search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கிறிஸ்தவ ஆலயத்தில் நுழைந்தபோது மோதல்: அண்ணாமலை மீது 3 பிரிவுகளில் வழக்கு
    X

    கிறிஸ்தவ ஆலயத்தில் நுழைந்தபோது மோதல்: அண்ணாமலை மீது 3 பிரிவுகளில் வழக்கு

    • புனித லூர்து அன்னை மாதா ஆலயத்தில் வழிபாடு செய்வதற்காக அண்ணாமலை சென்றார்.
    • சம்பவத்தின் போது அண்ணாமலையும் வாலிபர்களுடன் காட்டமாக பேசினார்.

    சென்னை:

    பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை 'என் மண்... என் மக்கள்' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 8-ந் தேதி அவர் நடைபயணத்தில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது பொம்மிடி என்ற பகுதியில் பி.பள்ளி பட்டியில் உள்ள புனித லூர்து அன்னை மாதா ஆலயத்தில் வழிபாடு செய்வதற்காக அண்ணாமலை சென்றார்.

    அவரை உள்ளே விடாமல் வாலிபர்கள் சிலர் வழி மறித்து தகராறு செய்தனர். மணிப்பூர் சம்பவத்தை சுட்டிக்காட்டி, நீங்கள் உள்ளே செல்லக்கூடாது என்றும், அன்னையின் சிலைக்கு மாலை அணி வித்து வணங்கக்கூடாது என்றும் கூறி எதிர்ப்பு தெரிவித்த வாலிபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து பொம்மிடி போலீசார் சம்பவ இடத் துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அண்ணாமலையுடன் தகராறு செய்து மோதலில் ஈடுபட்ட வாலிபர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தின் போது அண்ணாமலையும் வாலிபர்களுடன் காட்டமாக பேசினார்.

    மணிப்பூர் சம்பவத்தை ஏன் இங்கு தொடர்புபடுத்தி பேசுகிறீர்கள். அது வேறு, இது வேறு என்று அவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் போலீசார் தலையிட்டதை தொடர்ந்து வாலிபர்கள் கலைந்து சென்றனர்.

    பின்னர் அண்ணாமலை கிறிஸ்தவ ஆலயத்துக்குள் சென்று வழிபட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கார்த்திக் என்பவர் பொம்மிடி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்திய தண்டனைச் சட்டம் 153-ஏ சாதி மத உணர்வை தூண்டும் வகையில் செயல்பட்டு பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், 504-அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல், 505 (2), வழிபாட்டு தலங்களில் வெறுப்புணர்வோடு நடந்து கொள்ளுதல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×