search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆறுகாட்டுதுறையில் இருந்து கடலுக்கு சென்று மாயமான 3 மீனவர்கள் மீட்பு
    X

    ஆறுகாட்டுதுறையில் இருந்து கடலுக்கு சென்று மாயமான 3 மீனவர்கள் மீட்பு

    • படகில் டீசல் இன்றி நடுக்கடலில் தத்தளித்தவர்கள் கரை திரும்பினர்.
    • பல்வேறு கோணங்களில் கடலோர காவல் குழும போலீசாரும், மீன்துறை அலுவலர்களும் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    வேதாரண்யம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுதுறையில் இருந்து நேற்று முன்தினம் மதியம் வேதையன் (வயது 58) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரும், அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் (65), கொள்ளித்தீவு பகுதியை சேர்ந்த பன்னீர் (57) ஆகிய 3 மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    இவர்கள் நேற்று காலை கரை திரும்ப வேண்டும். ஆனால், அவர்கள் 3 பேரும் கரை திரும்பவில்லை. இதனால் அவர்களது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும், ஆறுகாட்டுதுறை பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் 3 மீனவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

    மீன் பிடிக்க சென்றவர்கள் திசை மாறி சென்றார்களா? அல்லது படகு எஞ்சின் பழுதாகி கடலில் தத்தளித்து கொண்டு உள்ளார்களா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் கடலோர காவல் குழும போலீசாரும், மீன்துறை அலுவலர்களும் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்நிலையில், மாயமான 3 மீனவர்களை தேடி சென்ற சக மீனவர்கள் நடுக்கடலில் படகில் டீசல் இன்றி தத்தளித்து கொண்டிருந்தவர்களை பார்த்தனர். மேலும், அவர்களை தனது படகில் ஏற்றி ஆறுகாட்டுத்துறை கரைக்கு இன்று காலை கொண்டு வந்தனர். மேலும் அவர்கள் சென்ற படகும் மீட்கப்பட்டது.

    காணாமல் போன 3 மீனவர்களும் கரைக்கு திரும்பி வந்ததை கண்ட உறவினர்கள் மற்றும் மீனவ கிராமமக்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.

    Next Story
    ×