search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    காவிரி நதிநீர்: தமிழக அரசு உடனே அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டவேண்டும்- திருமாவளவன் வேண்டுகோள்
    X

    காவிரி நதிநீர்: தமிழக அரசு உடனே அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டவேண்டும்- திருமாவளவன் வேண்டுகோள்

    • காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதில் குறுகிய அரசியல் நோக்கத்தோடு நடந்து கொள்ளக் கூடாது.
    • தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான இந்தப் போக்கை கர்நாடக அரசு கைவிட வேண்டும்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதில் குறுகிய அரசியல் நோக்கத்தோடு நடந்து கொள்ளக் கூடாது. காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆணையின்படி வருகிற 31-ந்தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒரு டி.எம்.சி. தண்ணீரைத் தமிழ்நாட்டுக்குத் திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

    தமிழ்நாட்டில் தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் காய்ந்து கொண்டிருப்பதைக் கவனத்தில் கொண்டு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தினம் ஒரு டி.எம்.சி. தண்ணீரைத் தமிழ்நாட்டுக்குத் திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு நேற்று ஆணையிட்டது. ஆனால் 'காவிரி நீர் பிடிப்புப் பகுதியில் போதுமான மழை பெய்யவில்லையென்றும்; 28 சதவீத அளவில் குறைவாக மழை பெய்து இருக்கிறதென்றும்; அதனால் தண்ணீர் திறந்து விட முடியாது என்றும் கூறியுள்ள கர்நாடக அரசு, காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் ஆணையை எதிர்த்து காவிரி நீர்மேலாண்மை வாரியத்திடம் மேல் முறையீடு செய்யப் போகிறோம்' என்றும் கூறி உள்ளது. இது தொடர்பாக கடந்த 14-ந் தேதி அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என்றும் கர்நாடக அரசு அறிவித்திருக்கிறது.


    கர்நாடகாவில் உள்ள ஹாரங்கி அணையில் 73 சதவீத தண்ணீரும் , ஹேமாவதி அணையில் 55 சதவீத தண்ணீரும் , கிருஷ்ணராஜசாகர் அணையில் 54 சதவீத தண்ணீரும், கபினியில் 96 சதவீதம் தண்ணீரும் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. கபினி அணைக்கட்டின் முழு கொள்ளளவுக்கும் தண்ணீர் நிரம்பியுள்ளது. அவ்வாறு இருந்தும் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தர முடியாது என கர்நாடகா அரசு கூறுவது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான இந்தப் போக்கை கர்நாடக அரசு கைவிட வேண்டும்.

    காவிரிப் பிரச்சனையை பொருத்தமட்டில் கர்நாடகாவில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைவரும் ஒரே நிலைப்பாட்டை மேற்கொள்கின்றனர். ஆனால், தமிழ்நாட்டிலோ இதிலும் அரசியல் தான் செய்யப்படுகிறது. இந்த நிலையை மாற்றி கர்நாடகாவைப் போல தமிழ்நாட்டிலும் காவிரி பிரச்சனையில் ஒருமித்த நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து கட்சிகளுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

    "கர்நாடக அரசு போலவே தமிழ்நாடு அரசும் உடனடியாக அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய இயக்கங்களின் பிரதிநிதி களடங்கிய அவசரக் கூட்டத்தைக் கூட்டி முடி வெடுக்க வேண்டும்" என்று முதலமைச்சரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×