search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விமானநிலையம் அமைய உள்ள பரந்தூரை சுற்றி நீர்நிலை தன்மையை ஆய்வு செய்ய திட்டம்
    X

    விமானநிலையம் அமைய உள்ள பரந்தூரை சுற்றி நீர்நிலை தன்மையை ஆய்வு செய்ய திட்டம்

    • பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டாலும் அதன் எல்லைகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
    • கடந்த 10 ஆண்டுகளில் மழைப்பொழிவு, வெள்ளம், நிலத்தடி நீர் தன்மை குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    காஞ்சிபுரம்:

    சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து சென்னையின் 2-வது விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்க அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

    ரூ.20 ஆயிரம் கோடி செலவில் சுமார் 4700 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய விமான நிலையத்தை அமைக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதற்காக பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றி உள்ள 13 கிராமங்களில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்று தெரிகிறது. இதற்கு கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    புதிய விமான நிலைய அறிவிப்பு வெளியான நாள் முதல் இந்த திட்டத்தை கைவிடக்கோரி ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள இடங்களில் நீர் நிலைத் தன்மை குறித்து அறிய அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதைத் தெடர்ந்து பரந்தூரை சுற்றி உள்ள பகுதிகளில் மழைப்பொழிவு, நிலத்தடி நீர், பருவமழையின் போது வெள்ளம் மற்றும் புவியியல் நிலைத்தன்மை பற்றிய விரிவான ஆய்வறிக்கையை தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) நீர்வளத்துறையிடம் கேட்டு வந்தது. இதனை 6 மாதத்தில் முடிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    எனவே பரந்தூரை சுற்றி உள்ள பகுதிகளில் நீர்நிலை தன்மை தொடர்பாக விரைவில் ஆய்வு செய்யப்படும் என்று தெரிகிறது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, "பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டாலும் அதன் எல்லைகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

    விமான நிலையம் அமைய உள்ள இடத்தில் நீர்நிலைத்தன்மை குறித்து ஆய்வறிக்கையை நீர்வளத்துறையினர் ஆய்வு செய்ய உள்ளனர். இது 6 மாதத்தில் முடிவடையும். கடந்த 10 ஆண்டுகளில் மழைப்பொழிவு, வெள்ளம், நிலத்தடி நீர் தன்மை குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    புதிய விமானநிலைய திட்டத்திற்கான பொருளாதார சாத்தியக்கூறு அறிக்கையை தயாரிக்க டிட்கோ விரைவில் ஒரு ஆலோசகரை நியமிக்கும் என்றார்.

    Next Story
    ×