search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    புதிய தலைவர் விவகாரம்- காங்கிரஸ் தலைவர் கார்கேவுடன் கே.எஸ்.அழகிரி சந்திப்பு
    X

    புதிய தலைவர் விவகாரம்- காங்கிரஸ் தலைவர் கார்கேவுடன் கே.எஸ்.அழகிரி சந்திப்பு

    • அழகிரியின் பதவிக்காலத்தில் கட்சிக்குள் எந்த பிரச்சினையும் இல்லை.
    • ஜோதிமணியை தலைவராக்கலாம் என்பது ராகுலின் விருப்பமாக உள்ளது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல்காந்தி, வேணுகோபால் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். தலைவர் பதவிக்கு ஜோதிமணி எம்.பி., செல்லக்குமார் எம்.பி., கார்த்தி சிதம்பரம், முன்னாள் எம்.பி., பி.விசுவநாதன் ஆகியோர் தீவிரமாக முயற்சித்து வருகிறார்கள்.

    டெல்லி சென்றுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று இரவு அகில இந்திய தலைவர் கார்கேவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அரசியல் நிலவரங்கள் பற்றி பேசியதாக கூறப்படுகிறது.

    அழகிரி ஆதரவாளர்கள் கூறும்போது, 'அழகிரியின் பதவிக்காலத்தில் கட்சிக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. சட்டமன்ற, பாராளுமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் காங்கிரஸ் சிறப்பான வெற்றி பெற்றுள்ளது.

    எனவே வருகிற பாராளுமன்ற தேர்தல் முடியும் வரை பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை மேலிடத்தில் தெரிவித்துள்ளார். மேலிடமும் தேர்தல் முடியும் வரை தலைவர் மாற்றத்தை செயல்படுத்த விரும்பாது என்கிறார்கள்.

    கடந்த 1½ ஆண்டுகளாகவே தலைவர் மாற்றம் என்று பேச்சு அடிபடுவதும் பின்னர் அப்படியே அமுங்கி விடுவதுமாக இருக்கிறது.

    இதுதொடர்பாக கட்சி மூத்த தலைவர்கள் கூறும்போது, 'தலைவராக யாரை தேர்வு செய்வது என்பதில் தான் குழப்பம் நீடிக்கிறது. ஜோதிமணியை தலைவராக்கலாம் என்பது ராகுலின் விருப்பமாக உள்ளது.

    ஆனால் திடீரென்று ஒரு பெண் தலைவரை நியமித்து 'சக்சஸ்' பண்ண முடியுமா? என்ற எண்ணம் டெல்லி தலைவர்களிடம் உள்ளது. எனவே அவர்களுக்கு விருப்பம் இல்லை. மேலும் கூட்டணி கட்சியான தி.மு.க.வுடன் அவருக்கு நல்லுறவு இல்லை என்பதும் முக்கிய காரணம் என்கிறார்கள்.

    எனவே யாரை தலைவராக தேர்வு செய்வது என்பதில் டெல்லி மேலிடமும் முடிவெடுக்க முடியாமல் உள்ளது. இன்றும் இதுதொடர்பாக ராகுல்-கார்கே ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

    தலைவர் பதவிக்கு குறி வைத்து டெல்லியில் முகாமிட்டுள்ள அகில இந்திய செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான விசுவநாதன் கூறியதாவது:-

    நானும் தலைவர் பதவிக்கு முயற்சிப்பது உண்மைதான். இதுதொடர்பாக எனது விருப்பத்தை கார்கேவிடம் தெரிவித்துள்ளேன். கடந்த 1982-க்கு பிறகு தமிழக காங்கிரசுக்கு தலித்துகள் தலைவராகவில்லை. எனவே இந்த முறை அந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறேன். இதற்கு தமிழக தலைவர்களும் வலுசேர்க்க வேண்டும்.

    மேலும் தலைவர் பதவி விவகாரத்தில் குழப்பம் நீடிப்பது சரியல்ல. புதிய தலைவரா? அல்லது தற்போதைய தலைவருக்கு பதவி நீட்டிப்பா? எதுவாக இருந்தாலும் உடனே முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்ற எனது கருத்தை தெரிவித்துள்ளேன்' என்றார்.

    கார்கே, ராகுல் இருவரும் டெல்லியில் கட்சி விவகாரங்கள் பற்றி ஆலோசித்து வருவதால் இந்த வார இறுதிக்குள் தங்கள் முடிவை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×