என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
12 நாட்களாக வீடுகளின் மேல் கற்கள் விழுந்த சம்பவம்- கிராமத்தில் கேமராக்கள் பொருத்தி விடிய விடிய கண்காணிப்பு
- மர்மநபர்களின் செயலாக இருக்கலாம் என அப்பகுதி பொதுமக்கள் எண்ணினர்.
- வீடுகளின் மீது வந்து விழுந்த கற்களை சேகரித்து போலீசாரிடம் காண்பித்தனர்.
ஒட்டப்பாளையம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 12 நாட்களாக இங்குள்ள வீடுகளின் மீது மர்மமான முறையில் சிறிய மற்றும் பெரிய கற்கள் விழுந்தன. இதனால் பயந்து போன அப்பகுதி பொது மக்கள் இரவு முழுவதும் அங்குள்ள கருப்பராயன் கோவிலில் தஞ்ச மடைந்தனர்.
கற்கள் விழுந்ததில் பல வீடுகளில் ஓடுகள் மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் சீட்கள் சேதமடைந்தன. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்க்கும் போது கற்கள் விழவில்லை. உள்ளே சென்றதும் ஓடுகள் மீது கற்கள் விழுந்தன. இதனால் மர்மநபர்களின் செயலாக இருக்கலாம் என அப்பகுதி பொதுமக்கள் எண்ணினர்.
இதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் ஓட்டப்பாளையம் கிராமம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். புதர் பகுதிகள், மறைவான இடங்களில் யாரும் பதுங்கியிருந்து கற்களை வீசுகின்றனரா? என தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் அப்படி யாரும் சிக்கவில்லை. இதனால் வீடுகளின் மீது கற்கள் எப்படி விழுகிறது. எங்கிருந்து வந்து விழுகிறது என தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
மேலும் மர்மமான முறையில் கற்கள் விழுவது குட்டிச்சாத்தானின் வேலையாக இருக்குமோ என்ற சந்தேகமும் பொது மக்களுக்கு ஏற்பட்டது. இதனால் பெண்கள், குழந்தைகள் அதிர்ச்சியில் உறைந்தனர். கற்கள் விழுவதின் உண்மையான பின்னணி என்னவென்று தெரியாமல் தவிப்புக்கு ஆளானதுடன் கடந்த 12 நாட்களாக இரவு முழுவதும் தூக்கத்தை தொலைத்தனர். இதன் காரணமாக காலையில் வேலைக்கு செல்வதில் பாதிப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து படியூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். வீடுகளின் மீது வந்து விழுந்த கற்களை சேகரித்து போலீசாரிடம் காண்பித்தனர்.
இதையடுத்து வீடுகளின் மேல் எங்கிருந்து கற்கள் வந்து விழுகிறது என்பதை கண்காணிக்க போலீசார், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதன்படி ஓட்டப்பாளையம் கிராமம் முழுவதும் 6 இடங்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் , 20 போகஸ் லைட்டுகள் பொருத்தப்பட்டன. ராட்சத கிரேன் ஒன்றும் வரவழைக்கப்பட்டது. இதன் மூலம் போலீசார் , அதிகாரிகள், பொதுமக்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். கிரேன் மூலமும் , டிரோன்களை பறக்க விட்டும் கண்காணிக்கப்பட்டது.
நேற்றிரவு 7 மணி முதல் இன்று காலை வரை விடிய விடிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது எந்தவித கற்களும் வீடுகளின் மீது வந்து விழவில்லை. எனவே மர்மநபர்கள்தான் மறைவான இடங்களில் பதுங்கியிருந்து கற்களை வீசியிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். அவர்களை பிடிக்க போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதற்காக ஒட்டப்பாளையம் கிராமம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் குட்டிச்சாத்தான் பீதியால் அங்குள்ள கருப்பராயன் கோவிலில் நேற்றிரவு பொதுமக்கள் சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு இது போன்று வீடுகளின் மீது கற்கள் வந்து விழுந்தன.
அதேப்போல் இப்போதும் நிகழ்ந்துள்ளதால் கிராமத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க சிறப்பு வழிபாடுகள் நடத்தினோம் என்றனர். காங்கயம் தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஒட்டப்பாளையம் கிராமத்தில் முகாமிட்டு நேற்றிரவு முதல் கண்காணிப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கடந்த 12 நாட்களாக வீடுகளின் மீது கற்கள் விழுந்ததில் தூக்கத்தை தொலைத்து தவித்து வந்த ஒட்டப்பாளையம் கிராமமக்கள் நேற்றிரவு கண்காணிப்பில் ஈடுபட்டதன் காரணமாக கற்கள் வந்து விழாததால் நிம்மதி அடைந்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்