search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    சூளைமேடு-விருகம்பாக்கம் கால்வாயில் ரூ.11 கோடி செலவில் சுரங்கப்பாதை: மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
    X

    சூளைமேடு-விருகம்பாக்கம் கால்வாயில் ரூ.11 கோடி செலவில் சுரங்கப்பாதை: மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

    • 19 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
    • 5 நபர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பெருநகர சென்னை மாநகராட்சியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் அண்ணாநகர் மண்டலம், சூளைமேடு, விருகம்பாக்கம் கால்வாயின் குறுக்கே ரெயில்வே காலனி 3-வது தெருவையும், மாதா கோவில் தெருவையும் இணைக்கும் வகையில் 1.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாலம், அம்பத்தூரில் வார்டு-81 மற்றும் 85-க்குட்பட்ட ரெயில்வே சந்திக்கடவிற்கு மாற்றாக 11.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இருசக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் செல்லும் சுரங்கப்பாதை;

    அடையாறு மண்டலம், தொல்காப்பியப் பூங்காவில் பகுதி-1 மற்றும் பகுதி-2 இணைக்கும் வகையில் 9.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொங்கும் ஆகாய நடைபாலம், டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலையின் குறுக்கே இருக்கும் குழாய் கால்வாய்க்கு மாற்றாக 5.07 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மூன்று வழி பெட்டகக் கால்வாய்;

    கிண்டி பாலம் சந்திப்பு முதல் சக்ரபாணி தெரு சந்திப்பு வரை உள்ள ரேஸ் கோர்ஸ் சாலையை 20.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறுவடிமைப்பு செய்யும் பணி, பெசன்ட் நகர் கடற்கரை, காரல் ஸ்மித் நினைவகத்திற்கு அருகில் 1.61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை, தண்டையார்பேட்டை மண்டலம், திருவொற்றியூர் நெடுஞ்சாலை (டோல்கேட் மெட்ரோ நிலையம் முதல் புதுவண்ணாரப்பேட்டை மெட்ரோ நிலையம் வரை) மற்றும் அருணாசலேஷ்வரர் கோவில் தெரு (புது வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையம் முதல் திட்ட சாலை வரை) 64.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறுசீரமைக்கும் பணிகள்;

    விரிவாக்கம் செய்யப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி கோவளம் வடிநிலப் பகுதியில் எம்.1. மற்றும் எம்.2 பாகங்களில் 666.32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, உலகளாவிய சுற்றுச் சூழல் வசதித் திட்டத்தில் 58.33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடப்பாக்கம் ஏரியின் சுற்றுச்சூழல் அமைப்பினை மறுசீரமைக்கும் பணி;


    பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 1 முதல் 15 வரை 259.03 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 364.63 கி.மீ. நீளத்திலான 2,089 சாலைகள் அமைக்கும் பணி, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும நிதியில், மாதவரம் மண்டலத்தில் 38.81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சி.எம்.டி.ஏ. கனரக மற்றும் இலகுரக வாகன நிறுத்த முனையம், சாலைகள் மற்றும் பல்நோக்குக் கட்டடங்கள் மேம்படுத்தும் பணி, தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட புலியூர் கால்வாய் (ட்ரஸ்ட்புரம் கால்வாய்) 16.86 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி; என மொத்தம் 1153.27 கோடி ரூபாய் மதிப்பிலான 19 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    சேலம் மாநகராட்சியில் 5.61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், 4.95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 பொருள் மீட்பு வசதி மையங்கள், 11.07 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமணி முத்தாறு கடைமடை கால்வாய் மறுசீரமைப்பு பணி, திருச்செங்கோடு நகராட்சியில் 4.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய வணிக வளாகம், தாரமங்கலம் நகராட்சியில் 9.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம்;

    என மொத்தம் 35.72 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு காலனியில் 68-வது தெருவில் உள்ள மாநகராட்சி பூங்காவில் 3 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 2 மில்லியன் லிட்டர் கொள்ளவு கொண்ட புதிய குடிநீர் கீழ்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுமானப் பணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாகப் பொறியாளர்களின் களப்பணிக்காக 1 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவிலான 10 புதிய வாகனங்கள் மற்றும் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் 1 முதல் 15 மண்டலங்களின் பயன்பாட்டிற்காக 28 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவிலான 58 கழிவுநீரகற்று வாகனங்கள், என மொத்தம் 68 வாகனங்களின் சேவைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    திருப்பெரும்புதூர், மாமல்லபுரம் மற்றும் திருவையாறு ஆகிய 3 புதிய நகராட்சிகளை அமைத்துரு வாக்குவதற்கான உத்தேச ஆணைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக நகராட்சி நிருவாக இயக்குநரகத்தின் சார்பில் தெரிவு செய்யப்பட்டுள்ள 29 நபர்களுக்கும், பேரூராட்சிகள் இயக்குநரகத்தின் சார்பில் தெரிவு செய்யப்பட்டுள்ள 18 நபர்களுக்கும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் தெரிவு செய்யப்பட்டுள்ள 97 நபர்களுக்கும், என மொத்தம் 144 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    மேலும், பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை வழங்கிடும் விதமாக, நகராட்சி நிருவாக இயக்குநகரத்தின் சார்பில் 20 நபர்களுக்கும், பேரூராட்சிகள் இயக்குநர கத்தின் சார்பில் 3 நபர்களுக்கும், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் 4 நபர்களுக்கும், என மொத்தம் 27 நபர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×