search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது- பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை
    X

    அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது- பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை

    • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழையும் அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது.
    • அருவிக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை கோவில் பணியாளர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.

    கோவிலின் அடிவாரத்தில் இருந்து சுமார் 950 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்க அருவி உள்ளது. அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள், ஓடைகள் நீர்வரத்தை அளித்து வந்த சூழலில் கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழையும் அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது.


    இந்தநிலையில் அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இது குறித்து தகவல் அறிந்த கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை ஒலிபெருக்கி மூலமாக எச்சரித்து பாதுகாப்பாக வெளியேற்றினர். அத்துடன் தடுப்புகள் வைத்தும் சுற்றுலா பயணிகள் கோவிலுக்கு அருகில் செல்லாதவாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    இந்தநிலையில் சிறிது நேரத்தில் பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தடுப்புகளைத் தாண்டி ஆர்ப்பரித்து கொட்டிய வெள்ளம் அடிவாரப் பகுதியில் உள்ள மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்தவாறு திருமூர்த்தி அணையை அடைந்தது.

    பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவிக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை கோவில் பணியாளர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    Next Story
    ×