search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காகித குடுவைகளில் மது விற்கும் திட்டத்தை கைவிட வேண்டும்- அன்புமணி கோரிக்கை
    X

    காகித குடுவைகளில் மது விற்கும் திட்டத்தை கைவிட வேண்டும்- அன்புமணி கோரிக்கை

    • காகிதக் குடுவையில் மதுவிற்பனை செய்யும் அபத்தமான, ஆபத்தான திட்டங்கள் தேவையில்லை.
    • மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் கள்ளச்சாராய உயிரிழப்புகளை தடுக்கும் நோக்கத்துடன் 90 மி.லி. மதுவை காகிதக் குடுவைகளில் அடைத்து விற்பனை செய்ய டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்திருப்பதாகவும், இதற்கான கருத்துரு தமிழக அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக அரசின் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், தமிழ்நாடு மீட்டெடுக்க முடியாத கலாசார சீரழிவு படுகுழிக்குள் தள்ளப்பட்டு விடும்.

    காகிதக் குடுவைகளில் 90 மி.லி. மதுவை விற்பனை செய்வதற்காக டாஸ்மாக் நிறுவனம் முன்வைக்கும் காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. டாஸ்மாக் கடைகளில் குறைந்த அளவாக 180 மி.லி. மது மட்டுமே கிடைப்பதாகவும், அதன் குறைந்தபட்ச விலை ரூ.140 என்பதால், அவ்வளவு பணம் கொடுத்து டாஸ்மாக் மதுவை வாங்கிக் குடிக்க முடியாதவர்கள் தான் குறைந்த விலையில் கிடைக்கும் கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடிக்கிறார்கள் என்றும், குறைந்த விலையில் டாஸ்மாக் நிறுவனமே மதுவை விற்பனை செய்வதன் மூலம் கள்ளச்சாராயத்தை தடுக்கலாம் என்று டாஸ்மாக் தரப்பில் கூறப்படுகிறது. இதை விட மிக மோசமான வாதம் இருக்க முடியாது.

    கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் தமிழக அரசுக்கு இருந்தால் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளை அழைத்து அரசு ஆலோசனை நடத்த வேண்டும். இது தொடர்பாக ஆயிரமாயிரம் ஆக்கப்பூர்வ ஆலோசனைகளை வழங்க பா.ம.க. தயாராக இருக்கிறது. அதை விடுத்து மலிவு விலை காகிதக் குடுவை மது போன்ற போகக்கூடாத ஊருக்கு தமிழக அரசு வழிகாட்டக் கூடாது.

    கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இருந்தால், அதை சாத்தியமாக்க மன உறுதியும், அரசியல் துணிச்சலும் தான் தேவை. மாறாக, காகிதக் குடுவையில் மதுவிற்பனை செய்யும் அபத்தமான, ஆபத்தான திட்டங்கள் தேவையில்லை.

    எனவே, காகிதக் குடுவையில் 90 மி.லி. மதுவை விற்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். அத்துடன் தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×