search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வழக்கமான நடைமுறையை மாற்றுவதா? கனகசபையில் ஏறி தரிசிப்பதை தடுக்க முடியாது- அமைச்சர் பேட்டி
    X

    வழக்கமான நடைமுறையை மாற்றுவதா? கனகசபையில் ஏறி தரிசிப்பதை தடுக்க முடியாது- அமைச்சர் பேட்டி

    • பக்தர்கள் கனகசபை மீது ஏறி வழிபடலாம் என்று அரசு ஆணை பிறப்பித்தது.
    • கனகசபை நடராஜ பெருமான் அபிசேகம் கொண்டு அருளும் இடம்.

    சென்னை:

    சிதம்பர ரகசியம் என்று சொல்வதைப் போல் சிதம்பரம் கனகசபை விவகாரமும் பேசு பொருளாகி இருக்கிறது.

    கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபட அனுமதி இல்லை என்று தீட்சிதர்கள் கூற, விவகாரம் கோர்ட்டு வரை சென்று இந்து சமய அறநிலையத்துறை முடிவெடுத்து கொள்ளலாம் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதையடுத்து பக்தர்கள் கனகசபை மீது ஏறி வழிபடலாம் என்று அரசு ஆணை பிறப்பித்தது. இந்த நிலையில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி 4 நாட்கள் கனகசபை மீது ஏற தீட்சிதர்கள் தடை விதித்ததால் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. அறிவிப்பு பலகையை அதிகாரிகள் அகற்றினார்கள். தீட்சிதர்களின் எதிர்ப்பை மீறி நேற்று சில அதிகாரிகள் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்தார்கள்.

    தில்லை நடராஜர் கோவில் வானவியல், பொறியியல் துறை, புவியியல் எல்லாவற்றையும் மிஞ்சிய உச்சகட்ட அதிசயமாக பார்க்கப்படுகிறது.

    சிதம்பரம் நடராஜர் கோவில் அமைந்திருக்கும் இடம் பூகோளத்தின் பூமத்திய ரேகையின் மிக சரியான மைய பகுதியில் அமைந்து இருக்கிறது.

    பஞ்ச பூத கோவில்களில் ஆகாயத்தை குறிக்கும் சிதம்பரம் நடராஜர் கோவிலும், காற்றை குறிக்கும் காளகஸ்தியும், நிலத்தை குறிக்கும் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலும் ஒரே நேர் கோட்டில் அமைந்துள்ளது.

    விஞ்ஞானத்தின் மிகப் பெரிய வளர்ச்சியின் மூலம் நடந்த ஆராய்ச்சியில் இதை கண்டறிந்துள்ளார்கள். ஆனால் விஞ்ஞான வளர்ச்சி அடையாத காலத்திலேயே வானசாஸ்தி ரம், பூகோளம், பொறியியல் எல்லாவற்றையும் தங்கள் மதி நுட்பத்தால் உணர்ந்து அமைத்துள்ளார்கள். அதற்கு காரணம் இறைவனின் அனுக்கிரகம் என்கிறார்கள்.

    அதிசயங்களும், ரகசியங்களும் நிறைந்த இந்த கோவிலில் சிற்றம்பலம், பொன்னம்பலம் (கனக சபை) பேரம்பலம், நிருத்த சபை, ராஜ சபை என 5 சபைகள் உள்ளன. இதில் சிற்றம்பலம் நடராஜர் திருநடனம் புரிந்து அருளும் இடம்.

    கனகசபை நடராஜ பெருமான் அபிசேகம் கொண்டு அருளும் இடம். கனக சபையின் முகப்பை கொங்கு நாட்டில் இருந்து கொண்டு வந்த சுத்த தங்கத்தால் வேய்ந்தான் என்று சேக்கிழார் பாடிய பாடலிலும், கல்வெட்டு பாடலிலும் கூறப்பட்டுள்ளது.

    பேரம்பலம் என்பது தேவ சபை.

    நிருத்த சபை இறைவன் ஊர்த்தவ தாண்டவம் செய்து அருளிய இடம். ராஜ சபை என்பது ஆயிரம் கால் மண்டபம். சோழமன்னர் மரபில் முடி சூட்டப்படும் மன்னர்களுக்கு இங்கு வைத்து தான் முடி சூட்டு விழா நடை பெற்றுள்ளது.

    இந்த 5 சபைகளையும் சோழர் பரம்பரையில் வந்த சோழர்கள் நேர்த்தியாக பராமரித்துள்ளார்கள்.

    இந்த கோவில் அமைப்பே மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. கனகசபை மற்ற கோவில்களை போல் இல்லாமல் இடது புறமாக அமைந்து இதயத்தை குறிக்கிறது. இந்த சபையை அடைய பஞ்சாட்சர அதாவது சிவாய நம என்ற 5 படிகள் வழியாக ஏற வேண்டும். 4 வேதங்களை குறிக்கும் வகையில் 4 தூண்கள் கனகசபையை தாங்கி நிற்கிறது.

    கனகசபை மண்டபத்தில் 28 தூண்கள் உள்ளன. இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன.

    இந்த கோவிலில் மூல வரே உற்சவராகவும் இருப்பது தனி சிறப்பு. நடராஜர் வீற்றிருக்கும் கனகசபை மண்டபத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சிதம்பர ரகசியத்தை தரிசிப்பது இங்குள்ள வழிபாட்டின் முக்கியமானது. ஆனால் கனகசபை மீது பக்தர்கள் ஏற அனுமதிக்காதது விசுவ ரூபமானது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன தரிசனம், ஆருத்ரா தரிசனம் என ஆண்டுக்கு 2 முறை நடைபெறும் விழாக்களின் போது மூலவர் சபையிலிருந்து வெளியே வரும் நடைமுறையால் 4 நாட்களுக்கு கனக சபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படு வதில்லை. இது தொன்று தொட்டு நடைபெறும் வழக்கமாகும் என்று கூறி கடந்த 24-ந் தேதி முதல் இன்று வரை கனகசபையில் ஏறி தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பதாகையை தீட்சிதர்கள் வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் இந்து சமய அற நிலையத்துறையினர் கடந்த 24-ந் தேதி கோவிலுக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது அதிகாரிகளுக்கும், தீட்சிதர்களுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

    இந்த விவகாரம் தொடர்பாக 10 தீட்சிதர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    ஆனி திருமஞ்சன தரிசன உற்சவம் முடிந்த நிலையில் இன்று (புதன்கிழமை) காலை பால் நிவேத்ய பூஜை முடிவு பெற்றவுடன், தீட்சிதர்கள் அறிவித்தபடி காலை 7 மணிக்கு கனக சபை மீது பக்தர்கள் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    இதனை தொடர்ந்து கனகசபை மீது பக்தர்கள் இன்று காலை முதல் ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இதுபற்றி அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது:-

    கனகசபை மீது பக்தர்கள் நின்று வழிபட்டு வருவது தொன்று தொட்டு கடை பிடிக்கப்பட்டு வருகிறது. திருமஞ்சன விழாவிலும் நிகழ்ச்சி ஒரு பக்கம் நடக்கட்டும். ஒரு பக்கத்தில் பக்தர்களை அனுமதிக்கவும் துறை சார்பில் கூறப்பட்டு இருந்தது.

    கனக சபையில் ஏறி பக்தர்கள் வழிபடுவதை யாராலும் தடுக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×