search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • போட்டியில் பங்குபெறுவோர் பெயர் மற்றும் பள்ளியின் முகவரி தவறாமல் குறிப்பிட வேண்டும்.
    • தேசிய அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.50 ஆயிரமும்,2-வது பரிசு ரூ.25 ஆயிரமும், 3-வது பரிசு ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.

    புதுச்சேரி:

    இந்திய அஞ்சல் துறை சார்பில் கடிதம் எழுதும் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி அஞ்சலகங்களின் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் இனக்கொல்லு காவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவில் கடிதம் எழுதும் போட்டி கடந்த செப்டம்பர் மாதம் 14-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 'எழுதுவதின் மகிழ்ச்சி: நவீன யுகத்தில் கடிதங்களின் முக்கியத்துவம்' என்ற தலைப்பில் நடத்தப்படும் இந்த போட்டியில் அனைத்து வயதினரும் கலந்துகொள்ளலாம்.

    தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி இவற்றில் ஏதேனும் ஒரு மொழியில் கடிதம் எழுதி முதன்மை அஞ்சல் துறை தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை-600002 என்ற முகவரிக்கு வருகிற டிசம்பர் மாதம் 14-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    உள்நாட்டு கடிதப்பிரிவில் 500 வார்த்தைகளுக்கு மிகாமலும், கடித உறை பிரிவில் எழுதுவோர் 1,000 வார்த்தைகளுக்கு மிகாமலும் கைப்பட எழுதி தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். 18 வயது நிறைவு பெற்றவர், பெறாதவர் என்ற வயதிற்கான சான்று கடிதத்தில் குறிப்பிட வேண்டும். போட்டியில் பங்குபெறுவோர் பெயர் மற்றும் பள்ளியின் முகவரி தவறாமல் குறிப்பிட வேண்டும்.

    போட்டியில் தமிழக வட்ட அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.25 ஆயிரமும், 2-வது பரிசு ரூ.10 ஆயிரமும், 3-வது பரிசு ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும். தேசிய அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.50 ஆயிரமும்,2-வது பரிசு ரூ.25 ஆயிரமும், 3-வது பரிசு ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இன்று அதிகாலை 4 மணியளவில் இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.
    • சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    புதுச்சேரி:

    புதுவையில் பருவமழைக் காலம் தொடங்கியுள்ளது.

    ஏற்கனவே காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது.

    ஆனால் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. லேசான மழை மட்டும் பெய்தது. காற்றழுத்த தாழ்வு நிலை ஆந்திராவுக்கு நகர்ந்தது.

    இதையடுத்து மீண்டும் புதுவையில் வெயில் அடித்தது. ஆனால் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருண்டு காணப்பட்டது.

    பகல் பொழுது முழுவதும் இதே நிலை நீடித்தது. அவ்வப்போது லேசான சாரல் பெய்தது. இன்று அதிகாலை 4 மணியளவில் இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.

    சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து மழை கொட்டியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    அதிகாலை நேரத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரியளவில் பாதிப்பு இல்லை. கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு அமைச்சர் நமச்சிவாயம் விடுமுறை அறிவித்தார்.

    அதே நேரத்தில் 7 மணிக்கு மேல் மழை படிப்படியாக குறைந்தது. இருப்பினும் வானம் மேக மூட்டத்துடன் இருண்டு காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யலாம் என்ற நிலை தொடர்கிறது.

    • சுற்றுலாப் பயணிகளுக்கு உள்ளூர் மக்கள் எவ்வித தொந்தரவும் கொடுப்பதில்லை.
    • மசாஜ் சென்டர்களை ரகசியமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    இந்திய அளவில் சுற்றுலாப்பயணிகளால் அதிகம் தேடப்படும் பட்டியலில் புதுச்சேரி இடம் பிடித்துள்ளது. ஆண்டுக்கு 20 லட்சம் சுற்றுலாப்பயணிகள் புதுச்சேரிக்கு வந்து செல்கின்றனர்.

    புதுச்சேரிக்கு தனித்த அடையாளங்கள், வரலாற்று சிறப்புகள் பல இருந்தாலும், வெளியூர்காரர்கள் புதுச்சேரியை கேளிக்கை நகரமாகவே நினைக்கின்றனர். அதேபோல் சுற்றுலாப் பயணிகளுக்கு உள்ளூர் மக்கள் எவ்வித தொந்தரவும் கொடுப்பதில்லை.

    இதன் காரணமாக கட்டுப்பாடற்ற ஒரு சுற்றுலாப்பிரதேசமாக புதுச்சேரி உருவெடுத்துள்ளது. சுற்றுலாப்பயணிகளின் எண்ணவோட்டமும் தாராளமான மது, கஞ்சா என தொடங்கி மாதுவரை எல்லையில்லாமல் நீண்டு கொண்டே செல்கிறது.

    சுற்றுலா பிரதேசமாக மாறிய புதுச்சேரி அதற்கான பின் விளைவுகளையும், உள்ளூர் மக்கள் மெல்ல உணர ஆரம்பித்துள்ளனர். கஞ்சாவுக்கு அடுத்து பெரும் தலைவலியாக மசாஜ் சென்டர்என்ற பெயரில் விபசாரமும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது.

    இதற்கான பிரத்யேக இணையதள செயலியை வைத்து வாடிக்கையாளர்களை ஆன்லைன் புக்கிங் செய்து வருவதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து மசாஜ் சென்டர்களுக்கு கடி வாளம் போட அரசு உத்தர விட்டுள்ளது. முதல்கட்டமாக புதுச்சேரியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் குறித்து போலீசாரும், நகராட்சி ஊழியர்களும் கணக்கெடுத்து வருகின்றனர்.

    இத்தகைய மசாஜ்சென்டர்களை யார் நடத்துகிறார்கள், மசாஜ் அல்லது ஆயுர்வேத முறை என எந்த பெயரில் இருந்தாலும், இதற்காக பிரத்யேக பயிற்சி மற்றும் கல்வி தகுதி கொண்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா? என பல்வேறு கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது ஒருபுறமிருக்க மசாஜ் சென்டர் பெயரில் விபசாரம் நடத்தப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் காவல் துறை இத்தகைய சென்டர்களை குறிவைத்து அதிரடி நடவடிக்கைக்கு தயாராகி வருகிறது.

    அனுமதியில்லாத மசாஜ் சென்டர்களை ரகசியமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    அப்படி அனுமதியில்லாமல் சந்தேகத்துக்கு இடமாக இயங்கும் மசாஜ் சென்டர்களை சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    • 3 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சின்னையன்பேட்டையை சேர்ந்தவர் சந்துரு (38). இவர் இந்திரா காந்தி சதுக்கம் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு இவரிடம் 3 ரவுடிகள் மாமூல் மற்றும் ஓசியில் சிகரெட் கேட்டு மிரட்டினர். சந்துரு தர மறுத்ததால், சோடா பாட்டில், கடையில் இருந்த பொருட்களால் தலையில் தாக்கினர்.

    இதில் அவர் காயமடைந்தார். இவரை தாக்கும் வீடியோ சமூகவலை தளங்களில் வைரலாக பரவியது.

    அவருக்கு உரிய சிகிச்சை தராதது மற்றும் வியாபாரிகளுக்கு பாதுகாப்பு இல்லாததை கண்டித்தும், நேற்று நேரு எம்.எல்.ஏ. தலைமையில் சமூக அமைப்புகள் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு நிலவியது.

    இதையடுத்து கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவின் பேரில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாராசைதன்யா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ரெட்டியார்பாளையம் வயல்வெளி பகுதி ரெயில்வே லைனில் பதுங்கியிருந்த குயவர் பாளையம் விஜய் (வயது20), 17 வயதுடைய 2 சிறுவர்களை துப்பாக்கி முனையில் போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது 3 பேரும் தப்பியோட முயன்றனர்.

    அப்போது தடுமாறி விழுந்ததில் 3 பேருக்கும் கை உடைந்தது. ஒரு சிறுவனுக்கு கால் எலும்பும் முறிந்தது. 3 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    திலாசுப்பேட்டையில் உண்டியல் திருட்டு கும்பலிடம் இடம் பெற்று இருந்த விஜய் தனியாக பிரிந்து தனது கூட்டாளிகளுடன் அடிதடி, மாமூல் வேட்டையில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • மது பிரியர்களும் பாக்கெட் சாராயத்தை குடித்து வந்ததோடு வாங்கி சென்று குடிப்பதையும் வாடிக்கையாக கொண்டிருந்தனர்.
    • பிளாஸ்டிக் பொருட்களுக்கு அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல்துறை தடை விதித்தது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலத்தில் 110 சாராயம், 92 கள்ளுக்கடைகள் உள்ளது.

    சாராயக்கடைகளில் பாக்கெட்டில் அடைத்து சாராயம் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த பாக்கெட் சாராயத்தை புதுச்சேரி மட்டுமின்றி எல்லை பகுதிகளில் உள்ள தமிழக சுற்றுப்புற பகுதியை சேர்ந்த மது பிரியர்களும் பாக்கெட் சாராயத்தை குடித்து வந்ததோடு வாங்கி சென்று குடிப்பதையும் வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

    இதற்கிடையே 2019-ம் ஆண்டு முதல் புதுச்சேரியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல்துறை தடை விதித்தது.

    இதனால் பாக்கெட்டில் சாராயம் விற்பது தடை செய்யப்பட்டது. இதையடுத்து புதுச்சேரி, காரைக்கால் சாராயக்கடை உரிமையாளர்கள் சங்கத்தினர் மீண்டும் பாக்கெட்டில் சாராயம் விற்க அனுமதி கோரினர். இதனால் பாக்கெட் சாராயம் விற்க கலால்துறை அனுமதி வழங்கியது.

    இந்த நிலையில் சமீபத்தில் அறிவில் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் துறை கலால்துறைக்கு ஒரு கடிதம் அனுப்பியது. அதில் பிளாஸ்டிக் தடையை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியது. இதனால் புதுச்சேரி மாநிலத்தில் மீண்டும் பாக்கெட் சாராயம் விற்பனைக்கு தடை விதித்து கலால்துறை உத்தர விட்டுள்ளது.

    இந்த உத்தரவு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என கலால்துறை அறிவுறுத்தியுள்ளது.

    • தலையில் காயமடைந்த சந்திரன் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • போலீசார் அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்து ஆம்புலன்சை கொண்டு வந்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி இந்திராகாந்தி சிலை அருகே தனியார் பார் அருகே பெட்டிக்கடை நடத்தி வருபவர் சந்திரன்.

    இவர் கடைக்கு நேற்று இரவு வந்த 3 ரவுடிகள் மாமூல் கேட்டு மிரட்டினர். சந்திரன் தரமறுத்ததால், ஆத்திரமடைந்த ரவுடிகள், கடையிலிருந்து சோடா பாட்டில் உட்பட பொருட்களை எடுத்து சந்திரனை தாக்கினர். சந்திரன் சத்தமிட்டதை தொடர்ந்து அவர்கள் தப்பியோடினர்.

    தலையில் காயமடைந்த சந்திரன் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு முதுலுதவி சிகிச்சை மட்டும் அளிக்கப்பட்டது. மீண்டும் இன்று காலை சாரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறும்படி சந்திரனிடம் அறிவுறுத்தினர். அவர் இன்று காலை சாரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்கு சென்றார்.

    அங்கு தங்களிடம் ஸ்கேன் வசதி இல்லாததால் மீண்டும் அரசு மருத்துவ மனைக்கு செல்லும்படி கூறினர். இதையடுத்து அவர் மீண்டும் அரசு மருத்துவமனைக்கு வந்தார்.

    இதனிடையே மாமூல் கேட்ட ரவுடிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி டி.ஜி.பி. அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த நேரு எம்.எல்.ஏ. தலைமையில் பொது நல அமைப்பினர் கூடினர். திராவிடர் விடுதலை கழகம் லோகு அய்யப்பன், தமிழர் களம் அழகர், நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் முருகானந்தம், பிராங்களின் பிரான்சுவா, அசோக் மற்றும் பொது நல அமைப்பு நிர்வாகிகள் அரசு மருத்துவமனை அருகே கூடியிருந்தனர்.

    அப்போது வியாபாரி சிகிச்சைக்காக அலைக்கழிக்கப்பட்ட சம்பவம் தெரிய வந்தது. உடனடியாக அவர்கள் அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து, வியாபாரியுடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். அரசுக்கு எதிராக கோஷங்களும் எழுப்பினர்.

    இதையடுத்து போலீசார் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சுகாதார இயக்குனர், அதிகாரிகள் வர வேண்டும் என பொதுநல அமைப்பினர் வலியுறுத்தினர். அதிகாரிகள் ஆய்வுக்கூட்டத்தில் இருந்ததால் உடனடியாக வர முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுநல அமைப்பினர், வியாபாரியை ஸ்டெச்சரில் படுக்க வைத்து அங்கிருந்து தள்ளிக்கொண்டு, ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்கள் சட்டசபையை கடந்து, கவர்னர் மாளிகை முன்பு வந்தனர். கவர்னர் மாளிகை முன்பு ஸ்டெச்சரை நிறுத்தி தரையில் அமர்ந்து, முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    அப்போது போலீசார் குவிக்கப்பட்டனர். கவர்னர் மாளிகை நுழைவு வாயிலில் இருந்து அவர்களை அப்புறப்படுத்தி, பாரதி பூங்கா நுழைவு வாயில் அருகே நிறுத்தினர். தகவலறிந்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ. ஆகியோரும் அங்கு வந்தனர்.

    அவர்களிடம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், நடந்த சம்பவத்தை தெரிவித்தனர். இதனால் கவர்னர் மாளிகை முன்பு மேலும் பதட்டம் ஏற்பட்டது. சுகாதாரத்துறை செயலர், இயக்குனர் நேரில் வந்து பேசினால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என அவர்கள் வலியுறுத்தினர். இதனால் போராட்டம் நீடித்தது.

    இதையடுத்து போலீசார் அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்து ஆம்புலன்சை கொண்டு வந்தனர். அதில் வியாபாரியை சிகிச்சைக்காக ஏற்றினர். அதில் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் இல்லை. இதனால் வியாபாரி என்றால் அலட்சியமா? அரசு அதிகாரி காயமடைந்தால் இப்படி செய்வீர்களா? டாக்டர் வந்தால்தான் ஆம்புலன்சை எடுத்து செல்ல அனுமதிப்போம் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

    பின்னர் அரசு மருத்துவமனை டாக்டர் வரவழைக்கப்பட்டார். அதன்பிறகு வியாபாரியுடன் ஆம்புலன்ஸ் புறப்பட்டு சென்றது. ஆனாலும், தொடர்ந்து கவர்னர் மாளிகை எதிரே சமூக நல அமைப்பினர் போராட்டத்தை தொடர்ந்தனர். கவர்னரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியதால் போராட்டம் தொடர்கிறது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    • தீபாவளிக்கான இலவச அரிசி, சர்க்கரை அக்டோபர் 21-ம் தேதி ரேஷனில் வழங்கப்படும்.
    • மாற்றுத் திறனாளிக்கான உதவித்தொகை ரூ.1,000 உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களைச் சந்தித்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அக்டோபர் 21-ம் தேதி புதுச்சேரியில் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு, தீபாவளிக்கான இலவச அரிசி, சர்க்கரை வழங்கப்படும்.

    தொடர்ந்து ரேஷனில் மாதா மாதம் இலவச அரிசி வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியம் தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் ஏற்கனவே அறிவித்தபடி, மாற்றுத் திறனாளிக்கான உதவித்தொகை ரூ.1,000 உயர்த்தப்பட்டுள்ளது. இப்போது மாதம் ரூ.2000 உதவித் தொகை பெறுபவர்கள் இனி, ரூ.3,000 உதவித் தொகை பெறுவார்கள். அதேபோல் ரூ.2500, ரூ.2700, ரூ.3500, ரூ.3800 உதவித் தொகை பெறுவோர் இனி கூடுதலாக ரூ.1000 சேர்த்து பெறுவர்.

    உயர்த்தப்பட்ட உதவித்தொகையின் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.24.5 கோடி கூடுதலாக செலவாகும். இதன் மூலம் புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதியில் 21,329 பயனாளிகள் பயன்பெறுவர்.

    இந்த உயர்த்தப்பட்ட உதவித்தொகை அக்டோபர் 2024-ம் தேதி முன் தேதியிட்டு நவம்பர் மாதம் முதல் சேர்த்து வழங்கப்படும் என தெரிவித்தார்.

    • கோவில் நிலத்தை மனைகளாக பிரித்து விற்பனை செய்வதற்கு அவர் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்து இருப்பதும் அம்பலமானது.
    • துணை கலெக்டர் ஜான்சன் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் கோவில்பத்து பார்வதீஸ்வரர் கோவில் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டது.

    இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் மணிகண்டன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் விசாரணை நடந்து வருகிறது.

    இந்த மோசடியில் ஈடுபட்டதாக நில புரோக்கர் சிவராமன், நில அளவையர் ரேணுகாதேவி, பத்திர எழுத்தர் கார்த்திக் ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த நில மோசடியில் காரைக்கால் துணை கலெக்டர் ஜான்சனுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

    மேலும் கோவில் நிலத்தை மனைகளாக பிரித்து விற்பனை செய்வதற்கு அவர் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்து இருப்பதும் அம்பலமானது.

    இதைத்தொடர்ந்து துணை கலெக்டர் ஜான்சனை கடந்த 10-ந் தேதி போலீசார் கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காரைக்கால் கிளை சிறையில் அடைத்தனர்.

    இந்தநிலையில் பார்வதீஸ்வரர் கோவில் மோசடி தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையை கலெக்டர் மணிகண்டன் அரசுக்கு அளித்தார்.

    இதைத் தொடர்ந்து துணை கலெக்டர் ஜான்சன் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரை சஸ்பெண்டு செய்து கவர்னர் கைலாஷ் நாதன் உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்ந்து காரைக்கால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள துணை கலெக்டர் ஜான்சனிடம், அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டதற்கான உத்தரவு நகல் அதிகாரிகள் வழங்கினர்.

    • கனமழை எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
    • மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

    இதனால் தமிழகத்தின் வட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகம், தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதியில் புதுச்சேரி-நெல்லூர் இடையே நாளை அதிகாலை கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதனால் இன்று புதுச்சேரிக்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மழையை எதிர்கொள்ள அரசு துறைகள் அனைத்தும் முடுக்கி விடப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க நிவாரண முகாம்கள், உணவு ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மழை பாதிப்புகளை உடனுக்குடன் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளது. அரசு துறைகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் தலா 30 பேர் கொண்ட 2 தேசிய பேரிடர் மீட்புக்குழு தயார் நிலையில் உள்ளது. நேற்று மதியம் 12 மணி முதல் புதுச்சேரியில் மழை பெய்ய தொடங்கியது.

    இந்த மழை இரவு வரை தொடர்ந்தது. தொடர் மழையால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீடுகளுக்குள் முடங்கினர். பள்ளி, கல்லூரிகளுக்கு 2-வது நாளாக இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடியது.

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் மழை காரணமாக வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பண்டிகைக்காக சாலையோரங்களில் கடைகளை வைக்க முடியாமல் வியாபாரிகள் அவதிப்படுகின்றனர்.

    கனமழை எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. கடலில் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது.

    இந்நிலையில் இன்று அதிகாலை முதல் புதுச்சேரியில் மழை இல்லை. ஆனால் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. எப்போது வேண்டுமனாலும் மழை பெய்யலாம் என்ற சூழல் நிலவுகிறது.

    புதுவை துறைமுகத்தில் 3-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    • வடதமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
    • இன்று புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியது.

    இதனையொட்டி வடதமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தளபதி விஜய் அழைக்கிறார் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.
    • விளம்பர பேனர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    புதுச்சேரி:

    தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு வரும் 27-ந்தேதி விக்கிரவாண்டில் நடைபெறுகிறது.

    இதனையொட்டி புதுச்சேரியில் விளம்பர பேனர்கள் மற்றும் சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டுள்ளன. இதில் கிழக்கு கடற்கரை சாலை சிவாஜி சிலை அருகே வைக்கப்பட்டுள்ள பேனரில் முதல்-அமைச்சர் ரங்கசாமியின் படம் இடம் பெற்றுள்ளது.

    2026-ல் ஆளப்போறான் தமிழன் என்ற வாசகத்துடன் தமிழக வெற்றி கழக முதல் மாநில மாநாடு... தளபதி விஜய் அழைக்கிறார் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

    வேட்டி சட்டையில் விஜய் நடந்து வருவது போன்றும் மறுபுறம் முதல்-அமைச்சர் என்ற பெயர் பலகையின் கீழ் விஜய் பேசுவது போல படம் இடம் பெற்றுள்ளது. இந்த விளம்பர பேனர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    என்.ஆர். காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியான பாரதிய ஜனதா நிர்வாகிகள் மத்தியில் இந்த பேனர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
    • சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு விடுமுறை.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

    இதையொட்டி சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.

    ×