search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    செங்குன்றம்-உறையூர் சார்பதிவாளர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது: லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு வாய்ப்பு
    X

    செங்குன்றம்-உறையூர் சார்பதிவாளர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது: லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு வாய்ப்பு

    • 2 சார்பதிவாளர் அலுவலகங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
    • 2017-2018-ம் நிதி ஆண்டில் இருந்து பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் முறைகேடு கண்டறியப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு துறையின் கீழ் செயல்பட்டு வரும் சார்பதிவாளர் அலுவலகங்களில் ரூ.30 லட்சத்துக்கும் மேல் உள்ள பத்திரப்பதிவுகள் தொடர்பாக சில விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன.

    வருமான வரித்துறையினரால் வழங்கப்பட்ட பான் கார்டு மற்றும் ஆதார் அட்டை இல்லாமல் அதுபோன்ற பத்திரப்பதிவுகள் நடைபெறுவதாகவும் புகார்கள் கூறப்பட்டு வந்தன. இதன் மூலம் பெரிய அளவிலான தொகை கைமாற்றப்பட்டு முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    சென்னையை அடுத்த செங்குன்றம் மற்றும் திருச்சி உறையூர் ஆகிய 2 பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் இதுபோன்ற முறைகேடு நடைபெற்றிருப்பதை வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவு கண்டுபிடித்தது.

    இதையடுத்து இந்த 2 சார்பதிவாளர் அலுவலகங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு பத்திரப்பதிவில் முறையாக கணக்கு காட்டப்படாததும் தெரிய வந்தது. இதில் செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் மட்டும் 2 ஆயிரம் கோடிக்கு மேல் பத்திரப்பதிவுகளுக்கு கணக்கு காட்டப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதேபோன்று உறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.

    2017-2018-ம் நிதி ஆண்டில் இருந்து பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இந்த முறைகேடு கண்டறியப்பட்டு உள்ளது.

    இதை தொடர்ந்து இந்த முறைகேட்டுக்கு காரணமாக செங்குன்றம், உறையூர் சார்பதிவாளர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது. இருவர் மீதும் துறை ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சம்பந்தப்பட்ட சார்பதிவாளர்கள் இருவரும் சஸ்பெண்டு செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    அதே நேரத்தில் ஊழல் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் 2 சார்பதிவாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக சட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கும் உத்தரவிடப்படும் என்று தெரிகிறது.

    Next Story
    ×