search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சபரிமலை சென்று திரும்பிய சென்னை வாலிபர் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை
    X

    தற்கொலை செய்து கொண்ட சங்கர்.

    சபரிமலை சென்று திரும்பிய சென்னை வாலிபர் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை

    • பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்த நண்பர்கள் மைக் செட் மூலம் தகவல் தெரிவித்து அவரை கண்டுபிடிக்க முயன்றனர்.
    • சங்கரின் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வருசநாடு:

    சென்னை திருநின்றவூர் புதிய சாலைத் தெருவைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 40). கூலித் தொழிலாளி. திருமணமாகாத இவர் கடந்த 31-ந் தேதி அதே பகுதியைச் சேர்ந்த ஒரு யாத்திரை குழுவினருடன் சபரிமலைக்கு மாலை அணிந்து புறப்பட்டார்.

    கடந்த 3-ந் தேதி சபரிமலைக்கு சென்று அனைவரும் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். மலையை விட்டு இறங்கிய போது பம்பை ஆற்றங்கரையில் திடீரென சங்கர் மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்த நண்பர்கள் மைக் செட் மூலம் தகவல் தெரிவித்து அவரை கண்டுபிடிக்க முயன்றனர்.

    அப்போது சங்கர் மாலையை கழற்றி விட்டு இருமுடி இல்லாமல் வந்துள்ளார். இது குறித்து குருசாமி அவரிடம் கேட்ட போது அவர் போதையில் இருந்தது போல உளறியுள்ளார். அதன் பிறகு தேனி மாவட்டம் மாளிகைப்பாறை கருப்பசுவாமி கோவிலுக்கு அவர்கள் வந்தனர். அங்கு சுவாமி தரிசனம் செய்து விட்டு பார்த்த போது மீண்டும் சங்கர் மாயமானார்.

    சில மணி நேரம் கழித்து வந்த சங்கர் போதையில் இருந்தது தெரிய வந்தது. இதனால் அவரை கண்டித்து வண்டியில் ஏற்ற முயன்றுள்ளனர். ஆனால் அவர் அளவுக்கு அதிகமாக போதையில் இருந்ததால் அங்கேயே விட்டுச் சென்றனர்.

    போதை தெளிந்து எழுந்த சங்கர் செல்போனில் உடன் வந்த தனது நண்பர்களுக்கு போன் செய்தார். அப்போது தாங்கள் சென்னைக்கு புறப்பட்டு விட்டதாக கூறிவிட்டனர். இதனால் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்த சங்கர் தங்கம்மாள்புரம் பகுதியில் இருந்த சர்ச் முன்பு மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    இன்று காலை அப்பகுதி மக்கள் இது குறித்து கடமலைக்குண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது மேற்கண்ட விபரங்கள் தெரிய வந்தது.

    இதனையடுத்து சென்னையில் உள்ள அவரது சகோதரி கோமதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தற்கொலை செய்து கொண்ட சங்கரின் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சபரிமலைக்கு சென்று திரும்பிய போது வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×