள் சாலையில் உள்ள பணி மனையில் இருந்து 22 பஸ்களும் இயக்கப்படுகிறது. தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் காரணமாக தமிழக பகுதியிலிருந்து மிக குறைந்த எண்ணிக்கையில் ஓரிரு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது.

    இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதனால் தனியார் பஸ்களில் கூட்டம் அலை மோதியது.

    உப்பளத்தில் உள்ள தமிழக அரசு போக்கு வரத்துக்கழக பணிமனை முன்பு தொழிற்சங்கத்தினர் மற்றும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    • நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நீரில் மூழ்கி சாய்ந்தன.
    • விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    புதுச்சேரி:

    வங்க கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழகத்தில் மிதமான முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருந்தது.

    அதன்படி புதுச்சேரியில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்து வருகிறது.

    நேற்று இரவு முதல் கனமழைகொட்டி வருகிறது. இந்த தொடர் மழையினால் புதுவையின் நெற் களஞ்சியமாக திகழும் பாகூர் பகுதியில் சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது.

    மேலும் வில்லியனூர், நெட்டப்பாக்கம், கரிக்கலாம்பாக்கம், பாகூர், ஏம்பலம், கோர்க்காடு பகுதியிலும் சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.

    ஒரு சில வாரங்களில் அறுவடை செய்ய விவசாயிகள் தயாராக இருந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் பெய்து வரும் தொடர் மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளன.

    இதுபோல் திருக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கனமழையின் காரணமாக திருக்கனூர், கைக்கிலப்பட்டு, சந்தை புதுக்குப்பம் உள்ளிட்ட பல கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 300 ஏக்கர் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நீரில் மூழ்கி சாய்ந்தன.

    நெற்பயிர்கள் சேதம் அடைந்து உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • பாடலுக்கு கைதிகள் நடனமாடினர்.
    • நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடகர்கள் கைதிகளோடு செல்பி புகைப்படம் எடுத்தனர்.

    புதுச்சேரி:

    காலாப்பட்டு சிறையில் உள்ள தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் மறுவாழ்வுக்காக சிறை நிர்வாகம் பல்வேறு பயிற்சிகள் மற்றும் மன அழுத்தம் குறைக்க பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

    சமீபத்தில் சிறைக்கு வந்து சென்ற நடிகர் பார்த்திபன், சிறை கைதிகள் மன அழுத்தம் குறைக்க இசை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்தார்.

    அதன்படி, பார்த்திபன் மனித நேய மன்றம் சார்பில், காலாப்பட்டு சிறையில் இசை நிகழ்ச்சி நடந்தது.

    இதில், பாடகர்கள் ஸ்ரீராம், சபிதா, தந்தை பிரியன் உட்பட பலர் கலந்து கொண்டு பாடல் பாடி அசத்தினர். பாடலுக்கு கைதிகள் நடனமாடினர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறை தலைமை கண்காணிப்பாளர் அழகேசன், கண்காணிப்பாளர் பாஸ்கரன் செய்திருந்தனர். பாடகர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடகர்கள் கைதிகளோடு செல்பி புகைப்படம் எடுத்தனர்.

    • தொடர் மழை காரணமாக புதுவையில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி விடுமுறை அறிவித்தார்.
    • வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் பாதியளவு தண்ணீரில் மூழ்கியுள்ளது.

    புதுச்சேரி:

    தென்மேற்கு வங்ககடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுவையில் வருகிற 10-ந் தேதி வரை மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    புதுவையில் நேற்று முன்தினம் சாரல் மழை பெய்தது. நேற்று காலை மழை இல்லை. வானம் மப்பும், மந்தாரமுமாக இருண்டு காணப்பட்டது. நேற்று மாலை முதல் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து விடிய, விடிய மழை பெய்தது. இன்று காலை வெளிச்சம் இன்றி இருண்டு காணப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    தொடர் மழை காரணமாக புதுவையில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி விடுமுறை அறிவித்தார். இதேபோல பல்கலைக் கழகமும் கனமழையை ஒட்டி விடுமுறை அறிவித்தது.

    மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தேங்காய் திட்டு மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க தொடங்கியுள்ளது. நகரையொட்டி உள்ள பாவாணர் நகர், பூமியான்பேட்டை, ஜவஹர் நகர், ரெயின்போ நகர், வெங்கட்டா நகர் பகுதிகளில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

    இப்பகுதிகளில் மட்டும் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது.


    முட்டளவு மழை நீர் தேங்கியதால் மக்கள் வெளியே வரமுடியாமல் அவதிப்பட்டனர். சில வீடுகளுக்கும் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.

    வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் பாதியளவு தண்ணீரில் மூழ்கியுள்ளது. வாய்க்கால்களில் மழைவெள்ளம் நிரம்பி வழிந்தோடுகிறது.

    நகர பகுதியில் உள்ள சில சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகனங்கள் ஓட்டிச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    மழை காரணமாக சாலைகளில் மக்கள் நடமாட்டமே இன்றி வெறிச்சோடியது. மழையினால் புதுவை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

    • பாகூர், காலாப்பட்டு, தவளக்குப்பம், அரியாங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை தொடர்கிறது.
    • ஏற்கனவே மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கேரளா மற்றும் லட்சத்தீவுகளில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் தொடந்து மிதமான மழை பெய்து வருகிறது. பாகூர், காலாப்பட்டு, தவளக்குப்பம், அரியாங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை தொடர்கிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மழை காரணமாக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திற்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    • வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முதியோர்கள் வங்கிக்கு சென்று சலான் நிரப்பி எடுப்பது சிரமம்.
    • புதுச்சேரியைச் சேர்ந்த 62 நபர்களின் வங்கி கணக்கில் இருந்து இந்த கருவி மூலம் பணம் திருடி உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் முதியோர் உதவித்தொகை, விதவை, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு உதவித்தொகைகள் வங்கிகள் மூலம் வழங்கப் படுகிறது.

    வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முதியோர்கள் வங்கிக்கு சென்று சலான் நிரப்பி எடுப்பது சிரமம்.

    இதனால் வங்கிகளில் ஆதார் செயல்படுத்தப்பட்ட பணம் எடுக்கும் முறை உள்ளது. இந்த முறையில் பணம் எடுக்க ஏ.டி. எம்., கார்டு, வங்கி புத்தகம், ஆதார் எண், ஓ.டி.பி. தேவையில்லை. சிறிய ரேடியோ போன்ற வடிவில் கருவி இருக்கும்.

    இந்த கருவியில் கைரேகையை பதிவு செய்தால், அவரது வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து கொள்ளலாம்.

    கிராமப்புறங்களில் இன்றும் இந்த முறையில் முதியோர், விதவை உள்ளிட்டோருக்கு வங்கியில் இருந்து பணம் எடுத்து தரப்படுகிறது.

    தற்போது இணைய வழி மோசடி கும்பல் கடந்த 4 நாட்களில், புதுச்சேரியைச் சேர்ந்த 62 நபர்களின் வங்கி கணக்கில் இருந்து இந்த கருவி மூலம் பணம் திருடி உள்ளனர்.

    பொதுமக்கள் சிம்கார்டு வாங்கும் போது ஆதார் கார்டை புதுப்பிக்கும் போது, சொத்து வாங்க, விற்கும்போது பத்திர பதிவு அலுவலகத்தில் கைரேகை பதிவுகளை பயன்படுத்துவர். அந்த கைரேகை பதிவுகளை, அதே போன்ற கைரேகையை சிலிக்கான் பதிவு மூலம் பிரதி எடுத்து, ஒ.டி.பி., இன்றி வங்கி கணக்கில் இருந்து மோசடி கும்பல் பணத்தை எடுக்கின்றனர்.

    இந்த முறையில் பணம் எடுக்கும் மோசடியை தடுக்கும் முறையை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ளனர்.

    • வரி வசூலில் முறைகேடு நடப்பதாக சென்னையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு புகார் வந்தது.
    • விசாரணையையொட்டி வணிகவரித்துறை அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது.

    புதுச்சேரி:

    புதுவை 100 அடி சாலையில் வணிக வரித்துறை அலுவலகம் உள்ளது.

    இங்குள்ள அதிகாரிகள் புதுவையில் உள்ள தொழிற்சாலைகள், வணிகர்கள், வர்த்தக நிறுவனங்களிடம் வரி வசூலிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இங்கு வரி வசூலில் முறைகேடு நடப்பதாக சென்னையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு புகார் வந்தது.

    இந்த புகாரின் அடிப்படையில் சென்னையை சேர்ந்த சி.பி.ஐ. அதிகாரிகள் 3 பேர் நேற்று இரவு 8 மணி முதல் வணிகவரித்துறை அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இன்று 2-வது நாளாக சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. ஒரு பெண் அதிகாரி உள்ளிட்ட 3 அதிகாரிகளிடம் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சில ஆவணங்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். விசாரணையையொட்டி வணிகவரித்துறை அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. அலுவலகத்துக்குள் யாரையும் பாதுகாவலர்கள் அனுமதிக்கவில்லை.

    இன்று மதியம் 12 மணியளவில் ஒரு கார் வந்தது. அதில் முகத்தை மூடிய ஒரு நபரை அலுவலகத்துக்குள் சி.பி.ஐ.அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். வணிகவரித்துறை அலுவலகத்தில் விசாரணை செய்யப்பட்ட அதிகாரிகள் அளித்த தகவலின்பேரில் அந்த நபரை அழைத்து வந்ததாக தெரிகிறது.

    தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×