என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
செஸ் ஒலிம்பியாட் போட்டி: இந்தியா முதல் சுற்றில் ஜிம்பாப்வே அணியுடன் மோதல்
- பெண்கள் அணி தஜிகஸ்தானை சந்திக்கிறது.
- உலக செஸ் சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
சென்னை:
சர்வதேச செஸ் சம்மேளனம் சார்பில் 1927-ம் ஆண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டி லண்டனில் அறிமுகம் செய்யப்பட்டது.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தும் சிறப்பு மிக்க வாய்ப்பை தமிழ்நாடு பெற்று உள்ளது.
சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள "போர் பாயிண்ட்ஸ்" ரிசார்ட் பிரமாண்ட 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து முடிந்தன.
இப்போட்டி ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான ராஜா, ராணி காய்களை அறிமுகம் செய்து 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை முறைப்படி தொடங்கி வைத்தார்.
தொடக்க விழாவான நேற்று போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. இன்று மாலை 3 மணி முதல் போட்டிகள் தொடங்கும்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
செஸ் ஒலிம்பியாட் வரலாற்றிலேயே சென்னை போட்டிக்குத்தான் 188 அணிகள் ஓபன் பிரிவிலும், பெண்கள் பிரிவில் 162 அணிகளும் பங்கேற்கின்றன. உலக செஸ் சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி மொத்தம் 11 சுற்றுகளை கொண்டது. சுவிஸ் முறையில் ஆட்டங்கள் நடைபெறும்.
ஒவ்வொரு அணியிலும் 5 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் ஒருவர் மாற்று வீரராக இருப்பார். 4 பேர் தான் ஆடுவார்கள். வெற்றி பெற்ற அணிகள் வெற்றி பெற்ற அணியுடனும், தோல்வி அடைந்த அணிகள் தோல்வி அடைந்த அணியுடனும் விளையாடும் வகையில் போட்டி முறை அமைக்கப்பட்டுள்ளது.
வெற்றிக்கு 2 புள்ளியும், டிராவுக்கு அரை புள்ளியும் வழங்கப்படும். தோற்றால் புள்ளிகள் வழங்கப்பட மாட்டாது. 4 பேர் ஆடும் ஆட்டத்தின் முடிவில் யார் அதிக புள்ளி பெற்று இருக்கிறார்களோ அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு மொத்தத்தில் 2 புள்ளி வழங்கப்படும்.
செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா சார்பில் ஓபன் பிரிவில் 3 அணியும், பெண்கள் பிரிவில் 3 அணியும் ஆக மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன.
மகளிர் பிரிவில் இந்திய 'ஏ' அணி தர வரிசையில் முதல் இடத்தில் உள்ளது. மற்ற இரண்டு அணியும் முறையே 11, 16-வது இடங்களில் உள்ளன.
ஓபன் பிரிவில் இந்திய 'ஏ' அணி தர வரிசையில் 2-வது இடத்தில் உள்ளது. மற்ற அணிகள் முறையே 11 மற்றும் 17-வது இடங்களில் உள்ளன.
இன்று காலை 9.30 மணிக்கு அனைத்து அணி கேப்டன்கள் கூட்டம் நடைபெறும். மாலை 3 மணிக்கு தொடங்கும் ஓபன் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய 'ஏ' அணி (2-வது தர வரிசை) ஜிம்பாப்வே அணியுடன் (94-வது தர வரிசை) மோதுகிறது.
பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ள அணியாக கருதப்படும் இந்திய 'ஏ' அணி வெற்றியுடன் போட்டியை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய 'பி' அணி (2-வது இடம்) ஐக்கிய அரபு எமிரேட்சுடன் (103-வது இடம்) மோதுகிறது. தர வரிசையில் 16-வது இடத்தில் உள்ள இந்திய 'சி' அணி 109-வது இடத்தில் உள்ள தெற்கு சூடான் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
பெண்கள் பிரிவில் தர வரிசையில் முதலிடத்தில் உள்ள இந்திய 'ஏ' அணி முதல் சுற்றில் 80-வது இடத்தில் உள்ள தஜிகஸ்தானுடன் மோதுகிறது. 11-வது இடத்தில் உள்ள இந்திய 'பி' அணி வேல்ஸ் (90-வது இடம்) அணியுடனும், இந்திய 'சி' அணி (16-வது இடம்) ஆங்காங்குடனும் (95-வது இடம்) மோதுகின்றன.
நேற்றைய தொடக்க விழாவின்போது பிரதமர் மோடி, இந்திய பெண்கள் மற்றும் அமெரிக்க ஆண்கள் அணிகள் எந்த நிற காயுடன் விளையாட வேண்டும் என்பதை தேர்வு செய்தார். இதில் அவர் இரண்டையுமே கருப்பு நிற காய்களாக எடுத்தார். இதனால் இந்திய பெண்கள் அணி முதல் சுற்றில் கருப்பு நிற காயுடன் விளையாடுகிறது.
முதல் சுற்று போட்டி மாலை 3 மணிக்கு தொங்குவதையடுத்து வீரர்-வீராங்கனைகள் தாங்கள் தங்கி இருந்த ஓட்டல்களில் இருந்து புறப்பட்டு போட்டி நடைபெறும் இடத்துக்கு மதியம் 2 மணியளவில் வருகின்றனர். அவர்கள் பஸ்களில் அழைத்து வரப்படுகின்றனர். இதையடுத்து செஸ் ஒலிம்பியாட் போட்டி உற்சாகத்துடன் தொடங்குகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்