search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காமராஜர் ஆட்சி முறை என்ற தலைப்பில் கருத்தரங்கம்- தமிழகம் முழுவதும் நடத்த காங்கிரஸ் ஏற்பாடு

    • தமிழகத்தின் முதல்-அமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகாலம் ஆட்சி செய்தார்.
    • படிக்காத காமராஜர், அனைவரையும் படிக்க வைத்து புரட்சி செய்தார்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தின் முதல்-அமைச்சராக இருந்த ஒன்பதரை ஆண்டு கால ஆட்சியில் தான் கல்வியில் புரட்சி நடந்தது. மதிய உணவுத்திட்டம், தொழில் வளர்ச்சி, மின்துறையில் சாதனைகள், பாசனத் திட்டங்கள், நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள், மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் பஞ்சாயத்து ராஜ் போன்ற பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் அவரது ஆட்சிக் காலத்தில் தான் நிறைவேற்றப்பட்டது. அதனால் தான் காமராஜர் ஆட்சிக் காலத்தை தமிழகத்தின் பொற்காலம் என்று வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்து பாராட்டுகிறார்கள்.

    சுதந்திர இந்தியாவின் தொடக்க காலத்தில் 1954 முதல் 1964 வரை முதல்-அமைச்சராக இருந்து ஆண்டுக்கு ரூபாய் 100 கோடிக்கும் குறைவான பட்ஜெட் சமர்ப்பித்து, இன்றைய நவீன தமிழகத்திற்கு அடித்தளம் அமைக்கிற வகையில் காமராஜரின் ஆட்சிமுறை இருந்தது. அவரது ஆட்சி முறையின் காரணமாகத் தான் தமிழகம் அனைத்து நிலைகளிலும் வளர்ச்சிப் பாதையில் பீடுநடை போட்டது.

    எனவே, பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாளில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் அன்றைய தினத்தில் 'காமராஜர் ஆட்சி முறை' என்கிற தலைப்பில் கருத்தரங்குகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதே போல, பாராளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் முன்னின்று இத்தகைய கருத்தரங்குகளை நடத்த இருக்கிறார்கள்.

    ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முந்தைய காமராஜர் ஆட்சியின் சாதனைகளையும், அவருடைய அணுகுமுறைகளையும் இன்றைய இளைய சமுதாயத்தினர் அறிந்து கொள்கிற வகையில் அந்தக் கருத்தரங்கம் அமைய இருக்கிறது. மேலும், காமராஜரின் பிறந்தநாளன்று ஏழை, எளிய மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்குகிற வகையிலும் நிகழ்ச்சிகள் அமைய உள்ளன.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×