search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா?
    X

    சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா?

    • சென்னை சூப்பர் கிங்ஸ் நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
    • சென்னை அணியின் பந்து வீச்சு முன்னேற்றம் காண வேண்டியது அவசியம்.

    பெங்களூரு:

    17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடர் கடந்த மார்ச் 22-ந்தேதி சென்னையில் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இப்போட்டிகள் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    ஒவ்வொரு அணியும் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். இதுவரை 66 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இன்னும் 4 ஆட்டங்கள் எஞ்சி உள்ள உள்ளன.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முன்னேறியது.

    நேற்று ஐதராபாத்-குஜராத் அணிகள் மோத இருந்த ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. இதனால் ஐதராபாத் 3-வது அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

    பிளே-ஆப் சுற்றுக்கு 4-வது அணியாக தகுதி பெறப் போவது யார்? என்பது நாளை தெரியும். பெங்களூருவில் நாளை நடக்கும் 68-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

    14 புள்ளிகளுடன் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டாலும் சென்னை அணி தகுதி பெற்று விடும்.

    ஒருவேளை தோற்கும்பட்சத்தில் அது மோசமான தோல்வியாக இருக்கக் கூடாது. இது போன்ற சூழ்நிலையை தவிர்க்க வெற்றி பெற வேண்டியது சென்னை அணிக்கு கட்டாயம்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பலமாக இருக்கிறது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், டேரில் மிட்செல், ஷிவம் துபே ஆகியோர் உள்ளனர். ஆல்-ரவுண்டர் ஜடேஜா நல்ல நிலையில் உள்ளார். கடைசி கட்டத்தில் டோனி அதிரடியாக விளையாடுகிறார்.

    சென்னை அணியின் பந்து வீச்சு முன்னேற்றம் காண வேண்டியது அவசியம். பதிரனா, முஸ்தாபிசுர் ரகுமான் ஆகியோர் இல்லாதது பாதிப்பை காட்டுகிறது. எனவே பந்து வீச்சில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியது முக்கியம்.

    பெங்களூரு அணி 12 புள்ளிகளுடன் உள்ளது. அந்த அணி பிளே-ஆப் சுற்றுக்கு நாளைய போட்டியில் கண்டிப்பாக தகுதி பெற முடியும். தோற்றாலும் அல்லது மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டாலும் பெங்களூரு அணி வெளியேறி விடும்.

    மேலும் பெங்களூரு அணி வெற்றி பெற்றாலும் சென்னை அணியின் ரன்-ரேட்டை முந்த வேண்டும். பெங்களூரு முதலில் பேட்டிங் செய்து 200 ரன்கள் எடுத்தால், 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் அல்லது 2-வது பேட்டிங் செய்தால் 11 பந்துகள் மீதமுள்ள நிலையில் வெல்ல வேண்டும். ஒருவேளை மழையால் ஓவர்கள் குறைக்கப்பட்டால் பெங்களூரு அணிக்கு கடினமாக அமையும்.

    அந்த அணி தொடர்ந்து 5 வெற்றி பெற்றுள்ளதால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது.

    பெங்களூரு அணி பேட்டிங்கில் விராட்கோலி நல்ல நிலையில் உள்ளார். அவர் இதுவரை 661 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். மேலும் டுபிளிசிஸ், ரஜத் படிதார், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக் ஆகிய பேட்ஸ் மேன்களும் உள்ளனர்.

    பந்து வீச்சில் முகமது சிராஜ், யஷ் தயாள், பெர்குசன், கரண் சர்மா ஆகியோர் உள்ளனர். பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் சிறிது என்பதால் இரு அணிகளும் ரன்களை குவிக்க முயற்சிக்கும்.

    மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை அதிகாரபூர்வமாக இழந்து விட்டன. டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகளின் வாய்ப்புகள் ஏறக்குறைய முடிந்து விட்டது.

    இன்று மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ வெற்றி பெற்றாலும் அந்த அணியின் ரன்ரேட் (-0.787) மிகவும் மோசமாக இருப்பதால் அந்த வெற்றி பலன் அளிக்காது.

    Next Story
    ×