என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
வெளிமாநில வாகனங்களை குறி வைத்து சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதிக்கக்கூடாது- போலீசாருக்கு முதல்-அமைச்சர் உத்தரவு
- போலீசாரின் இந்த அடாவடி செயலால், சுற்றுலா பயணிகள் மீண்டும் புதுச்சேரிக்கு வரவே தயக்கம் காட்டுகின்றனர்.
- போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோருக்கு சட்டப்படி அபராதம் விதியுங்கள் என்று போலீசாருக்கு அறிவுறுத்தினார்.
புதுச்சேரி:
சுற்றுலா தலமான புதுச்சேரிக்கு தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இதனால் வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் குறிப்பாக, பெங்களூரு, சென்னையில் இருந்து பெரும்பாலான சுற்றுலா பயணிகள் குடும்பமாகவும், நண்பர்களுடன் சேர்ந்து காரில் பைபாஸ் மற்றும் ஈ.சி.ஆர். சாலை வழியாக புதுச்சேரிக்கு வருகின்றனர்.
பின்னர், விடுதியில் தங்கி ராக் பீச், மெரினா கடற்கரை, சுண்ணாம்பாறு படகு குழாம், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம் உள்ளிட்ட சுற்றுலா இடங்களை சுற்றி பார்க்கின்றனர்.
மேலும், ஆரோவில்லுக்கு சென்றுவிட்டு வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் (வெள்ளிக்கிழமை) பிற்பகலில் புதுச்சேரி வரும் சுற்றுலா பயணிகள் 2 நாட்கள் தங்கி விட்டு சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்துவிட்டு (ஞாயிற்றுக்கிழமை) இரவு சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் எல்லைப்பகுதிகள் மற்றும் நகரப்பகுதிகள் உட்பட பல்வேறு இடங்களில் போக்குவரத்து விதிமீறல் என கூறி சுற்றுலா பயணிகளின் வாகனங்களை மட்டும் போலீசார் குறி வைத்து அபராதம் வசூலிப்பதாக கூறப்படுகிறது.
இதனால் அவர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். போலீசாரின் இந்த அடாவடி செயலால், சுற்றுலா பயணிகள் மீண்டும் புதுச்சேரிக்கு வரவே தயக்கம் காட்டுகின்றனர்.
இப்பிரச்சனை சட்டசபையிலும் எதிரொலித்தது. சுற்றுலா பயணிகள் வந்தால் மாநிலத்துக்கு வருவாய் கிடைக்கும். எனவே, போலீசார் சுற்றுலா பயணிகளிடம் கெடுபிடி காட்டக்கூடாது என்று முதல்-அமைச்சர் ரங்கசாமியும் அடிக்கடி அறிவுறுத்தி வந்தார். ஆனால், போலீசாரோ ஒவ்வொரு மாதமும் டார்கெட் வைத்து சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு அபராதம் விதித்து வந்தனர்.
குறிப்பாக, கருவடிக்குப்பம் ஈ.சி.ஆர். சாலை சித்தானந்த சுவாமிகள் கோவில் அருகே போலீசார் நின்று கொண்டு தினமும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் கார், இருசக்கர வாகனம், வேன் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி, சுற்றுலா பயணிகளிடம் காரில் சீட் பெல்ட் அணியவில்லை, தற்காலிக பெர்மிட் எடுக்கவில்லை, இருசக்கர வாகனத்தில் வருவோரிடம் ஹெல்மெட் அணியவில்லை என ஏதாவது காரணத்தை குறி இ-செல்லான் மிஷின் மூலம் உடனடியாக அபராதம் விதிக்கின்றனர்.
அதுவும், வார இறுதி நாட்களில் அதிகமான சுற்றுலா வாகனங்களை நிறுத்தி அபராதம் விதிப்பதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
ஆவணங்கள் சரியாக இருந்தாலும் கூட, போலீசார் அபராதம் வசூலிக்காமல் வெளிமாநில வாகனங்கள் செல்ல அனுமதிப்பதில்லை. போலீசார் கேட்கும் அபராதம் கொடுக்காவிட்டால், அதே இடத்தில் பல மணி நேரம் சுற்றுலா பயணிகளை நிற்க வைத்து மனஉளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர்.
இதனால் அவர்கள் அபராதத்தொகையை செலுத்திவிட்டு செல்லும் நிலை உள்ளது. இந்நிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கருவடிக்குப்பம் ஈ.சி.ஆர். சாலை வழியாக வந்தபோது, போலீசார் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்தி அபராதம் வசூலிப்பதை பார்த்துள்ளார்.
இதனால் கோபமடைந்த முதல்-அமைச்சர் ரங்கசாமி உடனே காவல்துறை அதிகாரிகளை அழைத்து கண்டித்துள்ளார். புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை குறி வைத்து அபராதம் விதிப்பது சுற்றுலாவை வெகுவாக பாதிக்கும். வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்தி அபராதம் விதிக்கக்கூடாது என்று உத்தரவிட்டார்.
அதேசமயம், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோருக்கு சட்டப்படி அபராதம் விதியுங்கள் என்று போலீசாருக்கு அறிவுறுத்தினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்