search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தூய்மையான இந்திய நகரங்களில் சென்னைக்கு 199-வது இடம்
    X

    தூய்மையான இந்திய நகரங்களில் சென்னைக்கு 199-வது இடம்

    • மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் தூய்மையான நகரங்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
    • தேசிய தரவரிசையில் தூத்துக்குடி 179-வது இடத்தையும், கோவை 182-வது இடத்தையும், சென்னை 199-வது இடத்தை பிடித்துள்ளது.

    சென்னை:

    இந்தியாவில் மிக தூய்மையான நகரங்களை தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் மத்திய அரசு விருதுகளை வழங்கி வருகிறது. இந்த விருதுக்கு 'ஸ்வச் சர்வேக்ஷன்' விருது என்று பெயர். இதற்காக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் தூய்மையான நகரங்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

    இந்தியா முழுக்க உள்ள 446 நகரங்களை பல்வேறு தரநிலைகளில் ஆய்வு செய்து இந்த ஸ்வச் சர்வேக்ஷன் 2023 பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் நாட்டிலேயே தூய்மையான நகரமாக இந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக இந்தூர் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. சூரத் 2-வது இடத்தில் உள்ளது. நவி மும்பை 3-வது இடத்திலும், புதுடெல்லி 7-வது இடத்திலும், ஐதராபாத் 9-வது இடத்திலும், அகமதாபாத் 15-வது இடத்திலும், லக்னோ 44-வது இடத்திலும், பெங்களூர் 125-வது இடத்திலும், மும்பை 189-வது இடத்திலும் உள்ளது. கொல்கத்தா 438-வது இடத்தில் உள்ளது.

    அதேபோல சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்கள் பிரிவில், மராட்டியம் முதல் இடத்தை பிடித்தது. மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்தன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பரிசுகளை வழங்கினார்.

    446 நகரங்களை கொண்ட இந்த பட்டியலில் முதல் 100 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த எந்தவொரு நகரமும் வரவில்லை. திருச்சி இந்த பட்டியலில் 112-வது இடத்தை பிடித்துள்ளது. ஒரு லட்சத்திற்கு மேல் மக்கள்தொகையை கொண்ட நகரங்கள் பிரிவில் திருச்சி 112-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு திருச்சி 262-வது இடத்தில் இருந்த நிலையில், இந்த ஆண்டு 112-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த பட்டியலில் திருச்சி 9,500 புள்ளிகளுக்கு 5,794.9 புள்ளிகள் பெற்றுள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் தூய்மையான நகராக திருச்சி தேர்வாகியுள்ளது. தூத்துக்குடி 2-வது இடத்திலும், கோவை 3-வது இடத்திலும் உள்ளன. சென்னை 5-வது இடத்தில் உள்ளது. தேசிய தரவரிசையில் தூத்துக்குடி 179-வது இடத்தையும், கோவை 182-வது இடத்தையும், சென்னை 199-வது இடத்தை பிடித்துள்ளது.

    கடந்த 3 ஆண்டுகளாக சென்னை நகரம் 40-க்கும் மேற்பட்ட இடங்களையே பிடித்திருந்தது. அதாவது கடந்த 2020-ம் ஆண்டு 45-வது இடத்திலும், 2021-ம் ஆண்டு 43-வது இடத்திலும், 2022-ம் ஆண்டு 44-வது இடத்திலும் சென்னை இருந்தது. தற்போது 199-வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. சென்னைக்கு 9,500 புள்ளிகளுக்கு 4313 புள்ளிகள் கிடைத்துள்ளது.

    தூய்மை, குப்பை சேகரிப்பு, சுகாதாரம், கழிவுநீர் அமைப்பு, மாசுபாடு உள்ளிட்டவைகளை கையா ளுவதன் அடிப்படை யில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னை நகரத்தில் குவிந்த குப்பைகளில் 12 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளது. மேலும் பெருங்குடி மற்றும் கொடுங்கை யூர் குப்பை கிடங்குகளில் 21 சதவீதம் குப்பைகள் மட்டுமே பயோ மெட்ரிக் முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் ஒரு நாளைக்கு 6500 டன் குப்பைகள் சேருகின்றன. பொது கழிப்பறைகளில் 77 சதவீதம் தூய்மையாக பராமரிக்கப்ப ட்டுள்ளது.

    அதே நேரத்தில் 95 சதவீதம் அளவுக்கு வீட்டுக்கு வீடு குப்பை சேகரிக்கப்பட்டுள்ளது. மார்க்கெட் பகுதிகள் 90 சதவீதம், குடியிருப்பு பகுதிகள் 91 சதவீதம் அளவுக்கு தூய்மையாக பராமரிக்கப்பட்டு உள்ளது. நீர் நிலைகள் 85 சதவீதம் தூய்மையாக உள்ளன. இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கிடங்குகளில் உயிரி உரம் தயாரிப்பதில் நீண்ட கால திட்டங்கள் நிறைய உள்ளன. அந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டவுடன் சென்னையின் தரம் மேம்படும். எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்யாமல் கடந்த 2011-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டது. அந்த பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை, கழிவு நீர் காய்வாய் அமைப்பதில் சிக்கல்கள் உள்ளன' என்றார்.

    Next Story
    ×