search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    தொடர்ந்து 5-வது ஆண்டாக பவானிசாகர் அணை 101 அடியை எட்டியது
    X

    பவானிசாகர் அணை

    தொடர்ந்து 5-வது ஆண்டாக பவானிசாகர் அணை 101 அடியை எட்டியது

    • இன்று காலை நிலவரப்படி பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 101.15 அடியாக உள்ளது.
    • நாளை ஆடிப்பெருக்கையொட்டி பவானிசாகர் அணையின் மேல் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதுபோல் பவானிசாகர் அணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து கடந்த 3 நாட்கள் முன்பு 100 அடியை கட்டியது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வந்ததால் நீர்மட்டம் உயர்ந்து வந்தது.

    இன்று காலை நிலவரப்படி பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 101.15 அடியாக உள்ளது. அணைக்கு வினாடி 1,634 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் காளிங்கராயன் பாசனத்திற்காக 500 கன அடியும்,

    பவானி ஆற்றுக்கு 100 கன அடியும், கீழ்பவானி வாக்காலுக்கு 5 கன அடியும் என மொத்தம் 605 கன அடி தண்ணீர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து 5-வது ஆண்டாக பவானிசாகர் அணை 101 அடியை எட்டி உள்ளது.

    பவானிசாகர் அணையில் தண்ணீர் தேக்குவது குறித்த பொதுப்பணி துறையால் வகுக்கப்பட்ட விதியின் அடிப்படையில் ஆகஸ்ட் 1-ந் தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை 102 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியும். தற்போது பவானிசாகர் அணையின் அடி 101 அடியை தாண்டி உள்ளதால் இன்னும் சில நாட்களில் 102 அடியை எட்டி விடும்.

    இதன் காரணமாக பவானிசாகர் அணையில் இருந்து பவானி கூடுதுறை வரை பவானி ஆற்றின் இரு புறங்களிலும் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நாளை ஆடிப்பெருக்கையொட்டி பவானிசாகர் அணையின் மேல் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் அணையின் நிலவரத்தை தொடர்ந்து பொதுப்பணித்துறை, வருவாய் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    Next Story
    ×