search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    அ.தி.மு.க. 2 அணிகளில் யாரை ஆதரிப்பது?: பாரதிய ஜனதா 31-ந்தேதி இறுதி முடிவு
    X

    அ.தி.மு.க. 2 அணிகளில் யாரை ஆதரிப்பது?: பாரதிய ஜனதா 31-ந்தேதி இறுதி முடிவு

    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் இரு அணிகளும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.
    • பா.ஜ.க.வின் மாவட்ட தலைவர்கள் கூட்டத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை ஏற்பாடு செய்துள்ளார்

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் இரு அணிகளும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.

    எடப்பாடி பழனிசாமி தரப்பில் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு தயாராக உள்ளார். இரட்டை இலை கிடைக்காத பட்சத்தில் தனி சின்னத்திலும் போட்டியிடுவதாக தெரிவித்து உள்ளார்.

    அதேபோல ஓ.பன்னீர்செல்வமும் வேட்பாளரை நிறுத்துவதில் தீவிரமாக உள்ளார். அதே வேளையில் பா.ஜ.க. போட்டியிட்டால் விட்டுக்கொடுக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் ஓ.பன்னீர்செல்வமும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கேட்டனர். அ.தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களிடமும் ஆதரவு கேட்டுள்ளனர்.

    ஈரோடு இடைத்தேர்தலில் தங்கள் செல்வாக்கை நிலை நிறுத்தி கொள்ள இருவரும் வரிந்து கட்டுகிறார்கள். ஆளும் தி.மு.க. கட்சிக்கு அடுத்த இடத்தை பிடிப்பதில் இருவரும் தீவிரமாக உள்ளனர்.

    அ.தி.மு.க.வின் இரு அணிகளும் பா.ஜ.க. தலைமை நிர்வாகிகளை சந்தித்து தங்களுக்கு ஆதரவு கொடுக்கும்படி வலியுறுத்தி வரும் நிலையில் இதுவரையில் எந்த பதிலையும் தெரிவிக்காமல் பா.ஜ.க. மவுனம் காத்து வருகிறது.

    அ.தி.மு.க. இரு அணிகளில் யாரை ஆதரிப்பது? அல்லது போட்டியிடலாமா? இடைத்தேர்தலில் என்ன நிலை எடுப்பது என்பது குறித்து இன்னும் இறுதி செய்யப்படாததால் இரு அணிகளும் வேட்பாளர்களை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றன.

    31-ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில் பா.ஜ.க.வின் முடிவை எதிர்பார்த்து நிற்கும் இரு அணிகளும் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் உள்ளன.

    இந்த நிலையில் பா.ஜ.க.வின் மாவட்ட தலைவர்கள் கூட்டத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை ஏற்பாடு செய்துள்ளார். வருகிற 31-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு இக்கூட்டம் சென்னையில் கமலாலயத்தில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட தலைவர்களும் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மாநில நிர்வாகிகளும் இதில் பங்கேற்கிறார்கள். இக்கூட்டத்தில் ஈரோடு இடைத்தேர்தலில் என்ன முடிவு எடுக்கலாம் என்பது குறித்து விவாதிக்கப்படுகிறது.

    எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கலாமா? ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவை தெரிவிக்கலாமா? அல்லது யாருக்கும் ஆதரவு இல்லாத நடுநிலை முடிவை எடுக்கலாமா? என்பது குறித்து முடிவு செய்யப்படுகிறது.

    மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்த பிறகு யாரை ஆதரிப்பது என்ற முடிவை அண்ணாமலை அறிவிக்க இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதற்கிடையில் அ.தி.மு.க. வழக்கின் தீர்ப்பு வந்துவிட்டால் அதற்கேற்றவாறு முடிவை எடுக்கவும் பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. எனவே 31-ந்தேதி தனது இறுதி முடிவை பா.ஜ.க. அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×