search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • ஒரு அரசாங்கம், மற்றொரு அரசாங்கத்துக்கு கொடுக்கின்ற பணத்தை தடுப்பதற்கு எந்தவித வாய்ப்பும் இல்லை.
    • திருச்சியில் பிரதமர் பேசும் போது, முதல் வார்த்தையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களோடு இருக்கிறேன் என்றார்.

    புதுச்சேரி:

    மத்திய அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி முதலியார்பேட்டை போலீஸ் நிலையம் அருகே நேற்று நடந்தது.

    நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு மத்திய அரசு திட்ட பயனாளர்களுடன் கலந்துரையாடி நலத்திட்டங்களை வழங்கினார்.

    அதைத் தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கக்கூடாது.

    ஏனென்றால் இது மக்களுக்காக மத்திய அரசு கொண்டு வந்த திட்டமாகும். ரூ.1000 கூட செலவு செய்ய முடியாத ஒரு குடும்ப தலைவர் விபத்தில் சிக்கிய போது ஆயூஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சம் தொகையினால் காப்பற்றப்பட்டுள்ளார். இதனை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு பெண் கூறினார். இது பல லட்சம் மக்களுடைய உணர்வாகும். எனவே நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் எம்.எல்.ஏ.க்களுக்கு பாராட்டுக்கள்.

    மத்திய அரசுக்கு எதிரான கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களாக இருந்தாலும் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் வந்து கலந்து கொள்ள வேண்டும்.

    இதை அரசியலாக பார்க்காமல் அவசியமாக பார்க்க வேண்டும். ஒரு அரசாங்கம், மற்றொரு அரசாங்கத்துக்கு கொடுக்கின்ற பணத்தை தடுப்பதற்கு எந்தவித வாய்ப்பும் இல்லை. அவர்கள் நேரடியாக கணக்கு வைத்துள்ளனர்.

    ஆகவே தமிழக நிதி தொடர்பாக மத்திய நிதி மந்திரி வெளிப்படையாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தமிழக அமைச்சர் உதயநிதி, பிரதமரை பார்க்கிறார். மறுநாள் காலையில் ஒரு நாளிதழில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து கட்டுரை எழுதுகின்றனர்.

    குஜராத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது பிரதமர் உடனே சென்றார் என்கிறார்.

    அப்போது குஜராத் முதல்-மந்திரி வெள்ளம் பாதித்த பகுதியில் மக்களோடு இருந்தார். ஆனால் தமிழகத்தில் வெள்ளம் பாதித்த போது முதலமைச்சர் எங்கே இருந்தார் என்று எல்லோருக்கும் தெரியும். முதலமைச்சரே அங்கு செல்லவில்லை. ஆனால் பிரதமர் மட்டும் வரவில்லை என்று குறை கூறுகின்றனர்.

    திருச்சியில் பிரதமர் பேசும் போது, முதல் வார்த்தையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களோடு இருக்கிறேன் என்றார்.

    புதுச்சேரியில் நல்ல கலாசாரம் தான் இருக்க வேண்டும். வெடிகுண்டு கலாசாரம் இருக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கட்டப்பட்ட விடுதி கட்டிடம், நீதிபதிகள் விடுதி ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
    • கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளதால் விரைவில் கவர்னர் மாளிகை இடம்மாறும் என தெரிகிறது.

    புதுச்சேரி:

    புதுவை கடற்கரை சாலையை ஒட்டியுள்ள 200 ஆண்டுகால பழமையான பிரெஞ்சு கட்டிடத்தில் கவர்னர் மாளிகை செயல்பட்டு வருகிறது.

    பழமையான பாரம்பரிய கட்டிடம் 2 நூற்றாண்டுகளை கடந்து விட்டதால் சேதம் அடைந்தது. இதை அவ்வப்போது சீரமைப்பு செய்து தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் கவர்னர் மாளிகையின் சில பகுதிகளின் மேல்பகுதிகள் இரும்பு கம்பிகள் மூலம் முட்டுக்கொடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மாளிகையை காலி செய்தால்தான் முழுமையாக சீரமைக்க முடியும் என அரசின் பொதுப் பணித்துறை தெரிவித்தது. இதையடுத்து கவர்னர் மாளிகையை இடமாற்றம் செய்ய புதிய இடங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

    கடற்கரை சாலையில் பழமை மாறாமல் புதிதாக கட்டப்பட்ட மேரிஹால், பழைய சாராய ஆலையில் கட்டப்பட்ட விடுதி கட்டிடம், நீதிபதிகள் விடுதி ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

    இதுதொடர்பான கோப்பும் கவர்னர் தமிழிசை ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில் கவர்னர் மாளிகையை இடமாற்றம் செய்ய கவர்னர் தமிழிசை ஒப்புதல் தெரிவித்துள்ளார். இந்த 3 இடத்தில் எந்த கட்டிடத்தை அவர் தேர்வு செய்துள்ளார் என்ற விவரம் வெளியிடப் படவில்லை.

    இருப்பினும் கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளதால் விரைவில் கவர்னர் மாளிகை இடம்மாறும் என தெரிகிறது.

    • உடல்நலமும், மனநலமும் நன்றாக இருந்தால் வாழ்வில் வெற்றி பெற முடியும்.
    • சுற்றுலாத் துறை சார்பில் 29-வது அகில உலக யோகா திருவிழா கடற்கரை சாலையில் நடை பெற்று வருகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு சுற்றுலாத் துறை சார்பில் 29-வது அகில உலக யோகா திருவிழா கடற்கரை சாலையில் நடை பெற்று வருகிறது.

    இதன் தொடக்க விழாவிற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    யோகா என்பது மனதும், உடலும் ஒருமைப்பட்டு செயலாற்றுவது ஆகும். உடல்நலமும், மனநலமும் நன்றாக இருந்தால் வாழ்வில் வெற்றி பெற முடியும். யோகாசனம் செய்யும் போது மூளைக்கான ரத்த ஓட்டம் அதிகமாக இருக் கும்.

    மூளையில் உள்ள செல்கள் உற்சாகமாக இருக்கும். அதனால் குழந்தைகள் யோகா செய்வது மிகமிக முக்கியம். தினமும் யோகா செய்தால் மனிதனுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பே இல்லை. அந்தளவுக்கு யோகா நமது உடலையும், மனதையும் மிகத் தெளிவாக எடுத்துச்செல்கிறது.

    நம்மை அமைதியாக வைக்கிறது. நம் நாட்டில் செய்த யோகா கலையை இன்று உலகம் முழுவதும் செய்கிறார்கள் என்றால் அதற்கு இந்தியா பெருமைப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    யோகா விழாவில் நாடு முழுவதிலும் இருந்து 600 யோகா கலைஞர்கள் பங்கேற்று செயல்விளக்கம் அளித்தனர்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் முகநூல் பக்கம் முடக்கப்பட்டு, பின்னர் சைபர் கிரைம் போலீசாரால் மீட்கப்பட்டது.
    • திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காரைக்கால்:

    காரைக்கால் திருநள்ளாறில் பிரசித்திபெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு என்று தனியாக முகநூல் (பேஸ்புக்) பக்கம் உள்ளது.

    இதில் கோவிலில் நடைபெறும் விழாக்கள், பூஜைகள் விவரம், கோவில் வரலாறு மற்றும் சாமியின் புகைப்படங்கள பதிவிடப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் கோவிலின் முகநூல் பக்கத்தை மர்ம நபர்கள் 'ஹேக்' செய்து அந்த கணக்கில் ஆபாச புகைப்படங்களை பதிவிட்டனர்.

    இதனை பார்த்த பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் முகநூல் பக்கத்தில் இருந்த ஆபாச படத்தை சைபர் கிரைம் போலீசார் உடனடியாக நீக்கினர்.

    மேலும் கோவிலின் முகநூல் பக்கத்தை ஹேக் செய்து இந்த மோசமான செயலில் ஈடுபட்டவர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் முகநூல் பக்கம் முடக்கப்பட்டு, பின்னர் சைபர் கிரைம் போலீசாரால் மீட்கப்பட்டது. இந்த நிலையில் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மத்திய பா.ஜனதா ஆட்சியில் நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
    • தேர்தல் பொறுப்புகளை ஒருவரே செய்யாமல் அனைவரும் பகிர்ந்து பணியாற்ற வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில பா.ஜனதாவில் மாநில நிர்வாகிகள் நியமிக்கப் பட்டுள்ளனர்.

    புதிய நிர்வாகிகளின் முதல் கூட்டம் நடந்தது. பா.ஜனதா மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி. தலைமை வகித்தார். அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ரிச்சர்டு, ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு, சிவசங்கர் மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் புதுவை மாநில பா.ஜனதா பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா பேசியதாவது:-

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜனதா ஆட்சியில் நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    முத்ரா திட்டம், கியாஸ் திட்டம் அனைத்து ஏழை மக்களையும் சென்றடைந்துள்ளது. புதுவையில் 3.5 லட்சம் பேர் மத்திய அரசு திட்டங்களால் பயனடைந்துள்ளனர்.

    அவர்களை சந்தித்து நாடாளுமன்ற தேர்தலில் நாம் பணியாற்ற வேண்டும். அதற்கேற்ப வியூகங்களை வகுக்க வேண்டும். புதுவையில் பா.ஜனதா வேட்பாளர்தான் போட்டியிடுவார்.

    எனவே பா.ஜனதா வேட்பாளர் வெற்றி பெற நிர்வாகிகள் இரவு, பகலாக உழைக்க வேண்டும். தேர்தல் பொறுப்புகளை ஒருவரே செய்யாமல் அனைவரும் பகிர்ந்து பணியாற்ற வேண்டும். மாநிலத்தில் உள்ள அனைத்து பூத்களிலும் பா.ஜனதாவை பலப்படுத்த வேண்டும். மீண்டும் மத்தியில் பா.ஜனதா ஆட்சி மலரும் போது நாட்டில் அபரிதமான வளர்ச்சி இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து மத்திய அரசு செய்த திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    • வீராம்பட்டினம் கடற்கரையில் லேகாவின் உடல் மட்டும் கரை ஒதுங்கி இறந்தது.
    • போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி நெல்லித்தோப்பு டி.ஆர்.நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி மீனாட்சி. தம்பதியின் மகள்கள் மோகனா (வயது 17), லேகா (15). இவர்கள் புதுவையில் உள்ள அரசு பள்ளியில் 12 மற்றும் 10-ம் வகுப்பு படித்து வந்தனர்.

    புத்தாண்டு கொண்டாட மகள்களை அழைத்துக்கொண்டு நேற்று பகல் 12 மணியளவில் மீனாட்சி புதுவை கடற்கரைக்கு வந்தார். அங்கு ஏற்கனவே மோகனா, லேகா ஆகியோரது பள்ளி நண்பர்களான கதிர்காமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் நவீன் (15), நடேசன் நகரை சேர்ந்த கேட்டரிங் மாணவர் கிஷோர் (17) ஆகியோரும் வந்திருந்தனர். அவர்கள் 4 பேரும் டூப்ளக்ஸ் சிலை அருகே கடலில் இறங்கி உற்சாகமாக குளித்தனர்.

    அப்போது கடலில் எழுந்த ராட்சத அலையில் சிக்கி மோகனா, லேகா, நவீன், கிஷோர் ஆகிய 4 பேரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதைப் பார்த்ததும் கரையில் இருந்து மீனாட்சி அதிர்ச்சியடைந்த கூக்குரலிட்டு கதறினார்.

    இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த மீனவர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் விரைந்து வந்து கடலில் இறங்கி சகோதரிகள் உள்பட 4 பேரையும் தேடினர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுபற்றி தகவல் அறிந்த ஒதியஞ்சாலை போலீசார், கடலோர காவல்படை, தீயணைப்புத்துறையினர் கடற்கரைக்கு விரைந்து வந்தனர். அவர்கள் மீனவர்கள் உதவியுடன் படகில் கடலுக்குள் சென்று மாயமான 4 பேரையும் தேடினர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியாத நிலையில் இரவு நேரமாகி விட்டதால் தேடும் பணியை கைவிட்டனர்.

    இன்று காலை மீண்டும் கடலில் இழுத்து செல்லப்பட்டு மாயமான 4 மாணவ-மாணவிகளையும் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது வீராம்பட்டினம் கடற்கரையில் லேகாவின் உடல் மட்டும் கரை ஒதுங்கி இறந்தது. இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து மற்ற 3 பேரையும் தேடும் பணியில் தீயணைப்பு படையினர், கடலோர காவல் படையினர் மற்றும் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • புத்தாண்டையொட்டி சிறப்பு சலுகையுடன் மது வகைகள் விற்கப்பட்டன.
    • வழக்கமாக இரவு 11 மணிக்குள் விற்பனையை முடித்து மதுக்கடைகளை மூட வேண்டும்.

    புதுச்சேரி:

    புத்தாண்டையொட்டி புதுவையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    புதுவையில் உள்ள மதுக்கடைகளில் பிராந்தி, விஸ்கி, ஜின், ஓட்கா என 800-க்கும் மேற்பட்ட மது வகைகள் கிடைக்கும். புத்தாண்டையொட்டி சிறப்பு சலுகையுடன் மது வகைகள் விற்கப்பட்டன. அவற்றை வாங்க ஏராளமான சுற்றுலா பயணிகள் மது கடைகளில் கூடினர்.

    புதுவையில் புத்தாண்டையொட்டி மது விற்பனையை கடந்த காலங்களில் இரவு 12 மணி வரை மட்டுமே அனுமதி அளித்தனர்.

    இந்த நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிப்பு அளித்து கலால் துறை சிறப்பு அனுமதி அளித்தது. வழக்கமாக இரவு 11 மணிக்குள் விற்பனையை முடித்து மதுக்கடைகளை மூட வேண்டும். இந்த ஆண்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் 2 மணி நேரம் கூடுதலாக மது விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டதால் மது கடைகளில் ஆண்கள், பெண்கள் என கூட்டம் அலைமோதியது.

    • கடற்கரைகள், திறந்த வெளியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அளவுக்கு அதிகமான சுற்றுலா பயணிகளை அனுமதிக்கின்றனர்.
    • சில இடங்களில் சுற்றுலா பயணிகள் அமர்வதற்கோ, கழிப்பறை வசதிகளோ செய்யவில்லை.

    புதுச்சேரி:

    புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டம் ஆண்டுதோறும் அதிகரித்து செல்கிறது. புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து புதுவைக்கு மக்கள் குவிகின்றனர்.

    புதுவையில் உள்ள தனியார் ஓட்டல்கள், கடற்கரைகள், திறந்த வெளி அரங்குகளில் புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடத்த அரசு அனுமதி வழங்குகிறது.

    இதற்கு உள்ளாட்சித்துறை பல கட்டுப்பாடுகளை விதித்து, கேளிக்கை வரி வசூலும் செய்கிறது. ஓட்டல்களில் நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் குறிப்பிட்ட அளவு மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அதற்கு மேல் அனுமதியில்லை.

    ஆனால் கடற்கரைகள், திறந்த வெளியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அளவுக்கு அதிகமான சுற்றுலா பயணிகளை அனுமதிக்கின்றனர்.

    கடந்த ஆண்டு நடந்த புத்தாண்டு நிகழ்ச்சியில் அறிவித்தபடி மது, உணவு வகைகளை வழங்கவில்லை என சுற்றுலா பயணிகள் பலரும் புகார் தெரிவித்து சென்றனர்.

    இதனால் இந்த ஆண்டு உள்ளாட்சித்துறை அறிவித்தபடி மது, உணவு வகைகளை வழங்க வேண்டும் என அறிவுறுத்து இருந்தது. ஆனால் இந்த உத்தரவு திறந்தவெளி அரங்குகளில் நடந்த புத்தாண்டு நிகழ்ச்சிகளில் காற்றில் பறக்க விடப்பட்டது. 500 பேர் மட்டுமே கூடும் இடத்தில் ஆயிரக்கணக்கானவர்களை அனுமதித்தனர்.

    சில இடங்களில் சுற்றுலா பயணிகள் அமர்வதற்கோ, கழிப்பறை வசதிகளோ செய்யவில்லை.

    மது வழங்கும் கவுன்டர்களில் கூட்டம் அலைமோதியது. இரவு 9 மணிக்கு மேல் நிகழ்ச்சி நடத்துவோர் அறிவித்த மது வகைகளை வழங்காமல் நிறுத்தி விட்டனர். சிறிய பாட்டில் பீர் வகைகளை மட்டும் வழங்கினர். அதையும் சுற்றுலா பயணிகள் போட்டி போட்டு வாங்க வேண்டிய நிலை இருந்தது.

    மதுவை விட உணவு வகைகளை பெற சுற்றுலா பயணிகள் பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.

    இரவு 10 மணிக்கு மேல் மெனுவில் அறிவித்தபடி உணவு வகைகளையும் வழங்கவில்லை. இதனால் சில இடங்களில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களோடு சுற்றுலா பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    ஒரு சில இடத்தில் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி தங்களுக்கு வழங்கப்பட்ட டேக்கை குறைந்த விலைக்கு பிறரிடம் சுற்றுலா பயணிகள் விற்று விட்டு சென்றனர்.

    வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் எந்த புகாரும் தெரிவிக்க மாட்டார்கள். நமக்கேன் வம்பு? என சென்று விடுவார்கள் என்பதால்தான் புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இதுபோன்ற சம்பவங்களை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

    இதேநிலை நீடித்தால் வரும் காலத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை சரிய தொடங்கி விடும்.

    • புத்தாண்டு கொண்டாட மகள்களை அழைத்துக்கொண்டு நேற்று பகல் 12 மணியளவில் மீனாட்சி கடற்கரைக்கு வந்தார்.
    • கடலில் எழுந்த ராட்சத அலையில் சிக்கி மோகனா, லேகா, நவீன், கிஷோர் ஆகிய 4 பேரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி மீனாட்சி. இந்த தம்பதியின் மகள்கள் மோகனா (வயது 17), லேகா (15). புதுவையில் உள்ள அரசு பள்ளியில் இவர்கள் 12 மற்றும் 10-ம் வகுப்பு படித்தனர்.

    புத்தாண்டு கொண்டாட மகள்களை அழைத்துக்கொண்டு நேற்று பகல் 12 மணியளவில் மீனாட்சி கடற்கரைக்கு வந்தார். ஏற்கனவே அங்கு மோகனா, லேகா ஆகியோரது நண்பர்களான கதிர்காமத்தை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவன் நவீன் (16), நடேசன் நகரை சேர்ந்த கேட்டரிங் மாணவர் கிஷோர் (17) ஆகியோரும் வந்திருந்தனர். அவர்கள் 4 பேரும் டூப்ளக்ஸ் சிலை அருகே கடலில் இறங்கி உற்சாகமாக குளித்தனர்.

    அப்போது கடலில் எழுந்த ராட்சத அலையில் சிக்கி மோகனா, லேகா, நவீன், கிஷோர் ஆகிய 4 பேரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதைப்பார்த்ததும் கரையில் இருந்து மீனாட்சி அதிர்ச்சியடைந்து 'காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்...' என கூக்குரலிட்டு கதறினார்.

    இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த மீனவர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் விரைந்து வந்து கடலில் இறங்கி அக்காள், தங்கை உள்பட 4 பேரையும் தேடினார்கள். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், கடலோர காவல்படை, தீயணைப்புத்துறையினர் கடற்கரைக்கு விரைந்து வந்தனர். அவர்கள் மீனவர்களுடன் படகில் கடலுக்குள் சென்று மாயமான 4 பேரையும் தேடினர். மேலும் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான படகில் சென்று கடலோர காவல்படை போலீசாரும் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியாத நிலையில் இரவு நேரமாகி விட்டதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனால் தற்காலிகமாக தேடும் பணி கைவிடப்பட்டது.

    கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட அக்காள்-தங்கை உள்பட 4 பேரின் கதி என்ன? என்பது தெரியாதநிலையில் இதுபற்றிய தகவல் அவர்களது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதை கேட்டு பதறிப்போன அவர்கள் கடற்கரைக்கு வந்து அழுது புரண்டனர். இந்த காட்சி கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

    • சென்னையிலிருந்த வந்த ஒரு தம்பதி முகத்துவாரத்தில் விழுந்து காயமடைந்தது.
    • புதுவையில் புத்தாண்டு கொண்டாட சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடல், ஆற்றின் முகத்துவாரத்தில் படகு பயணம் செய்வதை விரும்புகின்றனர்.

    இதையடுத்து புதுவை அரசின் சுற்றுலாத்துறை மூலம் ஆற்றுப்பகுதியில் படகுகளை இயக்க சில நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் புற்றீசல்போல 100-க்கும் மேற்பட்ட படகுகள் சுற்றுலா பயணிகளுக்காக பாதுகாப்பின்றி இயக்கப்பட்டன. சென்னையிலிருந்த வந்த ஒரு தம்பதி முகத்துவாரத்தில் விழுந்து காயமடைந்தது.

    இதையடுத்து பாதுகாப்பு கருதி சுற்றுலா படகுகள் இயக்குவதை அரசு தடை செய்தது. முறையாக அனுமதி பெற்று, பாதுகாப்புடன் படகுகளை இயக்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இதன்படி புதுவையில் 300-க்கும் மேற்பட்டோர் சுற்றுலா படகு இயக்க அனுமதி கோரினர். அனுபவம் கொண்ட 8 நிறுவனங்களுக்கு அரசு அனுமதியளித்துள்ளது.

    இந்தநிலையில் புதுவையில் புத்தாண்டு கொண்டாட சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் பலர் கடலில் படகு சவாரி செய்து மகிழ்கின்றனர்.

    இந்த படகுகளை துறைமுக பகுதியிலிருந்து இயக்குகின்றனர்.

    மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் மீன்பிடி தொழில் பாதிக்கப்படுவதாகவும், சுற்றுலா படகுகள் இயக்கப்படுவதை கண்டித்தும் புதுவை மீனவர்கள் இன்று திடீர் போராட்டத்தில் இறங்கினர். துறைமுகத்தை நோக்கி வரும் பெரியாறு பகுதியில் கட்டுமரங்களை கடலில் குறுக்கே நிறுத்தி வலை வீசி போராட்டம் நடத்தினர்.

    இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, சுண்ணாம்பாறு படகு குழாம் முழுமையாக சுற்றுலாவுக்கு ஒதுக்கப்பட்டது.

    தற்போது பெரியாறு பகுதியில் படகுகள் இயக்கப்படுவதால் மீன்வளம் பாதிக்கப்படும்.

    இறால் முட்டைகள், மீன் குஞ்சுகள் அழிந்து வருகிறது. இதனால் கடல் வளமும், ஆற்று வளமும் பாதிக்கப்படுகிறது. இதனால் மீன்பிடி தொழில் பாதிக்கப்படுகிறது. அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அனைத்து விசைப்படகு மீனவர்களுடன் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்துவோம் என அவர்கள் தெரிவித்தனர்.

    • நகரில் திரும்பும் திசையெல்லாம் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக செல்வதை காண முடிகிறது.
    • புதுவையில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களிலும் போலீசார் சோதனை நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் ஆண்டு தோறும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதையொட்டி புதுவையில் உள்ள நட்சத்திர விடுதிகள், ஓட்டல்களில் மதுபான விருந்துகளுடன் பல்வேறு விதமான கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

    புதுவை கடற்கரையிலும் ஆட்டம்-பாட்டத்துடன் புத்தாண்டு கொண்டாடப்படும். இதற்காக வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து உள்ளனர்.

    இதனால் புதுவையில் உள்ள தங்கும் விடுதிகள் நிரம்பி வழிகிறது. நகரில் திரும்பும் திசையெல்லாம் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக செல்வதை காண முடிகிறது.

    புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கடற்கரை சாலையில் நடந்தது.

    கூட்டத்திற்கு புதுவை சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா.சைதன்யா தலைமை தாங்கினார்.

    இதில் போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் சுற்றுலா பயணிகள் வரும் பாதைகளில் வாகனங்கள் நிறுத்த கூடாது.

    வாகனங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வாகன நிறுத்தங்களில் மட்டுமே நிறுத்த அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. கடற்கரையில் கட்டப்பட்டுள்ள தடுப்பு கட்டைகளை தாண்டி கடலில் யாரும் செல்லக்கூடாது. இதனை கண்காணிக்க வேண்டும்.

    அதேபோல் கடற் கரையில் நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம் முடியும் வரை போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் எங்கெங்கு பணியில் இருக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

    இதற்கிடையே புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி புதுவையில் இருந்து தமிழக பகுதிகளுக்கு மதுபாட்டில்களை கடத்துவதை தடுக்கும் வகையில் நேற்று இரவு முதல் புதுவை-தமிழக எல்லைகளான கிழக்கு கடற்கரை சாலை, திண்டிவனம் ரோடு, விழுப்புரம் சாலை, கடலூர் ரோட்டில் உள்ள எல்லை பகுதிகளான கன்னியக்கோவில், கோரிமேடு, கனக செட்டிக்குளம், மதகடி பட்டு ஆகிய பகுதிகளில் போலீசார் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதுபோல் புதுவையில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களிலும் போலீசார் சோதனை நடத்தினர்.

    • ஏழை, எளிய மக்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அரசு வேளாண் துறை அமைச்சர் அலுவலகம் அறிவித்துள்ளது.
    • ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையினரால் ஏழை, எளிய மக்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அரசு வேளாண் துறை அமைச்சர் அலுவலகம் அறிவித்துள்ளது.

    வேளாண்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிவப்பு ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும். அப்பணம் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிவப்பு ரேசன் அட்டைதாரரர்களுக்கு பொங்கல் பண்டிகையை ஒட்டி வரும் 4ஆம் தேதி ரூ.1000 வழங்கப்படுகிறது. ஒரு லட்சத்து 30,791 சிவப்பு ரேசன் அட்டைதாரரர்களுக்கு வங்கிக் கணக்கில் தொகை செலுத்தப்படுகிறது.

    ×