search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முல்லைப்பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு
    X

    முல்லைப்பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு

    • முல்லைப்பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட ஆய்வு செய்வதற்கு கேரளா முயற்சித்து வருகிறது.
    • தமிழக விவசாயிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் லோயர் கேம்ப் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இங்கு இருபோக நெல் சாகுபடிக்கு முக்கிய நீர் ஆதாரமாகவும் உள்ளது.

    மேலும் தேனி மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாவும் உள்ளது. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. கடந்த 2014ம் ஆண்டு அணையை கண்காணித்து பராமரிக்க 3 பேர் கொண்ட கண்காணிப்பு குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. பின்னர் 2022ம் ஆண்டு மேலும் இரு மாநில தொழில்நுட்ப வல்லுனர்களையும் சேர்த்து ஐவர் குழுவாக மாற்றப்பட்டது.

    தற்போது குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணையர் தலைமை பொறியாளர் ராஜேஷ் உள்ளார். தமிழக பிரதிநிதிகளாக நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா காவிரி தொழில்நுட்பக் குழும தலைவர் சுப்பிரமணியம், கேரள பிரதிநிதிகளாக கேரள நீர் பாசனத்துறை கூடுதல் செயலாளர் டாக்டர் வேணு, நிர்வாக தலைமைப் பொறியாளர் அலெக்ஸ் வர்கீஸ் ஆகியோர் உள்ளனர்.

    இந்த குழுவினர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 27-ந் தேதி முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 18-ந் தேதி ஆய்வு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் ஆய்வு தள்ளி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் வருகிற 13, 14-ந் தேதிகளில் மத்திய கண்காணிப்பு குழுவினர் முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்ய உள்ளதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முல்லைப்பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட ஆய்வு செய்வதற்கு கேரளா முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழக விவசாயிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    ஒவ்வொரு பருவமழை காலத்தின் போதும் முல்லைப்பெரியாறு அணையின் பலம் குறித்து கேரளா சந்தேகம் எழுப்பி வருகிறது. இதனால் இரு மாநிலங்களுக்கிடையே பிரச்சனை ஏற்படும் சூழல் உருவாகி வருகிறது. தற்போதும் பரபரப்பான இந்த சூழலில் மத்திய கண்காணிப்புக்குழு அணையை ஆய்வு செய்ய உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×