search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    8 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரியில் ரேசன் கடைகள் இன்று மீண்டும் திறப்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    8 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரியில் ரேசன் கடைகள் இன்று மீண்டும் திறப்பு

    • ரேசன் கடைகளை திறக்க அரசு நடவடிக்கை எடுத்தது.
    • ரேசன் கடை திறக்க கவர்னர் கைலாஷ்நாதன் ஒப்புதல் வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் சிவப்பு ரேசன் கார்டுகளுக்கு 20 கிலோ அரிசியும், மஞ்சள் ரேசன்கார்டுக்கு 10 கிலோ அரிசியும் வழங்கப்பட்டு வந்தது.

    கடந்த 2016-ம் ஆண்டு முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது இலவச அரிசி வழங்குவதில் ஆளும் அரசுக்கும். அப்போதைய கவர்னர் கிரண்பேடிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதில் உள்துறை அமைச்சகம் தலையிட்டு இலவச அரிசிக்கு பதிலாக நேரடி பணப்பரிமாற்றதிட்டத்தை அமல்படுத்தியது.

    அதன்படி கிலோ அரிசிக்கு ரூ.30 என நிர்ணயம் செய்யப்பட்டு, சிவப்பு நிற அட்டைக்கு 20 கிலோவுக்கு ரூ.600, மஞ்சள் நிற அட்டைக்கு 10 கிலோ அரிசிக்கு ரூ.300 வழங்கப்பட்டு வந்தது.

    வெளி மார்க்கெட்டில் அரிசியின் விலை அதிகரித்து வருவதால், அரசு வழங்கும் மானிய உதவி போதவில்லை என பணத்துக்கு பதிலாக மீண்டும் ரேசன் அரிசி வழங்க வேண்டும் என புதுவை மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி ஆட்சிக்கு வந்தும், ரேசன் கடைகள் திறக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் சட்டமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்று 3 ஆண்டுகளாகியும் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி அரசு ரேசன் கடையை திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில், முதலமைச்சர் ரங்கசாமியிடம் பெண்கள் ரேசன் கடை திறந்து அரிசி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனையடுத்து புதுச்சேரியில் விரைவில் ரேசன் கடைகள் திறக்கப்படும் என ரங்கசாமி உறுதியளித்தார். இருப்பினும் பாராளுமன்ற தேர்தலில் ஆளும்கட்சி தோல்வியை சந்தித்தது.

    இதையடுத்து, ரேசன் கடைகளை திறக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதுதொடர்பாக கடந்த ஆகஸ்ட்டு மாதம் பட்ஜெட் கூட்டத்தில் விரைவில் ரேசன் கடைகள் திறக்கப்படும்' என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

    தொடர்ந்து ரேசன்கடை திறக்க கவர்னர் கைலாஷ்நாதன் ஒப்புதல் வழங்கினார்.

    முதல் கட்டமாக தீபாவளி பரிசாக அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் 10 கிலோ இலவச அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை இன்று முதல் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.

    இதன்படி இன்று மாலை ரேசன் கடை திறப்பு மற்றும் தீபாவளி இலவச பொருட்கள் வழங்கும் விழா மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை சாலையில் நடைபெற உள்ளது. கவர்னர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் ரேசன் கடையை திறந்து வைத்து, இலவச அரிசி, சர்க்கரையை பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைக்கின்றனர்.

    விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன் தேனீ.ஜெயக்குமார். திருமுருகன், சாய்.ஜெ.சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல். ஏக்கள் ஏ.கே.டி ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், சிவசங்கர், தலைமை செயலர் சரத் சவுகான், குடிமை பொருள் வழங்கல் துறை செயலர் முத்தம்மா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    Next Story
    ×