search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கனமழை-  வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட வாலிபர் மாயம்
    X

    கனமழை- வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட வாலிபர் மாயம்

    • சிறப்பு வகுப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட அய்யப்பனை தேடும் பணி நடந்தது.

    புதுச்சேரி:

    தென்மேற்கு பருவமழை கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தீவிரம் அடைந்துள்ளது.

    தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனிடையே மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக புதுவையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது.

    நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் 2 மேணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது. 11 செ.மீ. மழை பதிவானது. இதனால் நகர பகுதியில் சாலைகள் வெள்ளகாடானது.

    அதேநேரத்தில் நேற்று பகல் முழுவதும் கடும் வெயில் கொளுத்தியது. மாலையில் குளிர்ந்த காற்று வீசியது. இரவு 9.30 மணிக்கு இடி மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இரவு 11 மணி வரை மழை பெய்த வண்ணம் இருந்தது.

    இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் அவதி அடைந்தனர்.மழை நின்றாலும் ஒரு மணி நேரத்துக்கு பிறகு தான் நீர் வடிந்தது.


    மொத்தமாக கடந்த 24 மணி நேரத்தில் 15.5 செ.மீட்டர் மழை அளவு புதுச்சேரியில் பதிவானது.

    இதனிடையே லாஸ்பேட்டை மேட்டுப்பகுதியில் இருந்து மழை வெள்ளம் தாழ்வான பகுதியான ஜீவானந்தபுரம் ஓடை வழியாக கொக்கு பார்க்கு பாலத்தை கடந்து சென்றது.

    அப்போது ஒடையையொட்டி நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை எடுக்கச் சென்ற அந்த பகுதியை சேர்ந்த அய்யப்பன் என்பவர் வெள்ள நீரில் இழுத்து செல்லப்பட்டார். அவரை காப்பாற்ற சென்ற 2 பேரும் ஓடைவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

    அந்த பகுதியை சேர்ந்தவர்கள் விரைந்து செயல்பட்டு இருவரை மீட்டனர். அய்யப்பனை மீட்க முடியவில்லை. அவரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுட்டனர்.


    நள்ளிரவையும் கடந்து தட்டாஞ்சாவடி மற்றும் கொக்கு பார்க் பகுதியில் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட அய்யப்பனை தேடும் பணி நடந்தது. தகவல் அறிந்து தொகுதி எம்.எல்.ஏ.வான வைத்தியநாதன் அங்கு வந்து தேடும் பணியை முடுக்கி விட்டார்.

    இருப்பினும் அய்யப்பன் இன்னும் கிடைக்கவில்லை. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் புதுச்சேரியில் கோடையின் போது வெயிலின் தாக்கத்தால் கூடுதல் விடுமுறை விடப்பட்டதை ஈடுகட்டும் வகையில் சனிக்கிழமைகளில் வேலை நாளாக அரசு அறிவித்து இருந்தது.

    அதன்படி இன்று (சனிக்கிழமை) பள்ளிகள் செயல்படுவதாக இருந்தது. ஆனால் பலத்த மழை பெய்ததையொட்டி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக கல்வி துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×