search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    பாபநாசம் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது
    X

    பாபநாசம் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது

    • கடந்த 3 நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 86 அடியாக இருந்தது.
    • தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக அணைகள் மற்றும் அருவிகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    நேற்றும் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. தொடர் மழை காரணமாக 143 அடி உயரம் கொண்ட பிரதான அணையான பாபநாசத்தின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 86 அடியாக இருந்தது. நேற்று 97.50 அடியாக இருந்த அணை நீர்மட்டம் இன்று மேலும் 2.5 அடி உயர்ந்து இன்று காலை நிலவரப்படி 99.90 அடியாக இருந்தது. தொடர்ந்து பிற்பகலில் 100 அடியை எட்டியது. கடந்த 3 நாட்களில் 14 அடி உயர்ந்துள்ளது. தொடர் மழை காரணமாக பாபநாசம் அணைக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. நேற்று இரவு முதல் மழை குறைந்ததால் தண்ணீர் வரத்தும் குறைந்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணைக்கு 2,576 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 804.75 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    இதேபோல் 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 78.64 அடியாகவும், 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 7 அடி உயர்ந்து 112 அடியாகவும், இன்று மேலும் 2 அடி உயர்ந்து 114.76 அடியாகவும் உள்ளது.

    இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான நாலு முக்கில் 42 மில்லி மீட்டர், ஊத்து பகுதியில் 33 மில்லி மீட்டரும், காக்காச்சி பகுதிகளில் 24 மில்லி மீட்டரும், மாஞ்சோலையில் 9 மில்லி மீட்டரும் மழைப் பொழிவு பதிவாகி உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா நதி நீர்மட்டம் நேற்று 4 அடி உயர்ந்து 57 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 2 அடி உயர்ந்து 59 அடியாக உள்ளது.

    84 அடி உயரம் கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 75 அடியாகவும், கருப்பாநதி நீர்மட்டம் 37.40 அடியாகவும் உள்ளது. 36 அடி உயரம் கொண்ட குண்டாறு அணை ஏற்கனவே நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. 132 அடி உயரம் கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 80 அடியாக இருந்த நிலையில் நேற்று 5 அடி உயர்ந்து 85 அடியாகவும், இன்று மேலும் 5 அடி உயர்ந்து 90 அடியாகவும் உள்ளது.

    கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 52.50 அடியாகவும், நேற்று 50.50 அடியை எட்டிய நிலையில் இன்று மேலும் ஒரு அடி உயர்ந்துள்ளது. அணை நிரம்ப இன்னும் ஒரு அடியே உள்ளது.

    அம்பை வனச்சரகம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் மழை காரணமாக மாஞ்சோலை பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத் துறையினர் தடை விதித்துள்ளனர். இந்த தடை உத்தரவு மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும்.

    Next Story
    ×