search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உடுமலை-மூணாறு சாலையில் உலா வரும் கரடி: வாகன ஓட்டிகள் அச்சம்
    X

    உடுமலை-மூணாறு சாலையில் உலா வரும் கரடியை காணலாம்.

    உடுமலை-மூணாறு சாலையில் உலா வரும் கரடி: வாகன ஓட்டிகள் அச்சம்

    • பனிக்காலம் முடிவடைந்து கோடைகாலம் தொடங்கும் முன்னரே வனப்பகுதியில் வறட்சி தொடங்கி விடுகிறது.
    • தென்மேற்கு பருவமழை கைவிட்டதால் பசுமைக்கு திரும்ப வேண்டிய வனப்பகுதி வறண்டு காணப்படுகிறது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, கரடி, கடமான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்குகளுக்கு தேவையான உணவு, தண்ணீரை அளித்து வனப்பகுதி அடைக்கலம் கொடுத்து வருகிறது.

    பனிக்காலம் முடிவடைந்து கோடைகாலம் தொடங்கும் முன்னரே வனப்பகுதியில் வறட்சி தொடங்கி விடுகிறது. இதனால் வனம் படிப்படியாக அதன் இயல்பு தன்மையை இழந்து விடுகிறது. அவற்றில் உற்பத்தியாகின்ற ஆறுகளிலும் நீர்வரத்து குறைந்து போகிறது. இதனால் உணவு, தண்ணீருக்காக அல்லல்படும் வனவிலங்குகள் வேறு வழியின்றி அடிவாரப் பகுதியான அமராவதி அணையை நோக்கி வந்து விடுகிறது.

    தற்போது தண்ணீர்-உணவுக்காக அமராவதி அணைக்கு வரும் வனவிலங்குகள் உடுமலை-மூணாறு சாலையில் உலா வருகின்றன. கடந்த சில நாட்களாக குட்டியுடன் யானை ஒன்று உலா வந்த நிலையில், இரவு நேரத்தில் கரடி ஒன்றும் உலா வருகிறது. சாலையில் வரும் வாகனங்களை கூட பொருட்படுத்தாமல் சுற்றி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து வருகின்றனர்.

    தென்மேற்கு பருவமழை கைவிட்டதால் பசுமைக்கு திரும்ப வேண்டிய வனப்பகுதி வறண்டு காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகளும் வனப்பகுதிக்கு திரும்பிச் செல்ல மனமில்லாமல் அடிவாரப் பகுதியிலேயே வாழ்விடத்தை அமைத்துக்கொண்டு உள்ளது. எனவே சாலையை கடக்கும் விலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×