search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • மிஷின் வீதியில் உள்ள காசாபிலங்கா வணிக வளாகத்தில் பேஷன் ஷோ நடந்தது.
    • ஆரோவில் பகுதி வாசிகளும் சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான ஆரோவில்லில் கிராமப்புற பெண்கள் மற்றும் வெளி நாட்டவர்கள் முயற்சியால் விதவிதமான ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன.

    இந்த நவீன ஆடைகளை அறிமுகப்படுத்தும் விதமாக புதுவை மிஷின் வீதியில் உள்ள காசாபிலங்கா வணிக வளாகத்தில் பேஷன் ஷோ நடந்தது.

    இதில் 20-க்கும் மேற்பட்ட இளம் பெண்களும், இளைஞர்களும் விதவிதமான ஆடை மற்றும் அணி கலன்களை அணிந்து ஸ்டைலாக நடந்து வந்தனர்.

    இதனை ஆரோவில் பகுதி வாசிகளும் சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

    கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக பேஷன் ஷோ நடத்தப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 

    • அதிகப்படியான நிலத்தடி நீர் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
    • 12,202 விவசாய பாசனத்திற்கு தரப்படும் நீரின் மூலம் 27,212 எக்டர்நிலம் பாசன வசதி பெறுவதால் 2.50 லட்சம் மக்கள் பயனடைவர்.

    புதுச்சேரி:

    புதுடெல்லியில் 37-வது தேசிய நதிநீர் இணைப்பு நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் நடந்தது. அதில் புதுச்சேரி மாநிலம் சார்பில் பங்கேற்ற பொதுப் பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் பேசியதாவது:-

    கோதாவரி காவிரி நதி நீர் இணைப்பின் முதல் சாத்திய கூறின் அறிக்கையின் படி, 7,000 மில்லியன் கனமீட்டர் நீர் கிடைக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

    தற்போது மறுமதிப் பீட்டின் அடிப்படையில் கிருஷ்ணா நதியின் பேடி வரதா இணைப்பையும் சேர்த்து 4,713 மில்லியன் கனமீட்டர் நீர் கிடைக்கும் என கணக்கிடப்பட்டு, அதில் புதுச்சேரிக்கு குடிநீர் மற்றும் பொது பயன்பாட்டிற்கு 27 மில்லியன் கனமீட்டர், தொழில் துறைக்கு 35 மில்லியன் கனமீட்டர் என, 62 மில்லியன் கனமீட்டர், அதாவது 2.20 ஆயிரம் மில்லியன் கன அடி நீர் அளிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் விவசாயத் திற்கு நீர் பங்களிப்பு தரப்படவில்லை. புதுச்சேரி குடிநீர் பொதுப்பயன்பாடு, தொழிற்துறை மற்றும் விவசாயம் அனைத்திற்கும் நிலத்தடி நீரையே நம்பியுள்ளது. அதிகப்படியான நிலத்தடி நீர் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

    எனவே புதுச்சேரி விவசாயிகளை பாதுகாக்க தேசிய நீர் வளர்ச்சி நிறுவனம் விவசாய பாசனத்திற்காக புதுச்சேரி பிரதேசத்திற்கு மேலும் 75 மில்லியன் கன மீட்டர் அதாவது 2.75 டி.எம்.சி., நீர் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சங்கராபரணி-தென்பெண்ணை ஆறுகளை இணைப்பதன் மூலம் புதுச்சேரியில் உள்ள 25 படுகையணை மற்றும் 56 ஏரிகளில் 47 மில்லியன் கன மீட்டர் நீரை தேக்கி வைக்க முடியும்.

    12,202 விவசாய பாசனத்திற்கு தரப்படும் நீரின் மூலம் 27,212 எக்டர்நிலம் பாசன வசதி பெறுவதால் 2.50 லட்சம் மக்கள் பயனடைவர்.

    எனவே புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சங்கராபரணி-தென்பெண்ணை ஆறுகளை இணைக்கும் திட்டத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    கோதாவரி-காவிரி நதி நீர் இணைப்பின் மூலம் புதுச்சேரி மாநிலம் அதற்கு உண்டான நீர் பங்கீட்டளவை மற்ற மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிப்பது போல் அளிக்க வேண்டும்.

    இந்த நீர் பங்களிப்பு காவிரி நீர் ஆணையத்தால் அளிக்கப்பட்டுள்ள நீரின் அளவான 7 ஆயிரம் மில்லியன் கனஅடியுடன் கூடுதலாக தரவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் மீண்டும் தனது ஆதங்கத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளிப்படுத்தியுள்ளார்.
    • பிளஸ்-2 படித்து முடிக்கும் மாணவர்கள் மருத்துவம், பொறியியல் மட்டுமே படிக்க வேண்டும் என நினைக்க வேண்டாம்.

    புதுச்சேரி:

    புதுவையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    ஆட்சி தொடங்கியது முதல் முதல்-அமைச்சர் ரங்கசாமி அரசுக்கு அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லை என தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். அரசு விழாக்களில் ஏற்கனவே சில முறை பகிரங்கமாக இதை தெரிவித்துள்ளார்.

    புதுவை சட்டசபையிலும் இந்த விவகாரம் எதிரொலித்துள்ளது. அரசுக்கு ஒத்துழைக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் செல்வம் சட்டசபையிலேயே எச்சரிக்கையும் விடுத்தார்.

    சபை நடவடிக்கையில் அனைத்து அதிகாரிகளும் முழுமையாக பங்கேற்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதிகாரிகள் சபை நடவடிக்கையில் பங்கேற்கிறார்களா? என அமைச்சர் அலுவலகங்களுக்கு சென்று கண்காணிப்பிலும் ஈடுபட்டார்.

    இந்த நிலை மாற புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்துதான் தீர்வு என அடிக்கடி முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறி வருகிறார். இதனிடையே நேற்று கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் மீண்டும் தனது ஆதங்கத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளிப்படுத்தியுள்ளார்.

    ஒரு கோப்புக்கு அதிகாரிகளிடம் கையெழுத்து வாங்க கடும் சிரமம் அடைய வேண்டியுள்ளது. இயக்குனர், செயலர், தலைமை செயலர் ஆகியோர் கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர். நிர்வாக பொறுப்பில் உள்ளவர்கள் தான் நிர்வாகத்தை ஆட்டிப்படைக்கின்றனர். மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் கோப்புக்கு தற்போதுதான் உயர் அதிகாரிகளின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளோம். இந்த வாரத்தில் அந்த கோப்புக்கு அனுமதி கிடைக்கும். இதன்பின்னர் 10 நாட்களில் லேப்டாப் வழங்கப்படும்.

    பிளஸ்-2 படித்து முடிக்கும் மாணவர்கள் மருத்துவம், பொறியியல் மட்டுமே படிக்க வேண்டும் என நினைக்க வேண்டாம். பட்டப்படிப்புகள் ஏராளமாக உள்ளது.

    அதை படித்து நிர்வாக பொறுப்புக்கு வர ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ். தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சியடைய வேண்டும். ஏனென்றால் அவர்கள் நிர்வாகத்தை ஆட்டிப்படைக்கின்றனர்.

    இதுவரை புதுவையை சேர்ந்த 5 பேர்தான் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக உள்ளனர் என்றார்.

    முதல்-அமைச்சர் ரங்கசாமியின் இந்த ஆதங்கமான பேச்சு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இடையே உள்ள பனிப்போரை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

    • ஒருங்கிணைந்த சட்டமன்ற வளாகத்துக்கான கோப்பு கவர்னர் தமிழிசை ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
    • மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் எழுத்துப்பூர்வமான பதில் அளித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவையில் கடற்கரை சாலையை ஒட்டியுள்ள 200 ஆண்டுகால பழமையான பிரெஞ்சு கட்டிடத்தில் சட்டசபை இயங்கி வருகிறது.

    கடற்கரை சாலையில் தலைமை செயலகம் உள்ளது. பழமையான கட்டிடம் என்பதாலும், இடநெருக்கடியாலும் சட்டசபையை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு கடந்த 30 ஆண்டுக்கு முன்பே முடிவு எடுக்கப்பட்டது.

    கடந்த 2000-ம் ஆண்டில் அப்போது முதலமைச்சராக இருந்த ஜானகிராமன், புதிய சட்டசபை வளாகத்தை பழைய துறைமுக வளாகத்தில் கட்ட பூமி பூஜை போட்டார். அதன்பிறகும் கிழக்கு கடற்கரை சாலையில் அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைந்துள்ள பகுதியில் சட்டசபை வளாகம் கட்ட 2 முறை பூமி பூஜை போடப்பட்டது.

    இங்கு நிலம் கையகப்படுத்துவதில் கூட பிரச்சினைகள் எழுந்தது. ஆனாலும் இதுவரை சட்டசபை வளாகம் கட்ட பூர்வாங்க பணிகள் கூட நடக்கவில்லை.

    இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா அரசு புதிதாக அமைந்தது முதல் புதிய சட்டசபை வளாகம் கட்ட பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றனர். இதில் சபாநாயகர் செல்வம், அதிக முனைப்பு காட்டி வருகிறார்.

    6 மாடியில் சட்டசபை வளாகமும், 5 மாடியில் தலைமை செயலகமும், ஆயிரம் பேர் அமரும் வகையில் கருத்தரங்கு கூடமும், ஹெலிகாப்டர் இறங்கும் வகையில் இறங்கு தளத்துடன் சட்டசபை வளாகம் அமைக்க வரைபடம் தயாரிக்கப்பட்டது.

    இந்த வரைபடத்தில் முதலமைச்சர் ரங்கசாமி சில திருத்தங்களையும் செய்தார். ஆரம்பத்தில் ரூ.300 கோடியில் ஒருங்கிணைந்த சட்டசபை வளாகம் அமைக்க திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. இதில் கூடுதலாக பல இணைப்புகள் சேர்த்ததால் ரூ.615 கோடிக்கு திட்ட மதிப்பீடு உயர்ந்துள்ளது.

    ஒருங்கிணைந்த சட்டமன்ற வளாகத்துக்கான கோப்பு கவர்னர் தமிழிசை ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அவர் சில விளக்கங்களை கேட்டு 2 முறை கோப்பை திருப்பி அனுப்பினார். இதனால் இந்த கோப்பு மத்திய அரசுக்கு செல்லவில்லை.

    இதனிடையே காங்கிரஸ் கட்சியின் புதுவை எம்.பி. வைத்திலிங்கம் பாராளுமன்றத்தில், புதுவை யூனியன் பிரதேசத்தில் புதிய சட்டப்பேரவை கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட மத்திய நிதி உதவி எவ்வளவு? அந்தத் திட்டத்திற்காக மாநில அரசின் நிதி பங்களிப்பு எவ்வளவு? இதுவரை அந்தத் திட்டத்திற்காக மத்திய அரசால் வழங்கப்பட்ட நிதி எவ்வளவு? சட்டமன்ற கட்டிடம் கட்டும் பணி எப்போது தொடங்கும்? என கேள்வி எழுப்பினார்.

    இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் எழுத்துப்பூர்வமான பதில் அளித்துள்ளார். அந்த பதிலில், புதுவை அரசிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் படி, புதிய சட்டமன்ற கட்டிடம் கட்டுவதற்கான திட்டமானது பூர்வாங்க, கருத்துரு அளவில்தான் உள்ளது.

    புதுவை அரசால் புதிய சட்டமன்ற கட்டிடம் கட்டுவதற்கான எந்த ஒரு விரிவான திட்ட அறிக்கையும் மத்திய நிதி உதவி கேட்டு மத்திய உள்துறை அமைச்சகத்தால் இதுநாள் வரை பெறப்படவில்லை என கூறியுள்ளார்.

    இதனால் புதுவையில் புதிய சட்டசபை வளாகம் கட்டுவதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது. 30 ஆண்டுக்கும் மேலாக பல்வேறு அரசுகள் எடுத்து வரும் முயற்சி கைகூடுமா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

    • உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவுக்காக எந்திரங்கள் தெலுங்கானா மாநிலத்திலிருந்தும், கர்நாடக மாநிலத்திலிருந்தும் வந்தன.
    • தற்போதைக்கு உள்ளாட்சி தேர்தல் நடை பெறும் வாய்ப்பு இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த 2006-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடந்தது. உள்ளாட்சி தேர்தலில் தேர்வாவான பிரதிநிதிகள் 2011-ம் ஆண்டு வரை பதவியில் இருந்தனர். அதன்பிறகு 12 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.

    இதையடுத்து கடந்த 2021 ஆகஸ்டு மாதத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தல் பணிகள் நடந்தன.

    உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவுக்காக எந்திரங்கள் தெலுங்கானா மாநிலத்திலிருந்தும், கர்நாடக மாநிலத்திலிருந்தும் வந்தன.

    இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் புதுவை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பில் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்ககோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இதனை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போனது. பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் எந்திரங்கள் வைக்கப்பட்டு 2 ஆண்டுகளாகியும் உள்ளாட்சித்தேர்தல் நடக்கவில்லை. இதனால், மாணவிகள் இடப்பற்றாக் குறையால் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

    இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி பாரதிதாசன் மகளிர் அரசு கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் வாக்குப்பதிவு எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் 3 கண்டெய்னர் லாரிகளில் நேற்று இரவு ஏற்றப்பட்டன.

    அந்த லாரிகள் 2 தெலுங்கானாவுக்கும், ஒரு லாரி கர்நாடகத்துக்கும் சென்றது.

    தற்போது பாரதிதாசன் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த எந்திரங்கள் எடுக்கப்பட்டதால், ஏற்கெனவே இடநெருக்கடியில் சிக்கி தவித்த மாணவிகள் தற்போது மீண்டுள்ளனர்.

    அதே நேரத்தில் புதுவையில் தற்போதைக்கு உள்ளாட்சி தேர்தல் நடை பெறும் வாய்ப்பு இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. வாக்குபதிவு எந்திரங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதால் புதுவையில் மீண்டும் உள்ளாட்சி தேர்தல் நடை பெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    • புதுச்சேரியில் கடந்த மே மாதத்திற்கு பிறகு கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை.
    • புதுவை அரசு மருத்துவமனையில் டெங்குவுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டும் அமைக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் சில மாதமாக கொரோனா தொற்று இல்லாமல் பூஜ்ஜியமாக இருந்தது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் மக்கள் சளி, காய்ச்சலால் அவதியடைந்து வந்தனர். தற்போது புதுச்சேரியில் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.

    இதற்கு சிகிச்சை பெற அரசு ஆஸ்பத்திரியில் அதிக அளவில் நோயாளிகள் வருகின்றனர். இதில் சிகிச்சைக்காக வந்த புதுச்சேரியை சேர்ந்த 43 நோயாளிகளின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

    இதில் 9 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 3 பேர் ஜிப்மர் உள்பட அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6 பேர் தங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுவதாக புதுவை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் விபரம் சேகரிக்கப்பட்டு, அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    புதுச்சேரியில் கடந்த மே மாதத்திற்கு பிறகு கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை. 7 மாதத்திற்கு பிறகு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது புதுச்சேரியில் கொரோனா மீண்டும் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    புதுவையில் கடந்த ஆண்டை விட டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஆயிரத்து 673 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு இதுவரை 2 ஆயிரத்து 436 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    புதுவை அரசு மருத்துவமனையில் டெங்குவுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டும் அமைக்கப்பட்டுள்ளது. தொடர் காய்ச்சலால் அவதிக்குள்ளாவோர் உடனடியாக மருத்துவமனையை அணுகுமாறும் பொதுமக்கள் வெளியே செல்லும்போது முககவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் புதுவை சுகாதாரதுறை அறிவுறுத்தி உள்ளது.

    இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு கூறியதாவது:-

    புதுவை அரசு மருத்துவமனைகளில் போதுமான மருந்துகள் கையிருப்பில் உள்ளது. பொதுமக்கள் தங்கள் வீட்டையும், சுற்றுபுறத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

    டெங்கு கொசுக்களை ஒழிக்க தஞ்சாவூரில் இருந்து வரவழைக்கப்பட்ட கம்போசியா மீன்களை குட்டைகளில் விடப்பட்டுள்ளது. வரும் காலங்களில் புதுவையிலேயே கம்போசியா மீன்களை வளர்க்க திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • வருகிற 20-ந்தேதி மாலை 5.20 மணிக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு சனிப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடை பெற உள்ளது.
    • சனிப்பெயர்ச்சிக்கு 10 நாட்களே உள்ள நிலையில் தினந்தோறும் பக்தர்கள் சனீஸ்வரர் கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    காரைக்கால்:

    காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில், உலகப் புகழ்மிக்க தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சனீஸ்வரர் கிழக்கு நோக்கி தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். இக்கோவில் உள்ள சனீஸ்வரரை தரிசனம் செய்வதற்காக, சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின்போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    வருகிற 20-ந்தேதி மாலை 5.20 மணிக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு சனிப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடை பெற உள்ளது. அதேசமயம், மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார். இந்நிலையில், சனிப்பெயர்ச்சிக்கு 10 நாட்களே உள்ள நிலையில் தினந்தோறும் பக்தர்கள் சனீஸ்வரர் கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    மேலும், இன்று சனிக்கிழமை என்பதால் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் அதிகாலை முதல் திருநள்ளாறு நலன் குளத்தில் புனித நீராடி, சனீஸ்வரரை நீண்ட வரிசையில் நின்று சாமி தரி சனம் செய்தனர். பக்தர்களுக்கான அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகளை கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கட்டளை விசாரணை கந்த சாமி தம்பிராயன் சுவாமிகள் மற்றும் அரசு துறை அதிகாரிகள், போலீசார் செய்து வருகின்றனர்.

    • சனி பெயர்ச்சி விழாவிற்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ளனர்.
    • பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக கோவில் அருகே பிரமாண்ட ஷெட் அமைக்கப்பட்டுள்ளது.

    திருநள்ளாறு:

    திருநள்ளாறில் உலகபுகழ் பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு 2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிபெயர்ச்சி விழா வருகிற 20-ந்தேதி நடக்கிறது. அன்றைய தினம் சனீஸ்வரர் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார்.

    சனி பெயர்ச்சி விழாவிற்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ளனர். இதையொட்டி சனிப்பெயர்ச்சி விழா அழைப்பிதழை மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் ஆகியோர் வெளியிட்டனர்.

    பின்னர் கலெக்டர் குலோத்துங்கன் கூறுகையில், சனி பெயர்ச்சி விழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக காரைக்கால் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இருந்து கோவிலுக்கு 25 பஸ்கள் இலவசமாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக கோவில் அருகே பிரமாண்ட ஷெட் அமைக்கப்பட்டுள்ளது.

    சனிப்பெயர்ச்சி தரிசனத்துக்காக ஆன்லைன் டிக்கெட்டுகள் 15-ந்தேதி முதல் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது என்றார்.

    • 2 பேர் அமீரை வழிமறித்து தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.
    • அமீர் கோட்டகுப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    சேதராப்பட்டு:

    புதுவை அடுத்த தமிழக பகுதியான சின்ன கோட்டகுப்பத்தைச் சேர்ந்தவர் சையது அமீர். இவர் சம்பவத்தன்று சின்ன கோட்டை குப்பம் கறிக்கடை சந்தில் நடந்து சென்றார்.

    அப்போது எதிரே வந்த 2 பேர் அமீரை வழிமறித்து தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். பின்னர் அமீரிடமிருந்த பணத்தை பறித்துச்சென்ற அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இதுகுறித்து அமீர் கோட்டகுப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராபின்சன் வழக்கு பதிவு செய்து அமீரிடம் பணம் பறித்தவர்களை அடையாளம் காண அந்தப் பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டார்.

    அதில் அமீரிடம் பணம் பறித்தவர்கள் சின்னக்கோட்டகுப்பம் பகுதியைச் சேர்ந்த விஜி என்கிற பிக்க்ஷா (வயது 22), ஆறுமுகம் (26) என்பது தெரிய வந்தது. ரவுடிகளான விஜி என்கிற பிக்க்ஷா மீது சின்னக்கோட்டகுப்பம் பகுதியில் 2021-ம் ஆண்டு நடந்த செல்வகுமார் கொலை வழக்கு, ஆறுமுகம் மீது அவரது அண்ணனையே கொலை செய்த வழக்கும் உள்ளது. இருவரையும் கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திண்டிவனம் கிளை சிறையில் அடைத்தனர்.

      புதுச்சேரி:

      புதுவை வில்லியனூர் அடுத்த கோர்க்காட்டில் உள்ள கோரக்கர் சித்தர் ஜீவசமாதியில் குருபூஜை விமர்சையாக நடந்தது.18 சித்தர்களில் 16 வது இடத்தில் இருப்பவர் கோரக்கர் சித்தர். மச்சேந்தி ரர் அருளியதால் அடுப்பு சாம்பலில் இருந்து கோரக்கர் சித்தர் அவதரித்தார். கோரக்கர் சித்தருக்கு

      பொய்கைமலை, ஆனை மலை, நாகப்பட்டினம் அடுத்த வடக்கு பொய்கை நல்லூர், தென்னார்க்காடு, சதுரகிரி, கர்நாடகா, கோரக்பூர் ஆகிய இடங்களில் இவருக்கு ஜீவ சமாதிகள் உள்ளது. வில்லியனூர் அருகே உள்ள கோரக்கர் காடு என்னும் கோர்க்காடு பெருமாள் கார்டன் பகுதி யில் கடும் தவம் புரிந்து வாழ்ந்து வந்ததால் கோர்க்காட்டிலும் கோரக்கர் சித்தரின் ஜீவசமாதி உள்ளது. கடந்த மூன்றாம் தேதி கோரக்க சித்தரின் குருபூஜை தினத்தை ஒட்டி கோர்க்காட்டில் உள்ள கோரக்கர் சித்தர் பீடத்தில் காலையில் தொடங்கி சிறப்பு ஆராதனைகள், நெய்வேத்தியங்கள் நடத்தப்பட்டது.

      பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோரக்கர் சித்தர் குருபூஜை நிகழ்ச்சியில் புதுவை மற்றும் தமிழக பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பொது மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. குருபூஜை விழா ஏற்பாட்டினை

      கோரக்கர் சித்தர் பீட நிர்வாகிகள் கிருஷ்ண மூர்த்தி, சுரேஷ், தனபால், சரண்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

      • வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி.சேகர் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.
      • தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

      புதுச்சேரி:

      புதுவை அ.ம.மு.க. சார்பில் ஜெயலலிதாவின் 7-ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி வில்லியனூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. ஜெயலலிதா உருவ படத்துக்கு தெற்கு மாநில செயலாளர் யூ.சி.ஆறுமுகம், வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி.சேகர் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.

      இந்த நிகழ்ச்சியில் அவைத் தலைவர் அரி கிருஷ்ணன், இணைச் செயலாளர் லாவண்யா, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் நந்தகோபால், ஜெ.பேரவை செயலாளர் காண்டீபன், தொழிற்சங்க செயலாளர் சுரேஷ் சிறு பான்மை பிரிவு செயலாளர் ஜான்சன் மகளிரணி புஷ்பா, தொகுதி செயலா ளர்கள் செந்தில் என்ற குமாரவேல், தனவேலு, செல்லா என்ற தமிழ்செல்வன், ராமசந்திரன், கலியமூர்த்தி, முருகன், கட்சி நிர்வாகிகள் சிவகுமார், சண்முகம், பிரவீன், மோகன், சபா, அய்யனார், வாசு, சரளா, அமலா, உமா, பூங்காவனம், சந்திரா மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

      • தி.மு.க. பொதுகுழு உறுப்பினரிடம் பொது மக்கள் கோரிக்கை
      • வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்பால் கழிவுநீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது.

      புதுச்சேரி:

      மழையால் பாதித்த உருளையன்பேட்டை சின்னப் பொய்கை வீதி, குபேர் நகர், கோவிந்த சாலை, ராஜா நகர், கென்னடி நகர் பகுதிகளில் மழைநீர் மற்றும் உப்பனாறு வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்பால் கழிவுநீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது.

      தகவல் அறிந்த தி.மு.க. தொகுதி தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோபால் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வைட்டார். அப்போது, உப்பனாறு வாய்க்காலில் உள்ள மரங்கள் மற்றும் மண் அடைப்புகளால் கழிவுநீர் வாய்க்கால் வழியாக வெளி யேற முடியாமல் ஊருக்குள் நுழைவதால் வாய்க்கால் அடைப்பை அகற்ற வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

      மழை நின்ற பின் உப்பனாறு வாய்க்காலில் இருக்கும் மரம், செடி மற்றும் அடைப்புகள் சரி செய்யப்படும் என்று கோபால் உறுதி அளித்தார். தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

      நிகழ்ச்சியின் போது தி.மு.க. துணை அமைப்பாளர் தைரிய நாதன், தொகுதி செயலாளர் சக்திவேல், துணைச் செயலா ளர் முருகன், பொருளாளர் சசிகுமார், வர்த்தகர் அணி துணைத் தலைவர் குரு, இலக்கிய பகுத்தறிவு துணைத் தலைவர் ராஜேஷ், இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ரெமிஎட்வின், தாமரைக் கண்ணன், மாணவர் அணி துணை அமைப்பாளர் ஸ்டீபன்ராஜ், கிளைச் செயலாளர்கள் அகிலன், சாலமன், பில்லா, சரவணன், அந்தோணி, பிரகாஷ், ராஜவேலு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

      ×