search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ரங்கசாமி
    X

    மாநில அந்தஸ்து விவகாரம்... இந்தியா கூட்டணி எம்.பி.க்களும் பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும்- ரங்கசாமி

    • திட்டங்களை விரைவாக செயல்படுத்த மாநில அந்தஸ்து தேவை.
    • எம்.பி.க்கள் புதுச்சேரிக்காக கேள்வி எழுப்பி மாநில அந்தஸ்து தர வலியுறுத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலளித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    சபையில் பேசிய அனைத்து எம்.எல்.ஏ.க்களும் புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து பெறுவது குறித்து பேசினர். மக்களின் எண்ணமும் அதுவாக தான் உள்ளது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு மத்திய அரசை வலியுறுத்தி கொண்டே உள்ளோம்.

    பல முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியுள்ளோம். கடந்த முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியபோது மத்திய அரசு மாநில அந்தஸ்து தர வாய்ப்பில்லை என்று அறிவித்துவிட்டது.

    எம்.எல்.ஏ.க்கள் தெரிவிக்கும் குறைகளை சரி செய்யவும், கேட்கும் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றவும் மாநில அந்தஸ்து தேவை.

    மத்திய அரசை கேட்டு வலியுறுத்தி வருகிறோம். அரசு என்றால் சட்டசபை என இல்லாமல் கவர்னர் ஒப்புதலும் மிக அவசியம். மறைவாக இருந்த இதை உச்சநீதிமன்றம் வரை சென்று கவர்னருக்கு தான் அதிகாரம் என வெளிப்படையாக தெரிவிக்க செய்து விட்டனர். அதன் காரணமாக அனைத்தும் காலதாமதம் ஆகிறது.

    கோப்புகளை பார்க்கும் எல்.டி.சி., முதல் தலைமைச் செயலர் வரை அவர்கள் என்ன நினைக்கின்றார்களோ அதுதான் நிறைவேற வேண்டும் என நினைக்கின்றனர்.

    அதனால் கோப்பு தேங்கி கிடக்கிறது. இப்படி இருந்தால் மக்கள் எண்ணங்கள் எப்படி நிறைவேறும்? இதனை சுட்டி காட்டி மத்திய அரசிடம் மாநில அந்தஸ்து கேட்டு வலியுறுத்துகிறோம்.

    திட்டங்களை விரைவாக செயல்படுத்த மாநில அந்தஸ்து தேவை. எம்.பி.க்கள் புதுச்சேரிக்காக கேள்வி எழுப்பி மாநில அந்தஸ்து தர வலியுறுத்த வேண்டும்.

    இதன் மூலம் வருவாய் மற்றும் மத்திய அரசின் உதவி அதிகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதனால் மாநில அந்தஸ்து பெற தயக்கம் இல்லை.

    மாநில அந்தஸ்து பெற்றால் சிரமமின்றி புதுச்சேரிக்கான திட்டங்களை நிறைவேற்ற முடியும். அரசு பொறுப்பேற்ற போது, காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் 3 மாதத்தில் நிரப்பலாம் என நினைத்தால், 3 ஆண்டு முடிந்தும் நிரப்ப முடியாத நிலை உள்ளது.

    மாநில அந்தஸ்து தான் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. எனவே நமது எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்த வேண்டும். இந்தியா கூட்டணிக்கும் அதிக எம்.பி.,க்கள் கிடைத்துள்ளனர். அவர்களும் பாராளுமன்றத்தில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்க வலியுறுத்த வேண்டும்.

    நாமும் டெல்லி சென்று பிரதமர் உள்ளிட்டோரை சந்தித்து பேசலாம். புதுச்சேரி மாநிலம் பெரிய அளவில் வளர்ச்சி காண மாநில அந்தஸ்து வேண்டும்.

    கடந்த காலத்தில் கருத்து வேறுபாடுகளை கோப்புகளில் கவர்னர் வெளிப்படுத்த தொடங்கினர். அதுவும் வளர்ச்சிக்கு தடையானது.

    இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசினார்.

    Next Story
    ×