search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு (Sports)

    பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் மற்ற 3 அணிகள் எவை?
    X

    'பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறும் மற்ற 3 அணிகள் எவை?

    • லக்னோ அணி டெல்லி, மும்பையுடன் மோதுகிறது.
    • 4-வது அணியாக நுழைவதில் சி.எஸ்.கே. டெல்லி அல்லது லக்னோ, பெங்களூரு, குஜராத் இடையே போட்டி நிலவுகிறது.

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இதுவரை 60 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இன்னும் 10 'லீக்'போட்டிகள் எஞ்சியுள்ளன.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 'பிளே ஆப்' சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. அந்த அணி 9 வெற்றி, 3 தோல்வியுடன் 18 புள்ளிகள் பெற்றுள்ளன.

    கொல்கத்தாவுக்கு இன்னும் 2 ஆட்டங்கள் எஞ்சியுள்ளது. குஜராத்துடன் 13-ந்தேதியும், ராஜஸ்தானுடன் 19-ந்தேதியும் மோதுகிறது. அந்த அணி முதல் 2 இடங்களில் இருப்பது உறுதியாகி உள்ளது.

    மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகியவை பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து ஏற்கனவே வெளியேறி விட்டன. 8 புள்ளியுடன் இருக்கும் மும்பைக்கு ஒரு ஆட்டம் மட்டுமே இருக்கிறது. 8 புள்ளியுடன் உள்ள பஞ்சாப் அணிக்கு 2 ஆட்டம் உள்ளது.

    'பிளே ஆப்' சுற்றுக்கு 3 இடத்துக்கான போட்டியில் 7 அணிகள் உள்ளன. 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும் 3 அணிகள் எவை என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ராஜஸ்தான் அணி 16 புள்ளியுடன் 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி எஞ்சிய போட்டிகளில் சென்னை, பஞ்சாப், கொல்கத்தாவுடன் மோத வேண்டியுள்ளது. இதில் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அந்த அணி 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும். 3 ஆட்டத்தில் தோற்றாலும் அந்த அணிக்கு பெரிய பாதிப்பு இருக்காது என்றே கருதப்படுகிறது.

    டெல்லி, லக்னோவை விட நிகர ரன்ரேட் குறைவாக இருந்தால் மட்டுமே வாய்ப்பை இழக்கும். ராஜஸ்தான் ரன் ரேட்டில் நல்ல நிலையில் இருக்கிறது. இதனால் அந்த அணி தகுதி பெறுவதில் சிக்கல் இருக்காது.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் 14 புள்ளியுடன் 3-வது இடத்தில் உள்ளது. எஞ்சிய போட்டிகளில் குஜராத், பஞ்சாப்புடன் மோத வேண்டியுள்ளது. இதில் ஒன்றில் வென்றாலே 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்று விடும். ஏனென்றால் ரன் ரேட்டில் வலுவாக இருக்கிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 3 அணிகளும் ஒரே நிலையில் 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளன. நிகர ரன் ரேட் அடிப்படையில் சென்னை 4-வது இடத்திலும், டெல்லி 5-வது இடத்திலும், லக்னோ 6-வது இடத்திலும் உள்ளன.

    சென்னை அணி எஞ்சிய 2 ஆட்டத்தில் (ராஜஸ்தான், பெங்களூரு) வெற்றி பெற்றால் 16 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். டெல்லி அணி கடைசி இரண்டிலும் வென்றால் 16 புள்ளியை எட்டும். ஆனால் அந்த அணியின் ரன் ரேட் மோசமாக இருக்கிறது. இதில் ஒன்றில் தோற்றாலும் மற்ற அணிகள் முடிவை பொறுத்து சென்னையின் 'பிளே ஆப்' நிலை இருக்கும்.

    டெல்லி அணி எஞ்சிய ஆட்டங்களில் பெங்களூரு (இன்று), லக்னோ (14-ந் தேதி) மோதுகிறது. இந்த இரண்டிலும் வெல்ல வேண்டும். அதே நேரத்தில் மற்ற ஆட்டத்தின் முடிவை பொறுத்தும் 'பிளே ஆப்' சுற்று நிலை இருக்கும்.

    லக்னோ அணி டெல்லி, மும்பையுடன் மோதுகிறது. இதில் இரண்டிலும் வெல்ல வேண்டும். நிகர ரன் ரேட்டில் அந்த அணி மோசமாக இருக்கிறது.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 10 புள்ளியுடன் உள்ளது. 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் 14 புள்ளியை எட்டும். மற்ற அணிகளும் 14 புள்ளியை எடுக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் 2 ஆட்டத்தில் வென்று போட்டியில் உள்ள மற்ற அணிகள் தோற்க வேண்டும். பெங்களூரு அணியின் நிலைதான் குஜராத்துக்கு இருக்கிறது.

    எஞ்சிய 3 அணிகளில் ராஜஸ்தான், ஐதராபாத் 'பிளே ஆப்'சுற்றுக்குள் நுழைய அதிகமான வாய்ப்பு உள்ளது. 4-வது அணியாக நுழைவதில் சி.எஸ்.கே. டெல்லி அல்லது லக்னோ, பெங்களூரு, குஜராத் இடையே போட்டி நிலவுகிறது.

    Next Story
    ×