என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
கிறிஸ்துமஸ் பண்டிகை: எடப்பாடி பழனிசாமி - தலைவர்கள் வாழ்த்து
- அ.தி.மு.க. ஆட்சி காலங்களில் கிறிஸ்தவப் பெருமக்கள் பயனடையும் வகையில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
- இயேசுபிரான் விரும்பியதைப் போல, இஸ்ரேல்-பாலஸ்தீனத்தில் தொடங்கி உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ வேண்டும்.
சென்னை:
கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை உலகமெங்கும் கொண்டாப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி:-
கவலைகள் மறந்து, இன்பம் புகுந்து, நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு கிறிஸ்துமஸ் திருநாளை கொண்டாடி மகிழும் என தருமை கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
அ.தி.மு.க. ஆட்சி காலங்களில் கிறிஸ்தவப் பெருமக்கள் பயனடையும் வகையில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அ.தி.மு.க. சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக என்றென்றும் திகழும் என்பதை மட்டும் இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
'நாம் மற்றவரிடம் எதை எதிர்பார்க்கிறோமோ, அதையே மற்றவர்களுக்கு நாம் செய்ய வேண்டும்' என்ற இயேசுபிரானின் போதனையை மனதில் கொண்டு அனைவரையும் சமமாக பாவித்து அன்பு செலுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:-
கிறிஸ்துவ சமுதாயத்தைப் பொறுத்தவரை மக்களுக்கு சேவை செய்வது தான் முதன்மை நோக்கமாகும். ஆனால், அதற்கு மாறாக மக்களை மதமாற்றம் செய்கிறார்கள் என்று அவதூறு பிரசாரம் செய்யப்படுகிறது. ஆனால், 1951-ல் மக்கள்தொகை கணக்கெடுப்பில் கிறிஸ்துவ சமுதாயத்தினர் 2.5 சதவிகிதம் இருந்ததை விட 2023-ல் மக்கள்தொகை பெருகவில்லை என்பதை புள்ளி விவரங்கள் எடுத்துக் கூறுகின்றன.
எனவே, மிகச் சிறந்த மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்துவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இயேசு கிறிஸ்து பிறந்த இந்நாளில் அனைவரது வாழ்விலும் இனிமை தங்கவும், மகிழ்ச்சி பெருகவும், செல்வம் சேரவும், ஆரோக்கியம் கூடவும், எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டும் என்று வேண்டுகிறேன். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்:-
கிறிஸ்தவத்தை, உலகெங்கும் வாழும் மக்களுக்கு அருட்கொடையாக வழங்கியுள்ள மகத்தான பேராளுமையே இயேசு பெருமான் ஆவார். அவரை நினைவு கூர்ந்து இந்நாளில் அவருக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உள்ளது. அதாவது, உலகமெங்கும் சகோதரத்துவத்தை மென்மேலும் வளர்த்தெடுக்கவும் வலுப்படுத்தவும் இந்த நன்னாளில் யாவரும் உறுதியேற்போம். சகோதரத்துவத்தைப் போற்றும் யாவருக்கும் எனது மனம் நிறைந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.
காங்கிரஸ் சட்டசபை தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.:-
மானுடர்களுக்கு இயேசு பிரான் அருளிய அற்புதமான போதனைகளை கடைபிடித்து நாட்டில் அமைதி, சமாதானம் மேலோங்கிடவும், வன்முறை ஒழிந்திடவும், அனைவரிடையேயும் அன்பு, பாசம், கருணை, மகிழ்ச்சி பொங்கிடவும், சாதி, மத, இன வேற்றுமைகளை மறந்து நல்லிணக்கம் பேணிக்காப்பதற்கு இந்நன்நாளில் அனைவரும் உறுதியேற்போம் என்று அனைவருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-
இயேசுபிரான் விரும்பியதைப் போல, இஸ்ரேல்-பாலஸ்தீனத்தில் தொடங்கி உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ வேண்டும். போட்டி பொறாமைகள் அகல வேண்டும். ஏழைகளின் துயரங்கள் நீங்க வேண்டும்; உலகம் வளம் பெற வேண்டும். அதை நனவாக்க உழைப்போம் என இயேசுபிரான் அவதரித்த இந்த நன்நாளில் உறுதி ஏற்போம் என்று கூறி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்:-
பணமும், பொருளும் இல்லாதவர்கள் அன்பையும், கருணையையும் மற்றவர்கள் மீது பொழிவோம். அதன் மூலம் இயேசு விரும்பிய அமைதி, கருணை, வளம், ஒற்றுமை, மகிழ்ச்சி, சகோதரத்துவம், நல்லிணக்கம் உள்ளிட்ட அனைத்தும் பெருகுவதற்காக உழைக்க உறுதி ஏற்போம் என்று கூறி மீண்டும் ஒருமுறை கிறித்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உயர்ந்த நற்பண்புகளை உலகில் விதைத்த இயேசு கிறிஸ்து பிறந்த இப்புனித நாளில் கிறிஸ்துவ பெருமக்கள் அனைவரின் வாழ்விலும் வளமும் நலமும் பெருகிட உளமாற வாழ்த்துகிறேன். அனைத்து கிறிஸ்துவ சகோதர, சகோதரிகளுக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
கிறிஸ்து இயேசு பிறந்த இந்த நன்னாளில் அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள். அனைவரும் அன்பினை பகிர்ந்து இந்த நாளை குதூகலத்துடன் கொண்டாடுவோம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் என்பது மத பேதமின்றி அனைவருக்கும் ஒற்றுமையுடன் கொண்டாடும் பண்டிகை. இந்த ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்க வேண்டும். அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-
வரலாறு காணாத பெருமழையால் பெருந்துயரம் கண்ட மக்களின் வாழ்வியல் சூழல் மாறி, இயல்புநிலை திரும்பவும், மகிழ்ச்சி பெருகவும் இனிய கிறிஸ்துமஸ் தினத்தில் எல்லாம் வல்ல இயேசுகிறிஸ்து ஆசிர்வதிக்கட்டும். உலகெங்கும் வாழும் கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் டாக்டர் தேவநாதன் யாதவ்:-
பிறரிடம் நாம் அன்பை எதிர்ப்பார்ப்பதுபோல் நாமும் பிறரிடமும் அன்பு செலுத்த வேண்டும் என்பதே இயேசு பிரானின் கட்டளை. இதன் அடிப்படை மகத்துவத்துவத்தை உணர்ந்து அனைத்து மத மக்களின் ஆதரவோடு பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் நல்லாட்சி நடைபெற்று வருகிறது. இயேசு கிறிஸ்து பிறந்த இந்நன்னாளில் அனைவரிடத்தும் அன்பை போதிப்போம், ஆன்மீகத்தை உணர்த்துவோம்.
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்:-
அனைவரிடமும் அன்பு காட்டி, கருணையின் வடிவமாய் விளங்கிய இயேசுபிரான் பிறந்த இந்த திருநாளில் அவர் போதித்த அன்பு, எளிமை, கருணை போன்ற உயரிய குணங்களை மக்கள் அனைவரும் பின்பற்றி சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை எனது கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன்:-
இயேசுபிரான் போதித்த அன்பு, பாவ மன்னிப்பு போன்ற அகிம்சை கொள்கைகளை கடைபிடித்து சகோதரத்துவம், ஒற்றுமையுடன் வாழ்தல் போன்று உயரிய லட்சியங்களோடு நாம் அனைவரும் வாழக்கற்றுக்கொள்ள வேண்டும். மனிதநேயம் தழைக்கவும், அன்பு, பாசம், விட்டுக் கொடுத்தல் போன்ற நற்பண்புகள் வளரவும் நாம் அனைவரும் மனித உணர்வோடு ஒன்றுபட்டு வாழ இந்நன்னாளில் உறுதியேற்போம்.
தொழில் அதிபர் வி.ஜி. சந்தோசம்:-
இயற்கையின் சீற்றத்திற்கு ஆளாகி புயல், பெருவெள்ளம், உடமையிழப்பு உயிரிழப்பு ஆகியவற்றைச் சந்திக்கும் அவலங்கள் மக்களுக்கு நேரிட்டன! உலக ரட்சகரும் தேவமைந்தனுமான இயேசு கிறிஸ்து பிறந்த நாளில், துயருற்ற மக்கள் யாவரும் துயர்நீங்கி, அமைதியும் ஆறுதலும் பெற்று இயல்பு வாழ்க்கை வாழ நாம் அனைவரும் அவரைத் துதித்து, இனி வரும் காலங்கள் இனிதாக அமைந்திட வேண்டி நிற்போம்! அனைவருக்கும் எனது அன்பு கனிந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.
இயேசுபிரான் இவ்வுலகில் தேவகுமாரனாக அவதரித்த திருநாள்தான் கிறிஸ்துமஸ் நன்நாள். இந்நாளில் பிரார்த்தனைகள் செய்யப்படுவதோடு அவர்களுக்கு அன்னதானமும், பல்வேறு கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் சார்பில் வழங்கப்படுகின்றன. உலகமெங்கிலும் பெரும்பாலான நாடுகளில் கிறிஸ்துமஸ் திருநாள் உற்சாகத்தோடும் பக்தி பெருக்கோடும் கொண்டாடப்படுகின்றது. இந்நாளில் நம்நாட்டில் உள்ள அனைத்து கிறிஸ்தவ பெருமக்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் கோகுல மக்கள் கட்சி நிறுவன தலைவர் எம்.வி.சேகர், அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் மாநில பொறுப்பாளர் முத்தையா மாரியப்பன், இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர், நிலதரகர்கள் சங்க தலைவர் வி.என்.கண்ணன், பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர், இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து, இந்திய கிறிஸ்தவ மதச்சார்பற்ற கட்சி நிறுவனர் டாக்டர் எம்.எஸ்.மார்டீன் ஆகியோர் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்