search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவை கார் வெடிப்பு சம்பவம்- மேலும் 5 பேரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை
    X

    கோவை கார் வெடிப்பு சம்பவம்- மேலும் 5 பேரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை

    • கடந்த வாரம் தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் 43 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
    • ஏற்கனவே கைதான 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    கோவை:

    கோவை கோட்டை மேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த மாதம் 23-ந் தேதி கார் வெடித்து முபின் என்பவர் பலியானார்.

    கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி கோவையில் பயங்கர நாசவேலைக்கு சதி செய்த அவர் அதே சதியில் சிக்கி பலியானார்.

    இந்த சம்பவம் தொடர்பாக முபின் கூட்டாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தற்போது கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பலியான முபின் மற்றும் கைதான 6 பேருக்கு யாராவது பண உதவி, பொருள் உதவி செய்து இருக்கலாம் என என்.ஐ.ஏ. அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.

    இதற்காக முபின் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் நெருக்கத்தில் இருந்தவர்களை தீவிரமாக கண்காணித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் ஐ.எஸ். ஆதரவு எண்ணம் கொண்டவர்களையும் அவர்கள் தீவிரமாக கண்காணிக்கிறார்கள்.

    இதுதொடர்பாக கடந்த வாரம் தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் 43 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். நேற்றுமுன்தினம் சென்னையில் 5 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் செல்போன், லேப்-டாப் உள்ளிட்ட ஐ.எஸ். தொடர்புடைய சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

    அதன் அடிப்படையில் தற்போது விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதன் ஒரு கட்டமாக கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் செயல்படும் என்.ஐ.ஏ. அலுவலகத்துக்கு கோவையைச் சேர்ந்த 5 பேர் வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக பல மணி நேரம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

    அவர்களுக்கும், கார் வெடிப்பு சம்பவத்துக்கும் தொடர்பு உண்டா என்ற கோணத்தில் விசாரணை நடந்தது. விசாரணை முடிவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்வர்.

    இதற்கிடையே ஏற்கனவே கைதான 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×