search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    இதயம் ஒரு கோவில்- ஆயுளை அதிகரிக்கும் மூச்சுப்பயிற்சி
    X

    இதயம் ஒரு கோவில்- ஆயுளை அதிகரிக்கும் மூச்சுப்பயிற்சி

    • குழந்தைகள் அவ்வாறு ஒரு நிமிடத்துக்கு 50 முறை கூட மூச்சு விடும்.
    • ஒரு நாளில் அரைமணி நேரமாவது மூச்சுப்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க வேண்டும்.

    குழந்தை பிறந்த உடன் அழத் தொடங்கும். தாயின் கருவறையில் 10 மாதங்கள் சுகமாக இருந்த குழந்தை வெளி உலகுக்கு வந்தவுடன் மூச்சை உள்இழுக்கும். அது அழுகையாக மாறும்.

    அவ்வாறு குழந்தை அழவில்லை என்றால் மூச்சு விடவில்லை என்று அர்த்தம். உடனே பிரசவ பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவரோ, செவிலியர்களோ குழந்தையை தலைகீழாக பிடிப்பார்கள். அப்போது வயிற்றுக்குள் இருக்கும் கெட்ட நீர், உமிழ் நீர், பனிக்குட நீர் அனைத்தும் வெளியே வந்து விடும். உடனே மூச்சுக்குழாய் இயல்பாகும். பின்னர் குழந்தை மூச்சை உள் இழுக்கும். காற்று உள்ளே போனவுடன் மூடியிருந்த நுரையீரல் திறக்கும்.

    தாயின் வயிற்றில் இருந்து வெளியே வரும் குழந்தைக்கு தன்னை சுற்றி நடப்பது என்னவென்று புரியாது. கர்ப்பப்பையில் பாதுகாப்பாக இருந்த குழந்தை வெளியே வரும்போது உடல் மீது காற்றுப்படும். அழவைப்பதற்காக உடலை தட்டிப்பார்ப்பார்கள். முதுகில் தண்ணீர் தெளிப்பார்கள். அந்த சமயம் மூச்சு உள்ளே போய் வெளியே வரும்போது குழந்தை தானாக அழத் தொடங்கும். குழந்தை மூச்சை இழுத்து, இழுத்து அழும். உள்ளே போன காற்று வெளியே தொண்டை பகுதியில் வரும்போது அழுகையாக வரும்.

    எனவே மூச்சு என்பது பிறப்பில் தொடங்கி இறப்பு வரை நம்மை தொடர்ந்து கொண்டே இருக்கும். மூச்சு தான் ஒரு மனிதரின் வாழ்நாளை நிர்ணயிக்கக் கூடிய முக்கியமான அறிகுறி. யாரால் ஆழமான மூச்சு விட முடிகிறதோ அவர் அதிக நாட்கள் இருப்பார்கள். எவ்வளவு தூரம் நீங்கள் மூச்சை நன்றாக இழுத்து விடுகிறீர்களோ அவ்வளவு நாள் உயிரோடு இருப்பீர்கள். 100 வயது வரை வாழ்வீர்கள்.

    நாமெல்லாம் கேள்விப்பட்டு இருப்போம். சாமியார்கள் காட்டுக்குள் சென்று ஒற்றைக்காலில் நின்று நன்றாக மூச்சை உள் இழுத்து விடுவார்கள். உள்வாங்கும் மூச்சை நிறுத்தி நிதானமாக அவர்கள் வெளியே விடுவார்கள். நிமிடத்துக்கு அவர்கள் 5 முறை தான் மூச்சு விடுவார்கள். தியானத்தில் அமர்ந்து ஓம் என்ற சொல்லை நீண்ட நேரம் ஒலிக்க செய்வார்கள். அது கூட ஒரு மூச்சு பயிற்சி தான். மூச்சை உள்இழுத்து வெளியேற்றும் நேரம் அதிகரிக்க, அதிகரிக்க அவர்களின் வாழ்நாள் காலமும் அதிகரிக்கிறது. இதனால் 'அந்த சாமியார் 100 வயதுக்கு மேல் வாழ்ந்தார், இவர் 150 வயது வரை வாழ்ந்தார்' என்று முன்னோர்கள் சொல்வதை கேள்விப்பட்டு இருப்போம்.

    அதேபோல நாமும் உடல் நலத்துடன் வாழ வேண்டும் என்றால் நாம் விடும் மூச்சும் சிறப்பானதாக இருக்க வேண்டும். சாப்பிடுவதை கூட 2 நாளைக்கு நிறுத்தி வைத்துக் கொள்ளலாம், தண்ணீர் குடிக்காமல் சில மணி நேரங்கள் இருக்கலாம். ஆனால் மூச்சு இல்லாமல் 3 நிமிடத்துக்கு மேல் இருக்க முடியாது. மூச்சு என்பது பிராணன். அதாவது நமது உடலுக்குள் செல்லும் பிராண வாயு. அது கண்ணுக்கு தெரியாத காற்று.

    காரில் உள்ள டயரில் காற்று பிடிக்கிறோம். உள்ளே போகும் காற்றால் டியூப் விரிந்து டயர் பெரிதாவது போல் நாம் சுவாசிக்கும் காற்று உள்ளே போய் நுரையீரல் விரிகிறது. நுரையீரலுக்குள் சின்ன, சின்ன திசுக்கள் இருக்கிறது. அதற்கு அல்வியோலி என்று பெயர். தேன்கூட்டை பார்த்தால் உங்களுக்கு தெரியும். அதில் சிறு, சிறு ஓட்டைகள் இருக்கும். அதுபோல் தான் நுரையீரலிலும் சிறு துவாரங்கள் இருக்கும். தேன் கூடு நுரையீரல் என்றால் அதற்குள் இருக்கும் சின்ன, சின்ன அறைகள் தான் அல்வியோலி. அதன் சுவர்கள் மிக மெல்லியதாக அதாவது 0.1 மைக்ரான் அளவே இருக்கும். அந்த அல்வியோலியில் ரத்தக்குழாய்களும் இருக்கும். மயிரிழையை விட 100-ல் ஒரு பங்கு கொண்ட அந்த மெல்லிய இழை (capillary) வழியாக ரத்தம் செல்லும். அது நுரையீரலுக்கு உள்ளே இருக்கிறது. காற்று உள்ளே போய் அந்த மெல்லிய இழைக்குள்ளும் செல்லும். ஆக்சிஜன் உள்ளே சென்றவுடன் கொஞ்சம் நீல நிறமாக இருக்கும் ரத்தம் சிவப்பாக மாறி விடும். ரத்த சிவப்பணுக்களால் ரத்தம் சிவப்பாக இருக்கிறது.

    நாம் உள்வாங்கும் மூச்சு பிராண வாயு எனப்படும் ஆக்சிஜன். சுவாசித்து வெளி விடும் மூச்சு கரியமில வாயு ஆகும். மூச்சு உள்ளே செல்வதும், வெளியே வருவதும் இயல்பாக நடக்கக் கூடியது. தூங்கும் போது தானாகவே மூச்சு விடுகிறோம். அது நமக்கு தெரிவதில்லை.செயற்கையான மூச்சு என்பது நாம் சில நிமிடங்கள் மூச்சைப்பிடித்துக் கொள்ளலாம். பின்னர் அதனை பெருமூச்சாக விடலாம். இவ்வாறு நாமே மூச்சை உள்வாங்கி விடுவது செயற்கை மூச்சு.

    குழந்தை தூங்கும் போது பார்த்தால் வயிறு மேலும், கீழும் ஏறி இறங்கும். குழந்தைகள் அவ்வாறு ஒரு நிமிடத்துக்கு 50 முறை கூட மூச்சு விடும். பெரியவர்கள் என்றால் நிமிடத்துக்கு 20 முறை மூச்சு விடுவார்கள்.

    மாரத்தான் ஓடும் வீரருக்கு அதிகம் மூச்சு வாங்கும். அதற்கு காரணம் அவர் ஓடிக்கொண்டே இருப்பதால் உடலுக்கு அதிக ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இதை மூளை கண்டறிந்து மூச்சை அதிகமாக விட தூண்டுகிறது. வயிறு பசிக்கிறது என்றால் வயிற்றில் இருக்கிற ஆகாரம் காலியாகி விட்டது. வயிறு காலியானதும் உள்ளே இருக்கும் திசுக்கள் மூளைக்கு சொல்கிறது. மூளை நமக்கு வயிறு காலியாக உள்ள விவரத்தை பசி மூலம் அறிவுறுத்துகிறது. மூளைக்கும், வயிற்றுக்கும் சம்பந்தம் உண்டு. அதேபோல் மூளைக்கும் நுரையீரலுக்கும், இதயத்துக்கும் தொடர்பு உண்டு. ஒவ்வொரு உறுப்பும் ஒன்றோடு ஒன்று இணைந்து வேலை செய்யும். எந்த உறுப்புகளும் தனியாக வேலை செய்வது இல்லை.

    நாம் சாப்பிடுகிறோம். வயிறு ஜீரணம் செய்கிறது. ஜீரணம் செய்த ஆகாரத்தை சிறுகுடலுக்கு அனுப்புகிறது. அங்கிருந்து கல்லீரலுக்கு செல்லும் ஆகாரம் குளுக்கோசாக மாற்றப்பட்டு உடல் முழுக்க சென்று சேருகிறது. நாம் சாப்பிடும்போது அது இட்லி. உள்ளே சென்றவுடன் ரத்தத்துக்கு தேவையான குளுக்கோசாக மாற்றப்படுகிறது. குளுக்கோஸ் போனால் தான் மூளை வேலை செய்யும். மூளை வேலை செய்தால் மூச்சு வரும். மூச்சு வரும் போது இதயம் செயல்படும். இது ஒரு சுழற்சி. கடவுள் பெரிய மேஜிக் போன்று நம்மை உருவாக்கி இருக்கிறார். இதைவிட ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு உலகத்தில் எதுவும் கிடையாது.

    மூச்சு இருப்பவர் தான் உயிரோடு இருக்கிறார் என்று அர்த்தம். மூச்சு இல்லையென்றால் மனிதனின் ஆட்டம் நின்று போய் விடும். குறைவான, நிறைவான மூச்சு விடுபவர்கள் நீண்ட நாட்கள் வாழ்வார்கள். சாதாரணமாக விழித்து இருக்கும் போது ஒரு நிமிடத்துக்கு 18 முறை மூச்சு விடுகிறோம். தூங்கும் போது பார்த்தால் 16-ல் இருந்து 20 முறை மூச்சு விடுவார்கள்.

    மரத்துக்கு அடியில் இரவில் படுக்கக் கூடாது. ஏன் என்றால் பகலில் ஆக்சிஜனை வெளியிடும் மரம் இரவில் கரியமில வாயுவை வெளியிடுகிறது. அந்த வாயு நமக்கு உடல் நலக்குறைவை ஏற்படுத்தும். மரத்துக்கும் உயிர் இருப்பதால் தான் அது வளர்கிறது. மரத்தின் வளர்ச்சிக்கு காரணம் தண்ணீர், அடுத்து ஆக்சிஜன். உதாரணத்துக்கு ஒரு பூந்தொட்டியின் மேல் பகுதியை முழுமையாக மூடி விடுவோம், கீழ் பகுதியில் மட்டும் தண்ணீர் விடுவோம். அப்படி செய்தால் சில நாட்களில் அந்த செடி அழுகிப்போய் விடும். அதேபோல தண்ணீர் ஊற்றவில்லை என்றாலும் செடி வாடிப்போய் விடும். மரத்துக்கு தண்ணீரும், ஆக்சிஜனும் முக்கியம்.

    அதேபோல மனிதருக்கு குடிநீரும், ஆக்சிஜனும் முக்கியம். ஆக்சிஜன் என்பது நாம் சுவாசிக்கும் காற்று. அந்த காற்றை நன்றாக இழுத்து விட பழக வேண்டும். முதலில் மூச்சை நன்றாக உள் இழுத்துக் கொண்டு சற்று நிறுத்த வேண்டும். பின்னர் மெதுவாக மூச்சை வெளியே விட வேண்டும். அதன்பின் மீண்டும் மூச்சை இழுத்து வைத்து வெளியே விட வேண்டும். ஒரு நிமிடத்துக்கு 5 தடவை என கணக்கில் வைத்து மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டும். மூச்சு உள்ளே போகும் போது வயிறு வெளியே வர வேண்டும், மூச்சை வெளியே விடும்போது வயிறு உள்ளே போக வேண்டும். இது தான் மூச்சு பயிற்சிக்கான சரியான முறை. ஒரு நாளில் அரைமணி நேரமாவது மூச்சுப்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க வேண்டும்.

    மூச்சு பயிற்சி கட்டுப்பாட்டினால் நம் உடலுக்கு அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும். ரத்த அழுத்தம் குறையும், சர்க்கரை அளவு கட்டுப்படும். மன அழுத்தம் குறைந்து வாழ்நாள் அதிகரிக்கும். உடல் எடையும் குறையும். ஆஸ்துமா வராது. மூச்சு பயிற்சி செய்யும் போது வயிறு காலியாக இருக்க வேண்டும். அதற்கு சரியான நேரம் அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை. இந்த நேரத்தை பிரம்ம முகூர்த்தம், அமிர்தவேளை என்றும் அழைப்பது உண்டு. அந்த அதிகாலை வேளையில் பிரபஞ்சத்தில் ஆக்சிஜன் நிறைந்து காணப்படும்.

    அந்த ஆக்சிஜனை உள் இழுக்கும் போது நமக்கு கூடுதல் பலன் கிடைக்கும். அன்றைய நாள் முழுவதும் நாம் சுறுசுறுப்பாக இருக்கலாம். எதிர்ப்பு சக்தி கிடைக்கும். மூளை சுறுசுறுப்பாக இருக்கும். இதயம், நுரையீரல் பலம் பெறும். அந்த சமயம் புதிதாக நல்ல எண்ணங்கள் நம் மனதில் உதிக்கும். அதிகாலை வேளையில் எழுந்து மூச்சு பயிற்சி செய்வதை குழந்தைகளுக்கும் பழக்க வேண்டும்.

    அதேபோல நுரையீரலை தாக்கும் செயல்களையும் நாம் தவிர்க்க வேண்டும். வீட்டில் இருந்து ஒருவர் சிகரெட் பிடிக்கிறார் என்றால் அந்த புகை அவரை மட்டும் தாக்குவது இல்லை, அவரது மனைவி, குழந்தைகளையும் பாதிக்கச் செய்கிறது.

    ரோட்டில் பறக்கும் தூசு, புழுதியில் இருந்து உங்களை காத்துக் கொள்ளுங்கள். கொரோனா காலக்கட்டத்தில் நாம் முக கவசம் அணியக் கற்றுக் கொண்டு விட்டோம். அதேபோல ரோடுகளில் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் போது குழந்தைகளும், நீங்களும் முக கவசம் அணிய பழகிக் கொள்ளுங்கள். அவ்வாறு நம்மை நாமே காத்துக் கொண்டால் ஆஸ்துமா, அலர்ஜி போன்ற பிரச்சினைகள் நெருங்காது. வந்தபின் ஆஸ்பத்திரிக்கு ஓடுவதை விட வராமல் நம்மை நாம் காத்துக் கொள்வதே புத்திசாலித்தனம்.

    தொடர்புக்கு: info@kghospital.com, 98422 66630

    Next Story
    ×