search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    28 புதிய தொழிற்சாலைகள்- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
    X

    28 புதிய தொழிற்சாலைகள்- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

    • பசுமை ஹைட்ரஜன் யூனிட் நிறுவனம் அமையும் போது சுமார் 1,511 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
    • தென் மாவட்டமான தூத்துக்குடி இந்தியாவின் ஹைட்ரஜன் ஹப் ஆக மாறி வருகிறது.

    ன்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி 2021-ம் ஆண்டு அமைந்தது முதல் இதுவரை தொழில் துறைக்காக பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாடு 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாகவும், இந்தியப் பொருளாதாரத்துக்கு மிக முக்கியப் பங்களிக்கிற மாநிலமாகவும், தமிழ்நாட்டை உயர்த்திடும் பெரும் லட்சிய இலக்கை நிர்ணயித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முனைப்புடன் செயல்படுகிறது.

    அதன் முதற்கட்டமாக முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற பெயரில் சென்னை, கோவை, தூத்துக்குடி ஆகிய நகரங்களில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலம் ரூ.1,90,803 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 2,80,600 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.

    இரண்டாம் கட்டமாக ஐக்கிய அரபு நாடுகள் சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு 17 ஆயிரத்து 371 பேருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துகிற வகையில் 7 ஆயிரத்து 441 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் பெறப்பட்டன.


    3-ம் கட்டமாக 2024 ஜனவரி 7,8 ஆகிய நாட்களில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழக அரசு நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவாக 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளும் 14, 54,712 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும் 12,35, 945 பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் என மொத்தம் 26,90,657 வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டது.

    4-ம் கட்டமாக 27.1.2024 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டிற்கு சென்று அங்குள்ள பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சக அதிகாரிகள் தொழில் கூட்டமைப்பு பொறுப்பாளர் ஆகியோரை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார்.

    அதன் பயனாக ரூ.3,440 கோடி அளவுக்கு தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதுவரை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக ரூ.8.64 லட்சம் கோடி முதலீடுகள் தமிழகத்துக்கு ஈர்க்கப்பட்டது டன் 30 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைத்துள்ளது.

    இந்த நிலையில் மேலும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 27-ந் தேதி அமெரிக்கா செல்கிறார்.

    அதற்கு முன்னதாக சென்னையில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு தொழில் முதலீட்டு மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


    லீலா பேலஸ் ஓட்டலில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்ட நிறுவனங்களில் 19 நிறுவனங்கள் ரூ.17,616 கோடி முதலீட்டில் தங்களது ஆலைகளைத் தொடங்க உள்ளன. இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

    அதில் திருவள்ளூர் மாவட்டத்தில் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் எந்திர மின்னணுவியல் உபகரண தொழிற்சாலை, திருவண்ணாமலையில் ராயல் என்பீல்டு மோட்டார் தொழிற்சாலை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, விருதுநகரில் அமைக்கப்பட்ட சுந்தரம் பாசனர்ஸ் தொழிற்சாலை, செங்கல்பட்டில் ரெனால்டு நிசான் தொழில்நுட்ப வர்த்தக மையம், கிருஷ்ணகிரியில் வெக் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை முக்கியமானவை ஆகும்.

    இந்த மாநாட்டில் ரூ.51,157 கோடி முதலீட்டில் அமைய உள்ள 28 புதிய தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி தளம் அமைப்பதற்காக சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்ட செம்ப்கார்ப் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 36 ஆயிரத்து 238 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது.

    இதன் தொடர்ச்சியாக இப்போது இந்த தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். தூத்துக்குடியில் பசுமை ஹைட்ரஜன் யூனிட் நிறுவனம் அமையும் போது சுமார் 1,511 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.


    இதன் மூலம் தென் மாவட்டமான தூத்துக்குடி இந்தியாவின் ஹைட்ரஜன் ஹப் ஆக மாறி வருகிறது.

    தூத்துக்குடியில் அமைக்கப்படும் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் பசுமை அம்மோனியாவை ஆதாரமாக வைத்து பசுமை ஹைட்ரஜன் எரிவாயு உருவாக்கப்பட உள்ளதாக செம்ப்கார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பசுமை ஹைட்ரஜனை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்வதற்கு சோஜிட்ஸ் கார்ப் மற்றும் கியூஷூ எலக்ட்ரிக் பவர் உள்ளிட்ட ஜப்பான் நிறுவனங்களுடன் செம்ப்கார்ப் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இன்று நடைபெற்ற புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா மூலம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 803 புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க வழிவகை உருவாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    விழாவில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, துறை செயலாளர் அருண்ராய் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    Next Story
    ×