search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    துரோகிகளுக்கு காங்கிரசில் இடமில்லை- நாராயணசாமி திட்டவட்டம்
    X

    துரோகிகளுக்கு காங்கிரசில் இடமில்லை- நாராயணசாமி திட்டவட்டம்

    • 5 ஆண்டுகள் முழுமை பெறாமல் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்தது.
    • வென்றாலும், தோற்றாலும் கட்சிக்காக நிற்பவர்களுக்கு சீட் வழங்குங்கள்.

    புதுச்சேரி:

    கடந்த 2016-ம் ஆண்டு நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி புதுவையில் அமைந்தது.

    2021 சட்டமன்ற தேர்தல் நெருக்கத்தில் காங்கிரசிலிருந்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் திடீரென ராஜினாமா செய்து கட்சி மாறியதால் ஆட்சி கவிழ்ந்தது. 5 ஆண்டுகள் முழுமை பெறாமல் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்தது.

    இதையடுத்து சட்டமன்ற தேர்தலில் அணி மாறிய பலரும் பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரசில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதனால் புதுவையில் இதுவரை ஆட்சியில் இடம்பெறாத பா.ஜனதா கூட்டணி ஆட்சியை அமைத்தது. சபாநாயகர், 2 அமைச்சர்கள், நியமன எம்.எல்.ஏ.க்கள், ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் என புதுவையில் பா.ஜனதாவுக்கு அடித்தளம் உருவாகியுள்ளது.

    இதற்கு கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் தான் காரணம் என காங்கிரசார் கருதுகின்றனர். இதை வெளிப்படுத்தும் விதமாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, பொதுமேடைகளில் காங்கிரசுக்கு துரோகம் இழைத்தவர்கள், நடுரோட்டில் நிற்பார்கள் என்றும், அவர்களை மீண்டும் கட்சியில் ஒரு காலத்திலும் இணைக்க மாட்டோம் என்றும் கூறி வருகிறார்.

    இத்தகைய சூழலில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான பூர்வாங்க பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. காங்கிரசிலிருந்து வெளியேறியவர்களை மீண்டும் கட்சிக்குள் இழுக்கும் முயற்சியில் ஒரு சில முன்னாள் அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

    இந்த விவகாரம் சமீபத்தில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் வெடித்தது. கூட்டத்தில் பேசிய சிலர், கட்சிக்கு துரோகம் செய்தவர்களை மீண்டும் அழைத்துவர சிலர் பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிகிறோம். இனியாவது கட்சிக்காரர்களுக்கு மதிப்பளியுங்கள். வென்றாலும், தோற்றாலும் கட்சிக்காக நிற்பவர்களுக்கு சீட் வழங்குங்கள். துரோகிகளை மீண்டும் கட்சியில் சேர்க்காதீர்கள் என பேசினர்.

    இதற்கு பதிலளிக்கும் வகையில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசும்போது, காங்கிரசுக்கு துரோகம் இழைத்தவர்களை மீண்டும் ஒருபோதும் இணைக்கமாட்டோம். அப்படி யாராவது இணைப்பு முயற்சியில் ஈடுபட்டால், அவர்களுக்கு நான்தான் முதல் எதிரி. கட்சி தலைமையிடம் கூறி அவர்களையும் கட்சியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுப்போம் என ஆவேசமாக கூறினார்.

    Next Story
    ×